Namvazhvu
தேடுங்கள் கிடைக்கும் – 18 எண்ணப்படியே எல்லாம்
Monday, 27 Sep 2021 06:16 am
Namvazhvu

Namvazhvu

எண்ணப்படியே எல்லாம்

சத்யா: என்ன தான் சொன்னாலும் இவன் இந்த எண்ணத்தை விட மாட்டேங்கிறான்

ஆசான்: எந்த எண்ணத்தை?

சத்யா: தேர்வில் தோத்துடுவேன், தோத் துடுவேன், பாஸ் ஆக மாட்டேன்னே சொல்லிட்டு இருக்கான்.

சுந்தர்: நாம் எதை நினைச்சு நினைச்சு பயப்படறோமோ, அது நடக்கிறதுக்கு அந்த பயமே வழிவகுக்கும்னு சத்யா சொல்றா. அது உண்மையா?

ஆசான்: உண்மை. ஓ. ஹென்றி என்ற பிரபல எழுத்தாளர் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அமெரிக்க எழுத்தாளரான இவரது இயற்பெயர் அது இல்லை. இவரின் இயற்பெயர் வில்லியம்ஸ் சிட்னி போர்ட்டர். வறுமையில் வாடி, பின்பு இந்த ஓ. ஹென்றிங்கிற புனைபெயரில் எழுதத் தொடங்கி, புகழும் பொருளும் பெற்று வசதியாக வாழ்ந்தவர். சில காரணங்களால் மீண்டும் வறுமையில் விழுந்து நாற்பத்தெட்டாவது வயதில் இறந்தவர்.

ஓ. ஹென்றி எழுதிய நூற்றுக்கணக்கான சிறுகதைகள் உலகெங்கிலுமுள்ள வாசகர்களை பல்லாண்டுகளாய் மகிழ்வித்து வருகின்றன.

‘கடைசி இலை’ (கூhந டுயளவ டுநயக) என்ற இந்தக் கதையின் பல வடிவங்கள் பல மொழிகளில் உலவுகின்றன.

சுந்தர்: எங்க நடக்குது கதை?

ஆசான்: அமெரிக்காவின் புகழ்பெற்ற நியூயார்க் நகரில் கலைஞர்கள் வாழும் ஒரு பகுதியில் இரு பெண் கலைஞர்கள் சேர்ந்து வாழ்கின்றனர். இருவரும் ஓவியர்கள். தங்களின் இலட்சியங்களும் விருப்பங்களும் ஒத்துப் போவதை உணர்ந்து ஒன்றாய்ச் சேர்ந்து வாழ தீர்மானிக்கின்றனர்.

சத்யா: அவங்க பேர் என்ன?

ஆசான்: ஒருவரின் பெயர் சூசன். இன்னொருவர் ஜான்சி. அந்த நாட்களில் பலரைப் பலி வாங்கிய நிமோனியா காய்ச்சல் இவர்கள் வாழ்ந்த பகுதியிலும் பலரைப் பாதித்தது. ஜான்சிக்கும் இந்த ஆபத்தான காய்ச்சல் வர, ஒவ்வொருநாளும் ஒரு மருத்துவர் வீட்டுக்கு வந்து ஜான்சியை பார்த்துக் கொள்ள சூசன் ஏற்பாடு செய்தார்.

தனக்கு எளிதில் குணம் கிடைக்காது என்று நம்பிய ஜான்சி எதிலும் ஆர்வம் இன்றி படுக்கையிலேயே கிடந்தாள். இவர்கள் வீடு மாடியில் இருந்தது. இவர்களின் வீட்டுக்கு அருகே ஒரு செங்கல் கட்டிடம் இருந்தது. படுக்கையில் படுத்திருந்தவாறே அந்தக் கட்டிடத்தின் வெளிச்சுவரைப் பார்த்தபடி இருந்தாள் ஜான்சி.

