Namvazhvu
உலக மறைபரப்பு ஞாயிறுக்கான திருத்தந்தையின் செய்தி “நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” (திப 4:20)
Wednesday, 13 Oct 2021 07:31 am
Namvazhvu

Namvazhvu

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே!

கடவுளுடைய அன்பின் ஆற்றலை நாம் ஒருமுறை அனுபவித்து, அவருடைய தந்தைக்குரிய உடனிருப்பை, நம்முடைய தனிப்பட்ட மற்றும் குழும வாழ்வில் கண்டுணர்ந்துவிட்டால், எதைக் கண்டோமோ, கேட்டோமோ அவற்றைப் பறைசாற்றாமலும் பகிராமலும் நம்மால் இருக்க இயலாது. இயேசுவினுடைய மனுவுருவாக்கம், நற்செய்தி மற்றும் பாஸ்கா மறைபொருள் (பாடுகள், இறப்பு மற்றும் உயிர்ப்பு) ஆகியவற்றில் நமக்கு வெளிப்படுத்தப்பட்ட மறைபொருளின்படி, இயேசு, அவருடைய சீடர்களோடும், இம்மனுக்குலத்தோடும் கொண்டிருக்கும் உறவானது, அவர் எந்த அளவிற்கு நம்முடைய மனுக்குலத்தை அன்புச் செய்கிறார் என்பதையும், நமது இன்ப-துன்பங்கள், நம்முடைய நம்பிக்கைகள், நம்முடைய அக்கறைகள் என அனைத்தையும் அவருக்குரியதாக மாற்றிக் கொள்கிறார் என்பதையும் நமக்கு காட்டுகிறது (காண்க. இன்றைய உலகில் திருச்சபை எண். 22).

கிறிஸ்துவைப் பற்றிய ஒவ்வொன்றும் கிறிஸ்து நம் உலகையும், மீட்பிற்கான அதன் தேவையையும் நன்கு அறிந்திருக்கிறார் என்றும் நமக்கு நினைவூட்டுகிறது. மேலும் ‘நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் அழைத்து வாருங்கள்’ (மத் 22:9) என்பதற்கேற்ப, இந்த மறைத்தூதுப் பணியில், மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்படவேண்டுமென்று அவர் நம்மை அழைக்கிறார். இந்த கருணைமிக்க அன்பிலிருந்து, எவரும் விலக்கி வைக்கப்படுவதில்லை; தொலைவில் இருப்பதாகவோ, நீக்கப்பட்டதாகவோ உணர வேண்டிய அவசியமும் யாருக்கும் இல்லை.

திருத்தூதர்களின் அனுபவம்

ஒவ்வொருவரையும் அவர்கள் இருப்பது போலவே அழைத்து, அவர்களுடன் நட்புரீதியாக உரையாடலுக்குள் நுழையும் ஆண்டவருடைய சொந்த பேரார்வமிக்க விருப்பத்துடன்தான் நற்செய்தி அறிவிக்கும் வரலாறு தொடங்கியது (காண்க. யோவா 15: 12-17). இதனை நமக்கு திருத்தூதர்கள்தான் முதன் முதலில் சொல்கின்றனர்; அவரை முதன் முதலில் அவர்கள் சந்தித்த நாளையும் நேரத்தையும்கூட “அப்போது ஏறக்குறைய மாலை நான்கு மணி” (யோவா 1:39) என்று இனிதே நினைவுகூருகின்றனர். ஆண்டவருடைய தோழமையை அனுபவித்து, நோயாளிகளை அவர் குணப்படுத்தியது, பாவிகளோடு உணவருந்தியது, பசித்தோருக்கு உணவளித்தது, புறவினத்தாரோடு அருகே நெருங்கி சென்றது, தூய்மையற்றவர்களைத் தொட்டது, தேவையிலிருப்போருடன் தம்மை அடையாளப்படுத்திக்கொண்டது, மலைப்பொழிவில் பேறுபெற்றவர்களை முன்மொழிந்து புதிய வகையில் அதிகாரத்தோடு கற்பித்தது என அவரைக் கூர்ந்து கவனித்தது. அவர்களில் அழியா முத்திரையை ஏற்படுத்தி, பேராச்சரியத்தைத் (amazemen) தூண்டியெழுப்பி, பரந்துபட்ட மகிழ்ச்சியையும் எல்லாவற்றிற்கும் மேலாக நன்றியுணர்வையும் அவர்களுக்குள் ஏற்படுத்தியது. இறைவாக்கினர் எரேமியா இந்த அனுபவத்தை, நம் இதயத்தில் ஆண்டவருடைய செயலாற்றல்மிக்க பிரசன்னத்தின் தகிக்கும் ஒரு வகை விழிப்புணர்வு என்று விவரிக்கிறார்; அது தியாகங்களையும் தவறான புரிதல்களையும் கொண்டிருந்தபோதும், மறைத்தூதுப் பணிக்கு நம்மை அது தூண்டுகிறது (காண்க. 20:7-9). அன்பு என்பது எப்போதும் செயல்பாட்டில் இருக்கிறது; “நாங்கள் மெசியாவைக் கண்டோம்“ (யோவா 1:41) என்ற வியப்புமிகுந்த, நம்பிக்கை நிறைந்த செய்தியைப் பகிர்ந்துகொள்ள நம்மைத் தூண்டுகிறது.

