No icon

தலையங்கம்

நாம் அரசியல்படுத்தப்பட வேண்டும்!

தற்போதைய இந்தியாவில் ஈராயிரம் ஆண்டுகள் பாரம்பரியமிக்க (ஒரே) சமயம் என்றால் அது கிறிஸ்தவம் மட்டுந்தான். இயேசுவின் சீடர் புனித தோமா நற்செய்தியை அறிவித்து, திருமுழுக்குக் கொடுத்து, தான் இம்மண்ணில் வாழ்ந்ததற்கான புனிதமிகு அடையாளங்களையும் அற்புதங்களையும் சாட்சியமாக்கி, காலத்தால் அழியாத வரலாற்று ஆவணமாக தன் இருப்பையும் கிறிஸ்தவத்தையும் விட்டுச் சென்றுள்ளார். அதன் பிறகு, காலனியாதிக்கத்தின்போது பதினைந்தாம் நூற்றாண்டிற்குப்  பிறகு மீண்டும்தளிர்விட்டுபூத்து குலுங்கி, காய்த்து கனி தந்து குமரி முதல் காஷ்மீர் வரை நீக்கமற நிறைந்திருக்கிறது கிறிஸ்தவம். அப்படிப்பட்ட கிறிஸ்தவத்தை அரசியல் தளத்திலும் சமூகத் தளத்திலும் அடையாளப்படுத்தப்படவேண்டிய காலக் கட்டம் வந்துவிட்டது.

சோஷியல் இன்ஜினியரிங் என்கிற சமூக கட்டமைப்புக்கான தளத்தில் இந்தியக் கிறிஸ்தவத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத் தருணம் வந்துவிட்டது. ஆங்கிலேய, போர்ச்சுகீஷிய, டச்சு, பிரெஞ்ச் காலனியாதிக்கத்தினுடைய கிறிஸ்தவ நிழலில் இளைப்பாறி, தம்மைத்தாமே ஆசுவாசப்படுத்தி, கல்வியிலும் மருத்துவத்திலும் விடுதலைப்பணியிலும் முன்னோடியாக விளங்கி, எல்லாருக்கும் வழிகாட்டிய இந்தியக் கிறிஸ்தவம், இன்று எழுச்சி பெற வேண்டியத் தருணம் வந்துவிட்டது. இதுவே நேரம்! இதுவே காலம்!

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிடம் போன்ற பேரியக்கங்களில் விழுமியங்களால் தானைத் தலைவர்களாக ஒளிர்ந்த கிறிஸ்தவத் தலைவர்கள், இன்றைய மதவாதச் சூழலில் சிறுபான்மையினராக, பொதுத்தளத்தில் முன்னிலைப்படுத்த முடியாத அவல நிலை உள்ளது  என்பது கண்கூடு.

கொல்கொத்தாவின் புனித அன்னை தெரசாவின் வீரத்துவம் நிறைந்த சாட்சிய வாழ்வும், அமைதிக்கான நோபல் பரிசின் அங்கீகாரமும், இந்திய சேவை மனப்பான்மையின் உலகளாவிய அன்பின் பணியாளர்கள் சபையின் அங்கீகாரமும், கிறிஸ்தவர்களுக்கு எழுச்சியையும் அடையாளத்தையும் தந்தன. ஆனால், தேசியக் கொடி போர்த்தப்பட்டு அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட அவரது உடலுடன் இந்தியக் கிறிஸ்தவத்தின் எழுச்சியும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது என்றே தோன்றுகிறது.

திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுலின் இந்திய வருகை இந்தியக் கத்தோலிக்க கிறிஸ்தவத்திற்கான விளக்குமுகமாக அமைந்தது. வடகிழக்கிலும் மேற்கு கடற்கரையோரமாகவும் கிழக்கு கடற்கரையோரமாகவும் தெற்கிலும் ஒரு தீபகற்பத்தைப்போல கட்டமைக்கப்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவமும் வட இந்திய திரு அவை (சிஎன்ஐ)- தென் இந்தியத் திருஅவை (சிஎஸ்ஐ) மற்றும் ஏனைய மிஷனரி சபைகள் இந்தியாவின் வளர்ச்சிக்கும் சமூக எழுச்சிக்கும் செய்துள்ள பங்களிப்பு அளப்பரியது.

