Namvazhvu
இளைஞர் பக்கம் சோம்பேறித்தனம் (Laziness)
Monday, 11 Jan 2021 05:01 am
Namvazhvu

Namvazhvu

 

                                                                                                                                                            

 

 

 

இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம் என்பார் கள். சோம்பியிருந்து, குறிப்பாக இளமையில் சோம்பலுக்கு இடம் கொடுக்காதவர்கள் சாதனையாளர்கள் பட்டியலில் இடம் பிடித்ததாக சரித்திரமே கிடையாது. எதுவுமே செய்யாமல் இருப்பவன் மட்டுமே சோம்பேறியல்ல, தன்னால் முடிந்ததைச்  செய்யாமல் இருப்பவனும்  சோம்பேறியே என்கிறார் கிரேக்க அறிஞர் சாக்ரட்டீஸ்.இளையோர் கருத்தரங்கங்களில்சுயதூண்டுதல் (self -  Motivation) பற்றிப் பேசுவோம். மாணவர்கள் படிக்க, வெளி நாட்டிலிருந்து ஒருவரது தூண்டுதல் எப்போதும் தேவைப்பட்டால் அது அதிக மதிப்பெண் பெற உதவாது என்பதை தெளி வாக்குவோம். இதற்கு இரு சக்கர வாகன ஓட்டிகளை எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்வோம். இரண்டு சக்கர வாகனங்களை நாம் பார்க்கிறோம். ஒன்று, ஓர் இடத்தை அழுத்தினால் வாகனம் தானாக புறப்பட்டு செல்லும். அதே வேளையில் மற்ற இருசக்கர வாகனங்களுக்கு வெளியிலிருந்து யாராவது ஒரு மிதி கொடுத்தால் தான் கிளம்பும். இப்படி யாராவது ஒருவரை எப்போதும் சார்ந்திராமல் இருக்க அறிவுரை கூறுவோம். காரணம் சார்பு நிலை அடிமைத் தனத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல் நம்மை சோம்பேறிகளாகவும் மாற்றிவிடும்.

நேற்று செய்யவேண்டியதை

இன்று செய்தால் சோம்பேறி

இன்று செய்ய வேண்டியதை

இன்றே செய்தால் வெற்றியாளர் என்பார்கள் .

இளையோர் சுறுசுறுப்பானவர்களா என சோதிக்க அவர்கள் காலையில் எழுவது பற்றிக் கேட்போம். ஒருவர் கருத்துப்படி காலை 3 மணிக்கு எழுந்தால் அவர் முனிவர், 4மணிக்கு எழுபவர் ஞானி, 5மணிக்கு எழுபவர் அறிஞர், 6 மணிக்கு எழும்புபவர் சாதாரண மனிதர், 7மணிக்கு எழுந்தால் அவன் எருமை. இப்படி கேட்கும் போதே ஓர் இளைஞர் குறுக்கிட்டு 7 மணிக்கு பின்பு எழுபவர்கள்? எனக் கேட்டான். இன்று குறிப்பாக இந்த பொது முடக்க நாள்களில் இளையோர் காலை எத்தனை மணிக்கு எழுகிறார்கள் எனக் கேட்டால் அதிர்ச்சியளிக்கும் பதில்கள் கிடைக்கின்றன. சோம்பல் உன்னை ஏமாற்றாமல் காத்துக்கொள். ஏனெனில், அதற்கு இன்றொரு நாளைக் கொடுத்தால் அது அடுத்த நாளையும் திருடிக்கொள்ளும்.

எனவே படிப்பில் முன்னேற நாங்கள் கொடுக்கும் குறிப்புகளில் (iயீள) 24 மணி நேர கால அட்டவணை தயாரிக்கச் சொல்வதுதான். எதை எப்போது செய்ய வேண்டுமோ அதை அந்தந்த நேரத்தில் தவறாமல் செய்ய வலியுறுத்துவோம். அதாவது 24 மணி நேரத்தில் அது பள்ளி, கல்லூரி நாளாக இருந்தால் நிறுவனத்தில் இருக்கும் நேரத்தைத்தவிர மற்ற சமயத்தில் என்ன செய்ய வேண்டுமென திட்டமிடல் தேவை. தூங்க எவ்வளவு நேரம், படிக்க, டி.வி பார்க்க என நேரத்தை திட்டமிட்டு எப்படியாவது அந்த குறிப்பிட்ட நேரத்தில் அந்த குறிப்பிட்ட காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்துவோம். லீவு நாள்களில் 24 மணி நேரத்தை வேறு விதமாக திட்டமிடல் வேண்டும். கவனத்துடன் வகுக்கும் திட்டமே வெற்றிக்கு அடிப்படை (நீமொ 24:6) என்கிறது விவிலியம்.

