No icon

ஸ்பெயின் சாலமன்கா பேராலயத்தில்  தொடங்கப்பட்ட கலை கண்காட்சியில்

தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட இயேசுவின் உடல்

கடவுளின் அன்பு இயேசுவில் மனித உருவெடுத்து வந்ததையும், நமது மீட்பிற்காக குற்றவாளி போல கொடுமையான மரணத்தை ஏற்ற அவரது வாழ்வையும் உணர்த்துவதாக, கலைஞர்களால் அண்மையில் தத்ரூபமாக உருவாக்கப்பட்ட இயேசுவின் உடல் உள்ளது என்று ஸ்பெயின் ஆயர் பேரருள்திரு ஜோஸ் லூயிஸ் ரெத்தானா அவர்கள் கூறியுள்ளார். அக்டோபர் 13 ஆம் தேதி வியாழன் ஸ்பெயின் சாலமன்கா பேராலயத்தில்  தொடங்கப்பட்ட கலை கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த, தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட  இயேசுவின் இறந்த உடலைப் பார்த்தபோது பேரருள்திரு ஜோஸ் லூயிஸ் ரெத்தானா இவ்வாறு கூறியுள்ளார்.

மறைபொருள் மனிதராக பிறப்பெடுத்து மனித குல மீட்பிற்காக பாடுகள் பட்டு இறந்தார் என்பதையும், இயேசுவின் துன்பம் எத்தகையது, அவரது மரணம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதையும் உணர்வுப்பூர்வமாக இக்கலைப்படைப்பு  எடுத்துரைக்கின்றது எனவும் பேரருள்திரு  ரெத்தானா  எடுத்துரைத்தார்.

75 கிலோ எடையுடன் இரப்பர் மரப்பால் மற்றும் சிலிக்கான் கொண்டு வடிவமைக்கப்பட்ட இவ்வுடல் இயேசுவின் இறந்த உடலைப் போர்த்தியிருந்த புனித துணியின் குறிப்புக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது எனவும் இந்த முயற்சி 15 ஆண்டு உழைப்பிற்கான வெற்றி என்றும் கலைக்கண்காட்சியின் கண்காணிப்பாளரான ஸ்பெயின் கலைஞர் அல்வாரோ பிளாங்கோ கூறியுள்ளார்.

மறைபொருள் மனிதன்

3 பரிமாண வடிவில் உருவாக்கப்பட்ட இப்படைப்பு, இயேசுவின் காயங்கள், இரத்தம், உடல் அளவுகள் போன்றவை, புனித துணி குறிப்பிடும் வரலாறு மற்றும் அறிவியல் தகவல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது எனவும், 600 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இக்கலைக் கண்காட்சி டிசம்பர் மாதம்வரை ஸ்பெயினிலும் அதன் பின் மற்ற ஐரோப்பா நாடுகளிலும் நடத்தப்படும் என்றும் கலைஞர் அல்வாரோ பிளாங்கோ கூறியுள்ளார்.

நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியின் முதல் பகுதியில் இயேசு காலத்து வரலாற்று பொருட்களும், இரண்டாம் பகுதியில் புனித துணி குறிப்பிடும் தகவல்கள் பற்றிய காணொளியும் மூன்றாவது பகுதியில் இயேசுவின் முகங்கள் கொண்ட படைப்புக்களும், நான்காவது பகுதியில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட  இயேசுவின் இறந்த உடலும் உள்ளன.

டிசம்பர் மாதம்வரை ஸ்பெயினில் நடைபெறும் இக்கண்காட்சி, 2023 ஆம் ஆண்டில் உலக இளையோர் நாளை முன்னிட்டு லிஸ்பனிலும், 2025 ஆம் ஆண்டில் ஜூபிலி ஆண்டை முன்னிட்டு உரோமிலும் நடைபெறும் எனவும், மேலும் உலகின் 5 கண்டங்களிலும் இக்கண்காட்சி நடைபெற உள்ளதாகவும் இக்கலைக்கண்காட்சி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Comment