Namvazhvu
நவீன அடிமைத்தனத்திற்கு எதிராக ஆப்ரிக்க கிறிஸ்தவ சபைகள்
Wednesday, 08 Sep 2021 06:47 am
Namvazhvu

Namvazhvu

நவீன அடிமைத்தனத்திற்கு எதிராக ஆப்ரிக்க கிறிஸ்தவ சபைகள்

ஆப்ரிக்காவின் கானாவில் ஒன்றுகூடிய 14 ஆப்ரிக்க மதத்தலைவர்கள், நவீன அடிமைத்தனத்திற்கு எதிராக வெளியிடப்பட்ட ஒன்றிணைந்த அறிக்கையொன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

அடிமைத்தனத்திற்கும், மனித கடத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டிருக்கும் அனைத்து மக்களையும் விடுவிக்கவேண்டும் என்ற நோக்கத்தில் கையெழுத்திடப்பட்டுள்ள இந்த அறிக்கை முயற்சியை, மதங்களிடையேயான கூட்டமைப்பு எனப்படும் குளோபல் ஃபரிடம் நெட்வொர்க் என்பது துவக்கி வைத்திருந்தது.

கானா, ஐவரி கோஸ்ட், காங்கோ குடியரசு, நைஜீரியா என நான்கு நாடுகளின் முக்கிய மதத் தலைவர்களால் கையெழுத்திடப்பட்டுள்ள இந்த அறிக்கைக்கு, தென் ஆப்ரிக்காவும், கென்யாவும் தங்கள் முழு ஆதரவையும் வெளியிட்டுள்ளன.

இலாப நோக்கத்தோடு மக்களைச் சுரண்டி, அவர்களின் உரிமைகளை மீறும்படியாக, மனிதர்ளை வியாபாரப்பொருட்களாக கடத்தும் தொழில் என்பது மிகப்பெரும் கொடூர குற்றம் என உரைத்த கானா ஆயர் பேரவையின் பொதுச் செயலர், அருள்பணி லாசரஸ் அனோன்டி அவர்கள், இக்கொடுமையை அகற்றுவதில் மதத்தலைவர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

குறைந்தது 4 கோடி மக்களை உள்ளடக்கிய இந்த நவீன அடிமைத்தனத்தை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என்ற நோக்கத்தில், மதங்களிடையே கையெழுத்திடப்பட்டுள்ள எட்டாவது அறிக்கையாகும் இது.

2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி, வத்திக்கானில் திருத்தந்தையின் உடனிருப்புடன் கையெழுத்திடப்பட்ட அறிக்கையில், ஆங்கிலிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருஅவையின் முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு உட்பட பல கிறிஸ்தவ சபைகளின் தலைவர்களும், பல்வேறு மதங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.