Namvazhvu
சரஸ்வதி வந்தனத்திற்கு நிர்பந்திக்கப்பட்ட பள்ளிகள்-07.03.2021
Wednesday, 10 Mar 2021 10:09 am

Namvazhvu

டாமன் யூனியன் பிரதேசத்தின் பள்ளிக் கல்வி நிர்வாகம் பிப்ரவரி 11 ஆம் தேதி அனுப்பிய சுற்றுமடலில், சரஸ்வதி வந்தனத்தை அனைத்து தனியார் பள்ளிகளிலும் நடத்தி பிப்ரவரி 17 ஆம் தேதிக்குள் உரிய புகைப்படங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டதைத் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பிப்ரவரி 16 ஆம் தேதி வசந்த் பஞ்சமி என்ற பெயரில் சரஸ்வதி ஜெயந்தி கொண்டாடப்படுவதையொட்டிக் கல்விக்கடவுளான சரஸ்வதிக்கு வந்தனம் செய்து அறிக்கை அளிக்க தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் - டையூ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பள்ளி முதல்வர்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் இச்சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியை மையமாகக்கொண்டுச் செயல்படும் ஐக்கிய கிறிஸ்தவ ஒன்றிப்பு இதனைக் கண்டித்து, திரும்பபெற வேண்டும் என்று கேட்டுள்ளது. இது இந்திய இறையாண்மைக்கும் அரசியல் சட்டத்திற்கும் எதிரானது என்று கண்டித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு பெரிய வெள்ளி விடுமுறையை நீக்கம் செய்து இதே டாமன்-டையூ நிர்வாகம் ஆணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இச்சதியை கிறிஸ்தவர்கள் முறியடித்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.