Namvazhvu
பெகாசஸ் - ஓர் ஊடக உளவு பயங்கரவாதம்பெகாசஸ்!
Friday, 24 Sep 2021 05:06 am
Namvazhvu

Namvazhvu

பெகாசஸ் - ஓர் ஊடக

உளவு பயங்கரவாதம்பெகாசஸ்!

இந்திய ஜனநாயகத்தைத் தீர்மானிக்கும், வரையறுக்கும், சீரழிக்கும் இஸ்ரேலிய உளவு மென்பொருள். இதன் மூலம் இந்திய ஜனநாயகத்தின் தூண்கள் என்று நாம் கருதுபவை அனைத்தும் கண்காணிக்கப்பட்டிருக்கின்றன. பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், எதிர்கட்சி அரசியல்வாதிகள், மத்திய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி, அரசு அதிகாரிகள், இவர்களது நெருங்கிய உறவினர்கள், இவர்களோடு தொடர்புடையவர்கள் என அனைவரும் உளவுப் பார்க்கப்பட்டுள்ளனர். இஸ்ரயேலின் என்.எஸ்.ஓ என்ற நிறுவனம் உருவாக்கிய இந்த பெகாசஸ் உளவு மென்பொருள் இந்தியாவை மட்டுமல்ல; பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளையே நடுநடுங்க வைத்துள்ளது. மோடியின் மௌனமும் நாடாளுமன்றத்தில் இது பற்றி வாய் திறக்காத எதேச்சதிகாரமும் ஒன்றிய அரசின்மீது பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது. உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி உள்பட தன் நாட்டு குடிமக்கள் உளவு மென்பொருளால் கண்காணிக்கப்படுவது தெரிந்தும் கொதித்தெழாமல், கொந்தளிக்காமல் தன் தாடியை வளர்ப்பதில் மட்டுமே அவர் செலுத்தும் கவனம் நம்மை அச்சத்தில் ஆழ்த்துகிறது.

என்.எஸ்.ஓ நிறுவனம், தாம் அந்த மென்பொருளை தகுதியான அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய்தோம் என்று சான்றுரைத்தது. தி வயர் இணையதளம், தி கார்டியன் உள்ளிட்ட ஊடகங்கள் ஒன்றிணைந்து, "தி ஃபர்பிட்டன் ஸ்டோரிஸ்" என்ற புலனாய்வு ஊடகத்துடன் இணைந்து கண்காணிக்கப்பட்ட தொலைபேசி எண்களின் பட்டியலை வெளியிட்டபோதும் ஒன்றிய அரசு அசைந்து கொடுக்கவில்லை. ஆர்எஸ்எஸ் மற்றும் பிற சங்க பரிவார அமைப்புகள், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளைத் தவிர, அனைத்து எதிர்கட்சிகளும் இந்த ரகசிய கண்காணிப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கண்டித்தபோதும், நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்தவிடாமல் ஸ்தம்பிக்க செய்தபோதும் ஒன்றிய அரசு மௌனம் கலையவில்லை. இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று நாடாளுமன்றத்தில் பதிலளித்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவருடைய கைப்பேசியே ஒட்டுக்கேட்கப்பட்டதுதான் கொடுமையிலும் கொடுமை. ஒன்றிய பாஜக அரசையும் அதன் ஜனநாயக விரோத இந்துத்துவ கொள்கைகளை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், முக்கியமாக கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

தி எக்கனாமிக் அன்ட் பொலிட்டிக்கல் வீக்லி பத்திரிகையின் ஆசிரியர் பரஞ்சோய் குகா தாகுர்த்தா, அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் சொத்து மதிப்பை அம்பலப்படுத்திய ரோகினி சிங் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள், பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆனந்த் தெல்தும்டே, ஸ்டான் சுவாமிகள் உள்ளிட்ட எட்டுபேர், மேலும் சுதா பரத்வாஜ், திருமுருகன் காந்தி, இராமகிருஷ்ணன் உள்ளிட்ட சமுக செயல்பாட்டாளர்களும், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி, தேர்தல் வியூக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் போன்ற அரசியல்வாதிகளும், நீதிமன்ற பெண் ஊழியரால் பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகோய், மற்றும் சில புரட்சி நீதிபதிகளும் உளவு பார்க்கப்பட்டுள்ளனர். ரபேல் ஊழல் பிரச்சனையின்போது நள்ளிரவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட சிபிஐ தலைவர் அலோக் வர்மா, மோடியுடன் முரண்பட்ட சிபிஐ அதிகாரி ராகேஷ் அஸ்தானா உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மோடி - அமித்ஷா வை எதிர்த்து நின்ற விஎச்பியின் பிரவீன் தொகாடியா.. இப்படி பட்டியல் நீளும். அரசாங்கங்களுக்கு மட்டுமே இந்த மென்பொருள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், எந்த வெளிநாட்டு அரசும் இந்நாட்டு குடிமக்களை உளவு பார்த்திருக்க இயலாது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.