பேரார்வம் –(Passion)

சதுரங்கத்தில் (Chess) உலக சாதனை புரிந்த இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்திடம் அவரது வெற்றிக்கும், சாதனைக்கும் காரணம் கேட்டபோது அவர் ஒரே வார்த்தையில் அதாவதுபேரார்வம் என பதில் கொடுத்தார். எனவே தான் மாணவர்கள் கல்வி நிறுவனங்களில் வரும்போது அவர்களை முதன் முதலாக சந்திக்கும் போது எந்த பாடத்தையும் கற்றுத் தேர்ந்து கொள்ள ஒன்றில் அந்த பாடத்தின் மேல்காதல் கொள்ள வேண்டும் அல்லது அதைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர் மேல்காதல் கொள்ள வேண்டும் என்போம். இது சோம்பலை அகற்றும் சிறந்த மருந்து.

சோம்பல் பற்றி விவிலியம்:-

விவிலியம் சுறுசுறுப்பை எறும்பிடமிருந்து கற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது. (நீமொ 6:6) தொடர்ந்து சோம்பலில் தூங்குவோர்களை அது எச்சரிக்கிறது.

இன்னும் சிறிது நேரம் தூங்குங்கள்,

இன்னும் சிறிது நேரம் உறங்குங்கள்,

கையை மடக்கிக்கொண்டு இன்னும்

சிறிது நேரம் படுத்திருங்கள் வாழ்க்கை

உங்கள் மீது வழிப்பறிக் கள்வரைப்போல

பாயும், ஏழ்மை நிலை உங்களைப்

போர் வீரரைப் போல் தாக்கும் (நீமொ 6:10-11)

காலையில் அலாரம் வைத்துத் தூங்கிவிட்டு அலாரம் அடித்த பின்பும் எழும்பாமல் சோம்பலாய் படுத்திருப்பவர்களுக்கு நாங்கள் சொல்வது, “நீ இன்று ஒரு நாளை தோல்வியோடு ஆரம்பிக்கிறாய், முதல் கோணல் முற்றிலும் கோணலாக இருக்க வாய்ப்புண்டு. அடுத்து நீ ஒன்றை தள்ளிப்போட்டு ஆரம்பிக்கிறாய். தள்ளிப்போடுதல் அதை இல்லாமல் செய்வதற்கு சமம். இன்னும் காலைப் பொழுதுதான் அந்த நாளைத்தீர்மானிக்கும். அதனால்தான் சரியான ஆரம்பம் பாதி வெற்றிக்கு சமம் என்பார்கள்.

இன்னும் சொல்லப்போனால் ஒரு நாளில் 86400 வினாடிகள் உள்ளன. ஒவ்வொரு வினாடியும் விலை மதிக்க முடியாதவை. காரணம் கடந்து போன வினாடி திரும்பி வராது. ஒரு வினாடி சோம்பியிருந்தால் கூட அதற்கான விலையை கொடுக்கவேண்டியிருக்கும் என்பார்கள். அதாவது ஒரு நொடிப்பொழுதில் நாம் இழைக்கும தவறினால் ஒரு விபத்து ஏற்படலாம், அது வாழ்நாள் முழுவதும் நாம் வருந்தக் கூடிய தொன்றாக மாறலாம். இறுதியாக, விவிலியத்தில் தாவீது போருக்கு போக வேண்டிய நேரத்தில் ஓய்வெடுத்ததால் உரியாவின் மனைவியிடம் தகாத உறவு கொள்ள நேர்ந்ததை நினைப்பூட்ட விரும்புகிறேன். (2சாமு 11:1-14)  இளையோர் அப்படி செய்கிறீர்களோ இல்லையோ, சோம்பலுக்கு இடம் கொடுத்தால் வாட்ஸ் - அப், யூ டியூப்பில் மோசமான படங்களை பார்க்க நேரிடலாம். அதனால் வாழ்வு சீரழிய, தாவீதுக்குக் கிடைத்த தண்டனை கிடைக்க வாய்ப்புண்டு. ஒரு பிரபல மருத்துவர் கருத்துப்படி யாரெல்லாம் வாட்ஸ்-அப்பிலிருந்து வெளி வருகிறார்களோ, அவர்கள் மனநோயாளிகளாக இருக்கமாட்டார்களாம்.

சோம்பேறியின் மூளை சாத்தானின் பரி சோதனைக் கூடம் (n Idle lerain is the workshop of thedevil) என்பதை இளைஞனேமறந்து விடாதே.

(இன்னும் கதிர் வீசும்)