No icon

இறைவேண்டல்

புதிதாகப் பிறந்த திருஅவையில் இறைவேண்டல்

இறைவேண்டல் குறித்த தன் மறைக்கல்வித் தொடரில், நவம்பர் 25 ஆம் தேதி புதனன்று, ’புதிதாக பிறந்த திருஅவையில், இறைவேண்டல் எத்தகைய ஊக்கத்தை வழங்கியது’ என்பது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார். முதலில், திருத்தூதர் பணி நூலிலிருந்து (4: 23-24.29.31) ஒரு பகுதி, பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டபின், திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வு தொடர்ந்தது.

மறைக்கல்வியுரை

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இறைவேண்டல் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று, துவக்ககாலக் கிறிஸ்தவர்களின் மறைப்பணி நடவடிக்கைகளில் உறுதியான இறைவேண்டல் எவ்வாறு சக்திவாய்ந்த ஒன்றாக இருந்தது என்பது குறித்து நோக்குவோம். ’அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதிலும் இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்’ (தி.ப. 2:42), என்று ஆதிகால கிறிஸ்தவர்களைப்பற்றி கூறுகிறார் புனித லூக்கா. இன்றும், திருஅவை வாழ்வின் மையமாக இருப்பது, இறைவேண்டலே. இறைவேண்டலே, நம்மை கிறிஸ்துவோடு இணைத்து, நற்செய்திக்கு சான்று பகர்வதை நம்மில் தூண்டி, உதவித்தேவைப்படுவோருக்கு பிறரன்பு செயல்களை ஆற்ற நமக்கு ஊக்கமளிக்கிறது. இறைவேண்டல் வழியே, நாம், உயிர்த்த இயேசுவின் வாழ்வை அனுபவிக்கிறோம். உயிர்த்த இயேசு, தூய ஆவியாரின் வல்லமையில் இவ்வுலகில் தொடர்ந்து குடியிருக்கிறார், குறிப்பாக, திருஅவையின் படிப்பினைகளிலும், அருளடையாளங்களிலும், ஒப்புரவு, அமைதி, நீதி என்பவற்றை உள்ளடக்கிய இறையரசை முன்னெடுத்துச்செல்லும் நம் முயற்சிகளிலும் இயேசு வாழ்ந்துகொண்டிருக்கிறார். கிறிஸ்துவின் நினைவை திருஅவையில் உயிரோட்டமாக வைத்திருப்பவர் தூய ஆவியார் என்கிறது திருஅவையின் மறைக்கல்வி.

இக்காலத்திலும், நற்செய்திக்காக, துன்பம் நிறை பயணங்களையும், ஆபத்துக்களையும், சித்ரவதைகளையும் எதிர்கொள்ளும் அனைத்து மறைப்பணியாளர்களுக்கும்,  மனவுறுதியையும், கொள்கைப்பிடிப்பையும் வழங்குபவராக உள்ளார், தூய ஆவியார். துவக்ககால கிறிஸ்தவர்களைப்போல், நாமும், தனிப்பட்ட, மற்றும், குழு இறைவேண்டல்களை வளர்ப்பதன் வழியாக, அன்பின் மூவொரு கடவுளுடன் மேலும் நெருங்கிய ஒன்றிப்பில் இருந்து, அதே அன்பை நம்மைச் சுற்றியுள்ள உலகிற்கு எடுத்துச் செல்வதற்கு கற்றுக் கொள்வோமாக.

இவ்வாறு, தன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருவருகைக்காலப் பயணத்தைத் தொடர, நம்மை தயாரித்துவரும் இவ்வேளையில், இயேசு கிறிஸ்துவின் ஒளி, நம் பாதைகளை ஒளிர்வித்து, நம் இதயத்தின் அனைத்து இருளையும் அகற்றுவதாக என வாழ்த்தினார். இறுதியில், முதியோர், இளையோர், நோயுற்றோர், புதுமணத் தம்பதியர் என அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் தன் வாழ்த்துக்களை வெளியிட்டு, அனைவருக்கும், இறையாசீரை வழங்கினார்.

Comment