No icon

தெய்வீகத்  தடங்கள் - 9

விடாமுயற்சிக்கு ஓர் அழைப்பு!

முன்னைய நாள்களை நினைவுகூருங்கள். நீங்கள் ஒளி பெற்றபின் உங்களுக்கு ஏற்பட்ட துன்பம் நிறைந்த போராட்டங்களை மன உறுதியோடு ஏற்றுக்கொண்டீர்கள். சில வேளைகளில் நீங்கள் இகழ்ச்சிக்கும் மனவேதனைக்கும் ஆளாகி, வேடிக்கை பொருளானீர்கள். வேறு சில வேளைகளில் இந்நிலைக்கு ஆளானோரின் துன்பங்களில் பங்கு பெற்றீர்கள். கைதிகளுக்குப் பரிவிரக்கம் காட்டினீர்கள். உங்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்ட போதும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டீர்கள். ஏனெனில்சிறந்த நிலையான உடைமைகள் உங்களிடம் உள்ளன என்பதை அறிவீர்கள். உங்களிடம் இருக்கும் துணிவைக் கைவிட்டு விடாதீர்கள். இதற்கு மிகுந்த கைம்மாறு உண்டு. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவர் வாக்களித்ததை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மன உறுதி தேவை. இன் னும்மிக மிகக் குறுகிய காலமே இருக்கிறது; வரவிருக்கிறவர் வந்து விடுவார், காலம் தாழ்த்த மாட்டார். நேர்மையுடன் நடக்கும் என் அடியார், நம்பிக்கையினால் வாழ்வு அடைவார். எவராவது பின்வாங்கிச் செல்வார் என்றால் அவரில் நான் மகிழ்ச்சியுறேன்.’ “நாமோ பின்வாங்கிச் சென்று அழிவுறுவோர் அல்ல; மாறாக, நம்பிக்கையையும் வாழ்வையும் காத்துக்கொள்வோம்” (எபிரேயர் 10:32-39).

கொடுமைக்கு உட்படுத்தப்படும்போது, விசுவாசிகள் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்று எபிரேயர்களுக்கு எழுதப்பட்ட கடிதத்தின் ஆசிரியர் வலியுறுத்துகிறார். அவரது காலத்தில் கிறிஸ்துவை மீட்பர் என்று ஏற்றுக் கொண்டமைக்காக வதைக்கப்படுவதிலிருந்து தப்பிக்கப் பல விசுவாசிகள் யூதமதத்திற்குத் திரும்பிப்போகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு உற்சாகம் ஊட்டும் வகையில், “கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவர் வாக்களித்ததை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மன உறுதி தேவைஎன்று கூறினார். சோதனைகள், வதைகள், நம்பிக்கை மங்கிய சூழல்கள் ஆகியவை நம்மை வாட்டும்போது, ஆண்டவரிடம் நமக்குள்ள நம்பிக்கையை இழந்துவிடவேண்டாம் என்று நாம் அறிவுறுத்தப்படுகிறோம். அப்போது, நம்பிக்கையில் வேரூன்றி இருக்கும் வேளையில், நாம் உடைந்து போய் அழிக்கப்படமாட்டோம். விசுவாசத்திலும் தன்னம்பிக்கையிலும் நாம் வேரூன்றி இருக்கும் போது, நாம் கடவுளின் திருவுளப்படி செயல்பட வழிநடத்தப்படுகிறோம். அவ்வாறு நமக்கு உறுதியளிக்கப்பட்ட வெகுமதிக்காக நமது ஆன்மாவைக் காத்துக்கொள்கிறோம்.

என்னைப் பொறுத்தவரையில், சோதனைகளின் போது நிலையான நம்பிக்கையைக் கொண்டிருப்பதற்கு, கடவுள் கடந்த காலங்களில் எவ்வாறு செயல்பட்டிருக்கிறார் என்பதை நினைத்துப் பார்ப்பதுதான். சாவின் பேராபத்திலிருந்து என்னைக் காப்பாற்றினார். ஏனென்றால், இருளின் கதவுகளைத் தட்டிவிட்டேன். ஐயங்கள், குழப்பம், உடல் நோய்களால் துன்புறுதல் ஆகியவற்றினூடே நான் நடந்தபோது அவர் தமது உறுதிமொழியில் உண்மையாக இருந்தார். என்னால் தாங்க முடியாத அளவிற்கு என்மேல் கடவுள் பாரத்தைச் சுமத்தமாட்டார் என்று நம்ப எனது நம்பிக்கை அனுபவம் என்னைத் தூண்டுகிறது.

காயம் ஆறி உடல் தேறிவரும் காலகட்டத்தில், தாங்க முடியாத சோதனைகளை எனக்குத் தரவில்லை. வாழ்வின் ஆண்டவரில் எனது ஆழமான நம்பிக்கை, அவர்மேல் கொண்ட உறுதிப்பாடு எனக்கு விடாமுயற்சியை அளித்தது. எதில் நான் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்? வாழ்க்கையில் எனக்கு ஏற்படக்கூடிய அனைத்துக்கும் நான் அன்னை மரியாவைப் போலஆம்என்று சொல்ல, என்னைக் குணமாக்கும் ஆண்டவருடன் ஒத்துழைத்து என் நம்பிக்கையில் உறுதியுடன் இருக்க அழைக்கப்பட்டிருக்கிறேனோ?