பெகாசஸ் செயல்படுத்துநர், ஒரு குறிப்பிட்ட நபரை உளவு பார்க்க அதற்கென்று வடிவமைக்கப்பட்ட இணைப்பு ஒன்றை அனுப்புவார். அல்லது வாட்ஸ்அப்பில் தவறவிட்ட வீடியோ அழைப்பை செய்தால் கூட குறிப்பிட்ட நபரின் போனில் இது நிறுவப்பட்டுவிடும். அல்லது அந்த இணைப்பை திறந்தாலே, அந்த நபரின் அனுமதியின்றி, அவருக்குத் தெரியாமலே இந்த உளவு மென்பொருள் அவரது செல்போனில் நிறுவப்பட்டுவிடும். அதன் பின்னர், பெகாசஸ் செயல்படுத்துநர் போனுக்குள் ஊடுருவி, கடவுச் சொல், தொடர்பு எண்கள், குரல் அழைப்புகள், நடப்பு நிகழ்வு விவரங்கள், குறுஞ்செய்திகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வார். போன் கேமராவையும் மைக்ரோ போனையும் கூட இயக்கி அனைத்தையும் தெரிந்து கொள்வார். ஆகையால்தான் வாட்ஸ் அப் நிறுவனம் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அமெரிக்க நீதிமன்றத்தில் என்.எஸ்.ஓ நிறுவனத்தின் மீது 1400க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் பயனர்களை உளவுப் பார்த்ததாக வழக்கு தொடுத்துள்ளது. கனடாவைச் சேர்ந்த இணைய பாதுகாப்புக் குழுவான சிட்டிசன் லேப், இந்தியா உள்ளிட்ட 45 நாடுகளில் 33 பெகாசஸ் நடத்துநர்களை கண்டறிந்துள்ளதாகவும் அதில் ஐவர் ஆசியாவில் உள்ளனர். இந்தியாவில் கங்கை என்ற பெயரில் ஒரு டொமைன் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் உளவு பார்ப்பது என்பதே தனிமனித உரிமை மீறலாகும். இது அரசியல் சாசனத்திற்கு எதிரானதும் கூட. தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றை, தன் குடிமக்கள் மீது அரசே மேற்கொள்ளும் ஊடக பயங்கரவாதம் ஒருபோதும் நியாயப்படுத்தப்பட இயலாத ஒன்றாகும்.

முக்கிய அமைச்சர்கள், அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், நீதிபதிகள், சமூக செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று 300க்கும் மேற்பட்டோர் உளவு பார்க்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் ஒத்துழைப்பின்றி, தனியார் அமைப்பால் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை. என்.எஸ்.ஓ நிறுவனம், ‘சரிபார்க்கப்பட்ட அரசாங்கங்களுக்கு மட்டுமே விற்பனை செய்துள்ளதே இதற்கான அத்தாட்சி. சுதந்திரத்தின் குரல் வளை நெரிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் அஸ்திவாரம் அசைக்கப்பட்டுள்ளது. நுனே வடி நுனே நnஉசலயீவiடிn என்று குறியாக்கம் செய்யப்பட்ட சிக்னல், வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செய்தி பரிமாற்றத் தளங்களே கண்காணிக்கப்படுகிறது என்றால், இது ஒரு அதி நவீன தாக்குதல். யாராலும் எந்தப் பாதிப்பையும் கண்டறிய இயலாது. ஆதாரம் எதுவும் மிஞ்சாது. ஜீரோ டே பாதிப்புகள்தான் மிஞ்சும். அதீத தொழில் நுட்ப ஆற்றல் கொண்டு, இந்த ஸ்பைவேர் விட்டுச் சென்ற டிஜிட்டல் இமேஜ்களை ஆய்வு செய்தால் மட்டுமே தாக்குதலை அறிந்து கொள்ள முடியும்.தரவுகள்தான் பொருளாதாரத்தை தீர்மானிக்கின்றன. னுயவய ளை நேற டிடை.

ஒன்றிய பாஜக அரசு ஜனநாயகத்தைச் சிதைக்கும் அத்தனை வேலைகளையும் 56 இஞ்ச் மார்பளவு தைரியத்துடன் செவ்வனே செய்து முடிக்கிறது. மாநிலங்களில் எதிர்கட்சிகளை கவிழ்ப்பதாக இருந்தாலும் சரி, நீதிமன்றங்களில் சாதகமான தீர்ப்புகளை பெறுவதாக இருந்தாலும் சரி, எதிர்கட்சிகளே இல்லாத நிலையை உருவாக்குவதாக இருந்தாலும் சரி, முழுக்க முழுக்க முதலாளித்துவ நலனுடன், இந்துத்துவ கொள்கையுடன், ஜனநாயகத்தைச் சிதைக்கும் அனைத்து வேலைகளையும் தடயமேயின்றி ஒரு தேர்ந்த கள்வனைப்போல செய்து முடிக்கிறது. தங்களை விமர்சிப்பவர்கள், மாற்று கருத்து உள்ளவர்கள், இந்திய பத்திரிகையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடுபவர்கள் எவரும் இவர்களின் கண்ணிகளுக்கு தப்பமுடியவில்லை. இந்து ராஷ்டிரத்தைக் கட்டமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் முடிவடைந்துள்ளன என்பதையே பெகாசஸ் உளவுமுறை காட்டுகிறது. வினை விதைத்தவன் நிச்சயம் வினை அறுப்பான். காங்கிரசுக்குப் பொருந்துவது பிற்காலத்தில் பாஜகவுக்கும் பொருந்துமல்லவா?! (கண்காணிக்கப்படாத?!) உச்சநீதிமன்றமே மட்டுமே தீர்வு சொல்ல வேண்டும்.