No icon

தெய்வீகத் தடங்கள் – 4

திராட்சை ஆலையில் கதிரடித்தல் (நீத 6:11-12)

ஒருநாள் உன் வலி உன்னுடைய வலிமையின் மூல வளமாகும். அதைச் சந்தி; எதிர்கொள்; நீ வெற்றிகொள்வாய்.” - டோடினொகி

பின்பு ஆண்டவரின் தூதர் ஒபிராவில் உள்ள ஒரு கருவாலி மரத்தடியில் அமர்ந்தார். அந்த மரம் அபியேசர் குடும்பத்தவரான யோவாசுக்குச் சொந்தமானது. அவர் மகன் கிதியோன், மிதியானியரிடமிருந்து கோதுமையை மறைப்பதற்காக, திராட்சை ஆலையில் கதிர்களை அடித்துக் கொண்டிருந்தார். ஆண்டவரின் தூதர் அவருக்குத் தோன்றி, “வலிமை மிக்க வீரனே! ஆண்டவர் உன்னோடு இருக்-கிறார்என்றார் (நீதித்தலைவர்கள் 6:11-12).

ஆண்டவர் கிதியோனை வலிமை மிக்கவர் என்று அழைக்கிறார். வலிமை மிக்கவராக  அவரை ஆக்குகிறார். கீழ்ப்பட்டோரை உயர்த்துவதில் கடவுள் மகிழ்ச்சி கொள்கிறார். கிதியோன் அவரது நம்பிக்கை உறுதி செய்யப்பட வேண்டுமென்று விரும்புகிறார். இப்போது தூய ஆவியானவரின் தூண்டுதலால் கிதியோன் விரும்புவது போலவே நமது கண்முன்னர் அருங்குறிகளை எதிர்பார்க்க வேண்டியதில்லை. எனினும், நாம் அவருடைய பார்வையில் அருளைக் கண்டுகொண்டோமென்றால், அவரது ஆவியானவரின் ஆற்றல் மிக்க செயலால் நமது இதயங்களில் நமக்கு ஓர் அடையாளத்தைக் காட்டுவார்.

நான் மருத்துவமனையில் படுத்திருந்தபோது, செய்வதறியாது கேள்விகளாலும், ஐயங்களாலும், பதற்றங்களாலும், உடல் வேதனையில் மனம் குழப்ப நிலையிலிருந்தபோது, “நான் நம்பிக்கையை இழக்கமாட்டேன். இந்தக் கல்வாரிப் பாதையில் நம்பிக்கையுடன் தொடர்வேன். என்னோடு ஆண்டவர் இருக்கிறார்என்று எனக்குள்ளே சொல்லிக்கொள்ள முடிந்தது. கிதியோனைப்போல, தன்னைப் பின்தொடருமாறு என்னை அழைத்த கடவுளிடம் எனக்குள்ள நம்பிக்கை உறுதி செய்யப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டேன். அவர் எனது நம்பிக்கையை ஆலையில் வைத்து அரைத்தாரா? என்னைச் சாவின் பிடியிலிருந்து விடுவித்தார். அவருடைய செயலுக்கு உண்மையில் முக்கிய நோக்கம் இருக்கிறது.

கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்; அனைத்தையும் அறிபவராக இருப்பினும் (1யோவா 3:20), என்னை அவர் சோதிக்கிறார் என்ற நம்பிக்கையில் மேலும் மேலும் உறுதியாக ஆனேன். என்னுள் அவர் செயலாற்றுகிறார் என்று வெளிக்காட்டுகிறாரா? ஏனென்றால், என்னிடம் நம்மைச் சுற்றியுள்ள நிகழ்வுகளின் மூலம் அவர் பேசுகிறார். இவ்வாறு என்னை உருக்குலைத்த நிகழ்ச்சியின் பின்னால் கடவுளின் காப்பாற்றும் நோக்கத்தினை நான் நேர்மறையாய் உணர முடிந்தது.

உங்கள் இதயங்களில் கவலை கொள்ளாதீர்கள்;…

சாவின் கொடுவாயிலிருந்து என்னை

மீட்ட அவர் என்னுடன் இருக்கிறார்;…

நான் நலமுடன் இருப்பேன்.’