கிரகாம் ஸ்டெயின்ஸ், கிறிஸ்துதாஸ், ஸ்டான் சுவாமிகள், இராணி மரியா இவர்களின் மறைச்சாட்சியம் நிறைந்த வாழ்வு கிறிஸ்தவ வாழ்வின் நிலைத்த நறுமணச் சுகந்தம்!. ஆனால், அண்மைக்காலமாக, கிறிஸ்தவத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றும் வேலையை மதப் பெரும்பான்மைவாதம் சிறப்பாகவே செய்து வருகிறது.

சுதந்திரப் போராட்டக் காலங்களில் ஜின்னாவின் முஸ்லீம் லீக்கும் காந்தி-நேருவின் காங்கிரசும் மத ரீதியாக நாட்டைத் துண்டாடிய நிலையில், இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்தது கிறிஸ்தவம் என்பது வரலாற்று உண்மை. சுதந்திரத்திற்கு முன்பும் சரி, சுதந்திரத்திற்குப் பிறகும் சரி கிறிஸ்தவர்களை அரசியல்படுத்துவதில் கிறிஸ்தவத் தலைவர்கள், திரு அவைத் தலைவர்கள் முனைப்புக் காட்டவில்லை. அரசியலை அக்கால திரு அவைத் தலைவர்கள் அந்நியப்படுத்திய காரணத்தினால்தான், அரசியல் கிறிஸ்தவர்களை இக்காலத்தில் அந்நியப்படுத்துகிறது போலும். ஆபிரகாம் மடியில் கிடத்தப்பட்ட இலாசரை ஏக்கத்தோடு பார்த்த செல்வந்தர்களாக கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவத் தலைவர்களும் உள்ளனர். பொதுநிலையினரிலிருந்து தன்னெழுச்சியாக தலைவர்களும் உருவாகவில்லை; உருவானத் தலைவர்களை திரு அவையும் கொண்டாடவில்லை; மேலும் அவர்கள் உருவாக திரு அவைத் தலைவர்களும் உதவவும் இல்லை.

கத்தோலிக்கச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கட்டிட அமைப்புகளாக செயல்பட்டனவே அன்றி, கட்டியெழுப்பும் அமைப்புகளாக வளர்த்தெடுக்கப்படவில்லை. கிரிமி லேயர்களாக உருவான செல்வாக்குமிக்கவர்கள் மட்டுமே திரும்பத் திரும்ப அதிகார மையத்தில் அமரவைக்கப்பட்டு, ஒப்புக்குச் சப்பாணியாக ஒப்புக்கு அவ்வமைப்பு செயல்பட்டது. வளரிளம் தலைமுறையினர் இவ்வமைப்பு உட்பட அனைத்து அமைப்புகளிலும்  உள்வாங்கப்படவில்லை.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திற்குப் பிறகு ஏற்படுத்தப்பட்ட பொதுநிலையின அமைப்புகளும் பணிக்குழுக்களும் தன்னாட்சிமிக்க அமைப்புகளாக கட்டமைக்கப்படவில்லை. குருத்துவத்தின் நிழலில்தான் அவை வளர்க்கப்பட்டன; அடை வைத்துப் பாதுகாக்கப்பட்டன. மண்டைக்காடு கலவரத்தின்போது தமிழக அளவில் எழுந்த அரசியல்-சமூக ரீதியான எழுச்சி அமைப்பு ரீதியாக வளர்த்தெடுக்கப்படவில்லை. அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பத்திரிகைகள், ஊடகங்கள் ஊக்கப்படுத்தப்படவுமில்லை; உருவாக்கப்படவுமில்லை.

ஆன்மீகத்திற்கு தந்த முக்கியத்துவம் அரசியலுக்கு தரப்படவில்லை. ஆவி எழுப்புதல் கூட்டத்திற்கு தந்த விளம்பரம் அரசியல் விழிப்புணர்வு பயிற்சி முகாம்களுக்குத் தரவில்லை. அகில இந்திய அளவிலோ, மாநில அளவிலோ, மறைமாவட்ட அளவிலோ, மறைவட்ட அளவிலோ திரு அவையிடம் உள்ள தரவுகள், மேலாண்மைக் கருவூலங்கள் அனைத்தும் ஒற்றைப் புள்ளியில் ஒருங்கிணைக்கப்படவில்லை.

மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவந்த போது தமிழகம் உட்பட ஆங்காங்கே திரட்டப்பட்ட அரசியல் எழுச்சி கரை சேர்ந்த அலையாக சிதைக்கப்பட்டது. கிறித்தவ வாழ்வுரிமை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள், தேர்தலின்போது மட்டுமே ஓட்டுக்குள்ளிலிருந்து எட்டிப்பார்க்கும் ஆமைத் தலையாக நீளும். பின்னர் ஒடுங்கும்தன்னெழுச்சியாக கட்சிகளையோ இயக்கங்களையோ கட்டியெழுப்பிய கிறிஸ்தவத் தலைவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக எல்லாராலும் கொண்டாடப்படவுமில்லை; அங்கீகரிக்கப்படவுமில்லை.

பாபர் மசூதி இடிப்பிற்குப் பிறகு, கோவை கலவரத்திற்குப் பிறகு, குஜராத் கலவரத்திற்குப் பிறகு, மும்பைக் கலவரத்திற்குப் பிறகு முஸ்லீம்களிடம் காணப்பட்டது போன்ற எழுச்சி, மற்றொரு சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களிடம் எழவே இல்லை. பாபர் மசூதி இடிப்பினால் உண்டாக்கப்பட்ட இந்துத்துவ தீப்பொறியை, அணையாது காத்து, கோத்ரா கலவரத்திற்குப் பிறகு, தீயாய் வளர்த்து, 2014க்குப் பிறகு, அதன் கத கதப்பில் குளிர் காய்ந்து, அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளால் சிறுபான்மையினரில் பெரும்பான்மையினரான முஸ்லீம்களை பதட்டத்தின் விளிம்பில் வைத்திருக்கும் இந்துத்துவம், அரசியல் அரிச்சுவடியை சுதந்திரம் பெற்ற கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக கற்காத கிறிஸ்தவர்களை வீழ்த்துவது மிக மிக எளிது.

கல்வி - மருத்துவ நிறுவனங்களை தங்கள் கேடயங்களாகக் கொண்டிருந்த கிறிஸ்தவர்கள், கார்ப்பரேட் உலகில் அவற்றை மிக விரைவாக இழந்து வருவது கண்கூடு. கல்வி நிலையங்கள் காற்றோடுகின்றன; மருத்துவ படுக்கை விரிப்புகள் நோயாளிகளைத் தேடுகின்றன. பெரும்பான்மை வாதம் தலைதூக்கும் இக்காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கான பாதுகாப்பு வளையமே அரசியல்படுத்துதல் மட்டுந்தான்.

ஜனநாயக அமைப்புகள் சிதைக்கப்பட்டு, அரசியல் சாசன உரிமைகள் பறிக்கப்படும் இக்காலக்கட்டத்தில், ஒவ்வொரு மாநில அளவிலும் கிறிஸ்தவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். சாதி ரீதியிலான பிரிவினைகளைப் புறந்தள்ளி, விசுவாசத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்திட வேண்டும். ஓரணியில் திரள்வது என்பது காலத்தின் கட்டாயம். கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் ரீதியிலான பிளவுகள் சரிசெய்யப்பட வேண்டும். அல்லது ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

ஆளுமைமிக்க செல்வாக்குமிக்க பொது நிலையினத் தலைவர்களை அடையாளங்கண்டு முன்னிலைப்படுத்த வேண்டும். அரசியல் விழிப்புணர்வு பயிற்சி பாசறைகள் ஆங்காங்கே ஒவ்வொரு பங்கிலும் மறைவட்டத்திலும் மறைமாவட்டத்திலும் நடத்தப்பட வேண்டும். அனுபவமிக்க கிறிஸ்தவ அரசியல் தலைவர்களைக் கொண்டு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட வேண்டும். ‘நம் வாழ்வு வார இதழ்உள்ளிட்ட கிறிஸ்தவ அரசியல் விழிப்புணர்வு  பத்திரிகைகள்  இல்லத்திற்கொன்றாக பரவலாக்கப்பட வேண்டும். சமூக ஊடகங்கள் வழியாக பாதுகாக்கப்பட்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். தமிழக அளவில் உள்ள ஆயர்பேரவை பணிக்குழுக்கள் மறைமாவட்டப் பணிக்குழுக்களுடன் ஒருங்கிணைந்து தொலை நோக்குத் திட்டத்தின் அடிப்படையில் முழு மூச்சுடன் செயல்படவேண்டும். கிறிஸ்தவர்கள் அரசியல்படுத்தப்படவில்லையெனில், கிறிஸ்தவத்திற்கு எதிர்காலமில்லை. இயேசுவின் அரசியல் நமதாக வேண்டும். அரசியல் இயேசு நம் இலக்காக வேண்டும்.

Comment