மருத்துவ முயற்சிகள், அறுவை சிகிச்சைகள், மருத்துவ வல்லுநர்களின் முடிவுகள், உடற்பயிற்சிகள், செவிலியர், மற்ற பணியாளர்கள் ஆகியோரின்  தொண்டுகள் ஆகியவற்றில் கடவுளின் பிரசன்னத்தைக் காணமுடியுமா? என்னைப் பார்க்க வருபவர்களின் கருணைச் செயல்கள், மன்றாட்டின் ஆற்றல் ஆகியவற்றில் ஆண்டவரின் மென்மையான கைகளை உணர முடிகிறதா? எனது உடலில் மடிந்துபோன திசுக்களும், உடைந்துபோன எலும்புகளும் ஆவியானவரின் ஆற்றலால் புத்துயிர் பெறுவதில் கடவுளின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்ள அழைக்கப்படுகிறேனா?

புனித பவுல்நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார்” (தீத்து 3:5) என்று நமக்கு அறிவுறுத்துகிறார். நான் விடாமல் முயற்சி செய்வது எல்லாம் அண்டவெளியிலும், படைப்பு அனைத்திலும் என் தனி வாழ்விலும், மருத்துவத்துறையிலும் செயல்படுகின்ற இறைவனின் திருவுளத்திற்கு இசைய வாழ்வதுதான்.

எலும்பு நோய் மருத்துவர்கள் எலும்பு தொடர்பான பிரச்சினைகளைச் சரி செய்தார்கள். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் தோல் ஒட்ட வைப்பதில் கவனம் செலுத்தினார்கள். எனது வலது தோள்பட்டைக்கீழ் கை முறிந்ததால், முதுகுத் தண்டில் நரம்புகள் பல துண்டிக்கப்பட்டு விட்டன.

மத்திய நரம்பு மண்டலத்தின் ஒரு முக்கியப் பகுதி கழுத்தின் தொடக்கத்தின் வேர்களில் தொடங்கி தோள்பட்டை, கைகள் வழியாக விரல் வரை நீண்டு நரம்புகளின் வலை அமைப்பு  அவற்றிலிருந்து மூளை முதலிய பாகங்களுக்குச் சமிக்ஞைகளை எடுத்துச்செல்கின்றது. இந்த அமைப்புக்கு brachial plexus என்று பெயர். கைகளின் குறிப்பிட்ட இயக்கங்களைக் கட்டுப்படுத்துகிறது. இந்த நரம்புகள் கைகளின் தோலுக்கு உணர்வை வழங்குகின்றன. நமது கழுத்து மேலே இழுக்கப்பட்டு காயமடைந்த தோளிலிருந்து நகரும்போது, மேலே உள்ள நரம்புகளுக்குச் சேதம் ஏற்படுகிறது. மேலும், கீழே உள்ள நரம்புகளும் நமது தோள் மேலே வலுக்கட்டாயமாய் இழுக்கப்படும்போது சேதமடையலாம். இப்படி அந்த நரம்புத் தொகுதிகளுக்கு ஏற்படும் சேதம் குறைவாக இருந்தால், ஒரு சில வாரங்களில் முழு குணம் ஆகவும் வாய்ப்பிருக்கிறது.

பல முறிவுகள், தோள்பட்டையில் காயம், என்னைப்போல மேற்கையில் தசைகளும் தசை நார்களும் சிதைந்துபோவது ஆகியவற்றினால் பாதிப்பு கடுமையானதாக இருக்கும். அது முழுவதும் ஆறப் பல ஆண்டுகள் ஆகும்.

இந்த நரம்புகள் நீட்டலாலும், அழுத்தம் தரப்படுவதாலும், வெட்டப்படுவதாலும் சேதம் அடையலாம்நீட்டுதல் என்பது தோள்பட்டையிலிருந்து தலையும் கழுத்தும் இழுக்கப்படுவதால் ஏற்படும். மோட்டார் சைக்கிளிலிருந்து விழும்போதும், கார் விபத்தின்போதும் இது ஏற்படும். கடுமையான பாதிப்பாக இருந்தால், நரம்புகள் கழுத்தில் முதுகுத் தண்டிலிருந்து பிய்த்துக்கொள்ளும். அழுத்தம் என்பது காரையெலும்புக்கும், முதல் விலா எலும்புக்கும் இடையிலுள்ள நரம்புத்தொகுதி நசுக்கப்படும் போது ஏற்படுகிறது. எலும்பு முறிவின்போதும், இடம் மாறும்போதும் ஏற்படும். அதிகப்படியான இரத்தப் போக்கினால் வீக்கம் அல்லது மென்மையான திசுக்களில் பாதிப்பு ஆகியவற்றாலும் இது ஏற்படும்.

நரம்புகள் சேதமடையும்போது மூளையிலிருந்து வரும் செய்திகள் நின்றுவிடும். இதனால் மேற்கை, கை தசை வேலை செய்வது தடைபடும். அப்போது அப்பகுதியில் உணர்வு இருக்காது. இப்படிப்பட்ட காயங்கள் சிகிச்சையினாலும், கால அவகாசத்திலும் குணமாகும். குணமாகச் சில வாரங்கள், மாதங்கள், ஆண்டுகள் கூட ஆகலாம்

(தொடரும்)

Comment