2014, பிப்ரவரி 21 அன்று திண்டுக்கல்லின் புற நகர்ப் பகுதியிலுள்ள வடக்கு மேட்டுப்பட்டி கிராமத்திற்கு எனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன். மதுரை இயேசு சபை குருமட வளாகமான பெஸ்கி இல்லத்திலிருந்து 12 கி.மீ. தொலைவு. புனித அந்தோணியார் கோவிலில் அன்று மாலை 7 மணிக்கு ஆடம்பரத் திருப்பலி. வகுப்புகள் முடிந்த பிறகு மாலை ஆறு மணிக்கு நான் அந்த ஊருக்குப் புறப்பட்டேன். 6:30 மணியளவில் திண்டுக்கல் - கொடைக்கானல் நெடுஞ்சாலையில் வீரக்கல் பஞ்சாயத்து அருகில் சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த ஒரு லாரி எனது மோட்டார் சைக்கிளில் மோதித் தள்ளிவிட்டது. நான் ஒரு பேருந்துக்குப் பின்னால் சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த ஓர் எய்ச்சர் டிரக் ஒரு தள்ளு, வண்டியின்மேல் மோதுவதைத் தவிர்க்கும்போது என்னைத் தட்டி விட்டதாக நேரில் பார்த்தவர்கள் பின்னர் சொன்னார்கள்.

வலது மேல் கை இரண்டாக முறிந்து, நான் இரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்தேன். கையில் எலும்பெல்லாம் துண்டுதுண்டாய் வெளியில் தெரிந்தன. இதயத்திலிருந்து கைக்கு வரும் முதல் தமனி அறுந்துவிட்டது. இதனால் இரத்தப் பெருக்கு. தோள்பட்டை முற்றிலுமாய் சிதைந்து போய்விட்டது. முழங்கையிலிருந்து மணிக்கட்டு வரையில் எலும்பு நசுங்கிப்போய் மணிக்கட்டு தொங்கிக் கொண்டிருந்தது. வலது முழங்காலுக்குக் கீழ் சதையின் ஒரு பகுதி  இல்லை. லாரியின் பம்பர் எனது காலணியை வெட்டிவிட, எனது வலது பாதத்தில் ஆழமான காயம். எனது சுண்டு விரலிலும் காயம். நான் அணிந்திருந்த தலைக்கவசம் நொறுங்கி, எனது முகத்தையும், தலையையும் கிழித்து விட்டிருந்தது. வலது கையிலிருந்தும், வலது காலிலிருந்தும் பல இடங்களில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. எனது நிலை எவ்வளவு மோசமாக இருந்ததென்றால், சுற்றிக் கூடிய கூட்டம் நான் பிழைக்க முடியாது என்று சொல்லிவிட்டது.

நல்ல சமாரியன் போல டிரக்கின் கிளீனர் திரு. அகமத் என்னருகில் ஓடி வந்தார். எனது தோளில் தொங்கிய பையிலிருந்து எனது அலைபேசியை எடுத்து பெஸ்கி இல்லத்திற்குத் தெரிவித்து விட்டார். நான் நினைவிழக்கப் போவதற்கு முன்னர் அவரிடம், அவர் கேட்ட கேள்விகளுக்கு விடையாகச் சில வார்த்தைகள் பேசியிருக்கிறேன். அவர்தான் அவசர ஊர்தி 108-க்குத் தொலைபேசியில் தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்ட மருத்துவமனையின் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டேன். அங்கே பணியிலிருந்த செவிலியர் திருமதி. சியாமளா ஓர் இயேசு சபைக்குருவின் ஒன்றுவிட்ட சகோதரி. அவர் என்னை அங்கிருந்து வேறு சிறப்புச் சிகிச்சை மருத்துவமனைக்கு மாற்ற ஏற்பாடு செய்தார். ஏனென்றால், தாமதப்படுத்தும் ஒவ்வொரு நிமிடமும் நான் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பைக் குறைக்கும் என்று அவருக்குத் தெரியும்.

(தொடரும்)

Comment