ஒருநாள் அவரைப் பார்க்க வந்த மருத்துவர் சூசனிடம் தனியாகப் பேசினார். “உங்கள் சினேகிதி தான் குணம் பெறப் போவதில்லை என்று தீர்மானித்துவிட்டாள். மருத்துவத்தால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் நான் செய்வேன் என்பது நிச்சயம். ஆனால், ஒரு நோயாளி இப்போதே இறுதிச்சடங்கில் வர வேண்டிய வாகனங்கள் பற்றி எண்ணத் தொடங்கி விட்டால் மருந்துகளின் ஆற்றலில் ஐம்பது சதவீதம் குறைந்து விடும். அதனால் உணவு, உடை என்று வாழ்க்கை சம்பந்தமாக அவளை நினைக்க வைக்க வேண்டும், பேச வைக்க வேண்டும்” என்றார்.

வரைவதில் ஈடுபட்டிருந்த சூசனுக்கு ஜான்சி ஏதோ சொல்வது கேட்டது. அறையின் ஜன்னல் வழியாக பக்கத்து கட்டிடத்தின் சுவரை வெறித்துப் பார்த்தபடி ஜான்சி மேலிருந்து கீழே எண்ணிக் கொண்டிருந்தாள். பன்னிரெண்டு, பதினொன்று, பத்து, ஒன்பது, எட்டு...

எதனை எண்ணுகிறாள் என்று புரியாமல் அந்தச் சுவரைக் கவனமாகப் பார்த்தார் சூசன். கீழிருந்து ஒரு படரும் கொடி அந்தச் சுவரின் பாதி வரை பற்றிப் படர்ந்து இருந்தது. இலையுதிர் காலக் காற்று அந்தக் கொடியின் இலைகளை வேகமாக வீழ்த்திய வண்ணம் இருந்தது. அந்தச் கொடியில் இருந்து பார்வையை அகற்றாத ஜான்சி மெல்லிய குரலில் சொன்னாள்: “வேகவேகமா இலைகள் உதிர்ந்துட்டிருக்கு. மூன்று நாளைக்கு முன்னாடி ஒரு நூறு இருந்திருக்கும். இப்போது பார். ஆறு இலை தான் இருக்கு. ஐயோ. அங்க பாரு இன்னொரு இலையும் உதிர்ந்திருச்சு. இப்போது அஞ்சு இலை தான் இருக்கு.” சூசன் கொடியையும் எஞ்சியிருந்த ஐந்து இலைகளையும் பார்த்தார்.

ஜான்சி சொன்னாள்: “அதில் கடைசி இலை உதிரும்போது நானும் உதிர்ந்திடுவேன். எனக்கு இருக்கிறது கொஞ்ச நாள்தான். டாக்டர் ஒன்னும் சொல்லலையா?”

சூசன் சொன்னார்: “இதைப் போன்று முட்டாள்தனமாக யாரும் பேசி நான் கேட்டதில்லை. அந்த இலைகள் கொடியில் இருப்பதற்கும் நீ குணம் பெறுவதற்கும் என்ன தொடர்பு? நான் இந்த ஓவியத்தை வரைந்து முடிச்சதும் நான் போய் அதனை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் உனக்குப் பிடித்த போர்ட் ஒயின் வாங்கிட்டு வருவேன். இப்போது கொஞ்சம் சூப் தரவா?” என்று கேட்டார்.

“எதுவும் வேணாம். வீணா எதுக்காக ஒயின் வாங்கப் போற? எதுவும் வேணாம். அங்க பாரு. இன்னொரு இலை விழுந்திருச்சு. இப்போ நாலு தான் இருக்கு’ என்றாள் ஜான்சி.

