No icon

திருத்தந்தை

செபம் மற்றும் தன்னறிவு சுதந்திரத்தில் வளர உதவுகின்றன

அக்டோபர் 05 ஆம் தேதி, புதன்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பயணிகளுக்கு, தெளிந்துதேர்தல் என்ற கருப்பொருளில், தன்னையே அறிதல் குறித்து எடுத்துரைத்தார். இறைவார்த்தை (சீஞா 17:1.6-7)  வாசிக்கப்பட்ட பிறகு திருத்தந்தை இதனைத் தொடர்ந்தார்.

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதர, சகோதரிகளே! கடந்த வார நம் மறைக்கல்வியுரையில், தெளிந்துதேர்தலுக்கு, இறைவேண்டல் இன்றியமையாத கூறாகஅதற்கு கடவுளிடம் நெருக்கம் மற்றும் அவரில் நம்பிக்கை அவசியம் என்பது குறித்து சிந்தித்தோம். நல்லதொரு தெளிந்துதேர்தலுக்கு அதை ஏறக்குறைய முழுமைபெறச் செய்வதாக இருக்கின்ற தன்னையே அறிதலும் தேவைப்படுகின்றது என்பது பற்றி இன்று எடுத்துரைக்க விரும்புகிறேன். அது, உண்மையிலேயே நினைவு, கூர்மதி, விருப்பம், பாசம் ஆகிய மனிதத் திறமைகளை உள்ளடக்கியுள்ளது. நம்மையே நாம் போதுமான அளவு அறியாததால்தான் தெளிந்துதேர்தலை எவ்வாறு செய்வது என்பதை பலநேரங்களில் அறியாதிருக்கிறோம்.

அதனால் நமது உண்மையான தேவை என்ன என்பதையும் தெரியாதிருக்கிறோம். நம்மையே நாம் அறிவது எளிதானதல்ல. அதற்கு, நம் இதயத்தின் உள்ளாழத்தில் நுழையவேண்டும். இதற்கு நேர்மையும் பொறுமையும் தேவைப்படுகின்றன. தன்னையே அறிதல் என்பது, தன்னிலே கடவுள் வழங்கும் அருளின் கனியாகும். அவ்வருள், நம் பொய்த்தோற்றங்களைக் கைவிடவும், உண்மையிலேயே நாம் யார் என்பதைப் புரிந்துகொள்ளவும், உண்மையான மகிழ்வைத் தருகின்ற காரியங்களை ஏற்றுக்கொள்ளவும் நம்மை இட்டுச்செல்கின்றது. அதன் பயனாக, கடவுளின் திருவுளத்திற்குக் கீழ்ப்படிவதில், ஆழ்மனதில் மறைந்துள்ள நம் உண்மையான இயல்புக்கும், நிலையான ஆன்மீக மகிழ்ச்சி மற்றும் நிறைவுக்கு நம்மை இட்டுச்செல்கின்ற பாதைகளுக்கும் வாயிலைத் திறக்கும்கடவுச்சொற்களைகற்றுக்கொள்கிறோம். செபச்சூழலில் கிடைக்கின்ற இத்தகைய உள்தூண்டுதல், நமக்குள்ளே நாம் செல்வதற்கும், உண்மையான தெளிந்துதேர்தலுக்கும் பெரும் உதவியாக இருக்கின்றது. இதுவே இரவு படுக்கைக்குச் செல்வதற்குமுன் ஆன்ம பரிசோதனை செய்யும் பாரம்பரியப் பழக்கவழக்கமாகும். தினசரி இறைவேண்டல் மற்றும் தன்னையே அறிவதன் வழியாக, நமது வாழ்வில் ஆண்டவரின் திட்டத்தைத் தெளிந்துதேர்வு செய்ய அதிகமதிகமாய் தயாராக இருப்போம். நம் இறைத்தந்தையின் அன்புப் பிள்ளைகளாக, நம் மாண்பு மற்றும் சுதந்திரத்தை மேலும் அதிகமாக உணர்ந்து போற்றுவோம்.

Comment