அவளது மனநிலையைப் புரிந்து கொண்ட சூசன் சொன்னார், “நான் இந்த ஓவியத்தை வரைந்து முடித்து வெளியே போய் அதை வித்துட்டு வீட்டுக்குத் திரும்பும் வரையில நான் இந்த ஜன்னலை மூடி வைக்கப் போறேன். நீ கண்ணை மூடி நிம்மதியாத் தூங்கு. சரியா,”

“சரி” என்றாள் ஜான்சி. “ஆனால், சீக்கிரம் திரும்பி வா. கடைசி இல உதிர்வதை நான் பாக்கணும். உதிர்ந்து விழும் அந்த இலைகளை மாதிரி நானும் உதிர்ந்து விழணும்.”

ஜான்சி தூங்கும் வரை காத்திருந்து பின்பு வெளியேறிய சூசன் அவர்களின் வீட்டில் கீழ்த்தளத்தில் வசித்த பெர்மனைச் சந்தித்தார்.

அவர்கள் இருவரையும் நன்கு அறிந்தவன் பெர்மன். அவர்களைப் போன்றே அவனும் ஓவியன்தான். மிகுந்த இரக்கத்தோடு பிறருக்கு உதவிகள் செய்பவன். துணிச்சல் கொண்டவன். எதற்கும் தயங்காதவன். அவனிடம் ஜான்சியின் நிலையை விளக்கிச் சொன்னார் சூசன்.

“இப்படியும் யாராவது இருப்பார்களா,” என்று முணுமுணுத்துக்கொண்டே வந்த பெர்மன் சூசனோடு மாடிக்கு வந்து, ஜான்சியைப் பார்த்தான். ஜன்னலைத் திறந்து பக்கத்துச் செங்கல் கட்டிடத்தின் மீது படர்ந்திருந்த அந்தக் கொடியையும் அதில் இன்னும் ஒட்டிக் கொண்டிருந்த நான்கு இலைகளையும் பார்த்தான்.

சத்தமின்றி அறையைவிட்டு வெளியே வந்ததும், சூசனின் காதில் மெதுவாக பெர்மன் சொன்னான்: “அடிக்கிற காத்துல இந்த ராத்திரியே அந்த நான்கு இலையும் உதிர்ந்திடும்! கடைசி இலை விழுந்துட்டா, தானும் இறந்துடுவோம்னு இவள் நம்புறா. இவளைக் காப்பாத்த நாம் என்ன செய்யலாம்?”

சூசனுக்கு எதுவும் தோன்றவில்லை. ஆழ்ந்த கவலையோடு அவள் பெருமூச்சுவிட்டாள். பெர்மன் யோசித்தவாறே படியில் இறங்கி கீழ்த்தளத்தில் இருந்த தன் வீட்டுக்குச் சென்றான்.

இரவு முழுவதும் மழையும் காற்றும் தாண்டவமாடின. மறுநாள் காலை ஜான்சியின் குரல் கேட்டு சூசன் விழித்துக் கொண்டார். “ஜன்னலைத் திற. நான் அந்தக் கொடிய பாக்கணும்“ என்றாள் ஜான்சி. ‘எல்லா இலைகளும் உதிர்ந்து இருக்குமே! இவளுக்கு என்ன நேருமோ?’ என்று பயந்துகொண்டே சூசன் ஜன்னலைத் திறந்தார். அவர் கண்களை அவரால் நம்ப முடியவில்லை. கொடியிலே இன்னுமொரு இலை இருந்தது. அதுதான் கடைசி இலை.

“நம்ப முடியலையே!” என்றாள் ஜான்சி. “ராத்திரி பெஞ்ச மழையிலயும் அடிச்ச காத்திலயும் கடைசி இலையும் உதிர்ந்திடும். அந்தக் கணமே நானும் இறந்துடுவேன்னு தான் நினைச்சேன். ஆனா உதிராமல் அந்த இலை இன்னும் இருக்குதே!”

அவள் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சியை சூசன் கவனித்தார். பகலில், மாலையில் மீண்டும் மீண்டும் ஜன்னலைத் திறக்குமாறு ஆணையிட்டாள் ஜான்சி. எந்தப் பாதிப்பும் இன்றி அந்த இலை அப்படியே இருந்தது.

இரவு கவிழும் வேளையில் சூசனை அழைத்த ஜான்சி சொன்னாள்: “நான் செஞ்சது பெரும் தவறுன்னு உணர்த்தத்தான் உதிராம அந்தக் கடைசி இலை இன்னும் கொடியோடு ஒட்டிட்டு இருக்குதுன்னு நினைக்கிறேன். வாழ்க்கை என்பது எத்தனை பெரிய கொடை! எனவே வாழ முயலாமல், வாழ முடியும் என்ற நம்பிக்கை இல்லாமல், வாழ்வதற்கான எல்லா முயற்சிகளையும் கைவிட்டுவிட்டு, சாகணும்னு நெனச்சேன் பாரு. அது பெரிய பாவம்னு இப்போ உணர்ந்துட்டேன். சூப் இருந்தா கொண்டு வா. கொஞ்ச நேரம் கழிச்சு பாலில் கொஞ்சம் ஒயின் கலந்து தருவியா? அந்த முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துட்டு வா” என்றாள்.

சில நாள் கழித்து அவளைப் பார்க்க வந்த மருத்துவர் வெளியே வந்து சூசனிடம் பேசினார். “உன் சிநேகிதி ஆபத்தான கட்டத்தைத் தாண்டிட்டாள். இனி கவலை இல்லை. நீ ஜெயிச்சுட்டே!” என்று சொன்ன மருத்துவர் இன்னொரு அதிர்ச்சி தரும் தகவலைச் சொன்னார். கீழ்த்தளத்தில் இருந்த பெர்மனுக்கு நிமோனியா காய்ச்சல் வந்து இரு நாட்களில் இறந்துவிட்ட செய்தியை மருத்துவர் சொன்னதும், சூசன் விரைந்து ஓடிப் போய் விசாரித்தார்.

காற்றும் மழையும் பேய் ஆட்டம் ஆடிய அந்த இரவு முழுவதும் அவன் எங்கோ போய்விட்டு, ஆடைகள் முழுவதும் நனைந்து குளிரில் நடுங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பி வந்ததாக காவல்காரர் சொன்னார். பக்கத்துக் கட்டிடச் சுவர் ஓரம் ஏணி ஒன்று இருந்தது. கீழே ஓவியம் தீட்டத் தேவையான பொருட்கள் கிடந்தன. அப்போதுதான் சூசனுக்குப் புரிந்தது. நடந்தது என்ன? பெருமழையிலும் காற்றிலும் உதிராமல் அந்த இலை கொடியில் ஒட்டி இருந்தது எப்படி? அந்த இலை நிஜமான இலை இல்லை. அது பெர்மன் தீட்டிய ஓவியம். இலையைப் போன்றே அது இருந்ததால் ஜான்சிக்கு எந்த ஐயமும் ஏற்படவில்லை. ஜான்சிக்கு நம்பிக்கையூட்டி அவளை வாழ வைத்த அந்த இளைஞன் பெருமழையையும் குளிரையும் பொருட்படுத்தாமல், ஏணியில் ஏறி நின்று, இலையை வரைந்ததாலேயே காய்ச்சல் வந்து இறந்துவிட்டது அவளுக்குப் புரிந்தது.

சத்யா: கதையிலிருந்து நம்ம எடுத்துக்க வேண்டியது என்ன?

ஆசான்: எண்ணங்களைப் போலத்தான் வாழ்க்கை. நேர்மறையான எண்ணங்கள் நம்பிக்கையை வளர்த்து நல்லவற்றைத் தோற்றுவிக்கும். எதிர்மறையான எண்ணங்கள் எதை நினைத்து நினைத்துப் பயப்படுகிறோமோ, அதை நிஜமாக்கிவிடும்.

சத்யா: கேட்டியா சுந்தர்?