இயேசுவுடன், நாமும் வித்தியாசமான காரியங்களை பார்த்திருக்கிறோம்; கேட்டிருக்கிறோம்; அனுபவித்திருக்கிறோம். இப்போதும்கூட, அவர் எதிர்காலங்களைத் தொடங்கி வைத்திருக்கிறார்; நம் மானுடத்தின் மறக்கப்பட்ட பரிமாணத்தை, அதாவது, அன்பில் மட்டுமே காணப்படக்கூடிய நிறைவுக்காகவே நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் (அனைவரும் உடன்பிறந்தோரே, எண். 68) என்பதை, நமக்கு அடிக்கடி நினைவுப்படுத்துகிறார். இறைநம்பிக்கையைத் தட்டி எழுப்புகிற ஓர் எதிர்காலம் புதிய முன்னெடுப்புகளைத் தூண்டும் திறன்மிக்கது; தங்களுடைய சொந்த பலவீனத்தையும் அதே சமயம் பிறருடைய பலவீனத்தையும் ஏற்றுக்கொண்டு கற்றுக்கொள்கிற, சகோதரத்துவத்தையும் சமூக நட்புணர்வையும் வளர்த்தெடுக்கிற நம்முடைய சமூகங்களை வடிவமைக்கிறது. (அங்ஙணமே., 67). ஆண்டவரே நம்மை முதன்முதலாக அன்புச் செய்தார் என்பதை நன்றியுணர்வுடன் மீண்டும் நினைவுகூர்கிறபோதெல்லாம் இத்திருஅவைச் சமூகம் அதனுடைய அதிஉன்னத சிறப்பை வெளிப்படுத்துகிறது. (காண்க. 1 யோவா 4:19). ஆண்டவருடைய இந்த ஒருதலைச்சார்பான அன்பு நம்மை ஆச்சரியப்படுத்துகிறது; நம்மால் திணிக்கப்படாத அல்லது சொந்தம் கொள்ள இயலாத அதனுடைய இயல்பால் ஆச்சரியமடைகிறோம். .. .. கைமாறு கருதாத (பிரதிபலன் பாராத) இந்தப் புதுமை, உள்நோக்கமற்ற தற்கையளிப்பு ஆகிய இத்தகைய வழியில்தான் மலரக்கூடும். பகுத்தறிதல் மற்றும் கணித்தலின் விளைவாக மறைத்தூதுப்பணிக்கான பேரார்வம் என்பதைப் பெற இயலாது. மறைத்தூதுப் பணிக்கான நிலையில் இருப்பதென்பது நன்றியுணர்வின் பிரதிபலிப்பே ஆகும். (திருத்தந்தையின் மறைத்தூது கழகங்களுக்கான செய்தி, மே 21, 2020).

இப்போதும் கூட, இவை அனைத்தும் எப்போதும் சுலபமான ஒன்று இல்லை. தொடக்கக்கால கிறிஸ்தவர்கள் பகைமைக்கும் நெருக்கடிக்கும் மத்தியில் இறைநம்பிக்கை நிறைந்த வாழ்க்கையை தொடங்கினர். புறந்தள்ளப்பட்ட அனுபவங்களும் உள்ளார்ந்த மற்றும் வெளியார்ந்த போராட்டங்களுடன் கூடிய சிறைத்தண்டனைகளும் அவர்கள் பார்த்தவை கேட்டவை அனைத்திற்கும் முரண்பட்டு, ஏன் இல்லையென்று மறுக்கப்படுவதற்கும் உரியது போன்று தோன்றுகிறது. இருந்தபோதிலும், ஓர் அடி பின்வாங்குவதற்கு இட்டுச் செல்லும் துன்பம் மற்றும் தடையைவிட, அல்லது அது அவர்களை விழுங்குவதைவிட, அந்த அனுபவங்கள்தாம் பிரச்சனைகளையும், மோதல்களையும் துயரங்களையும் மறைத்தூதுப் பணிக்கான வாய்ப்பாக மாற்ற அவர்களைத் தூண்டியது. ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரையும் ஆண்டவரின் ஆவியால் திருப்பொழிவுச் செய்வதற்கான உரிமைப்பேறான தருணமாக அந்த குறைபாடுகளும் தடைகளும் மாறின. இந்த விடுதலைக்கானச் செய்தியிலிருந்து எதுவும் எவரும் விலக்கிவைக்கப்படவில்லை.

மிக எளிதில் அடையும் விதத்தில் எப்போதும் கொண்டிருக்கிற மறைத்தூது சீடர்களின் நூலான திருத்தூதர்பணி நூலில், இவை அனைத்திற்கும் ஒரு தெளிவானச் சான்றை நாம் கொண்டிருக்கிறோம். தூய ஆவியார் மட்டுமே நல்கக் கூடிய மகிழ்ச்சியைத் தட்டியெழுப்பி. நற்செய்தி போதிக்கப்பட்டபோது எப்படி அதன் நறுமணம் பரவியது என்பதை நாம் அங்கே வாசிக்கிறோம். ‘எந்தச் சூழ்நிலையிலும், ஏன் வெளிப்படையான பின்னடைவுகளுக்கு மத்தியிலும் கடவுள் செயல்படக்கூடியவராக இருக்கிறார் என்ற உறுதிபாட்டிலும், ‘கடவுளிடம் தங்களையே ஒப்படைக்கும் எவருக்கும் நற்கனி தருவார் என்ற உறுதிபாட்டிலும் வளரும்பொருட்டு, கிறிஸ்துவை உறுதியாகப் பற்றிக்கொள்வதால் இன்னலைத் தாங்குவதற்கு நமக்கு இத்திருத்தூதர் பணி நூல் கற்பிக்கிறது. (நற்செய்தியின் மகிழ்ச்சி, 279).

உண்மையில் நமக்கு இதே நிலை தொடர்கிறது: நம் காலமும் எளிதானது அல்ல. இந்தப் பெருந்தொற்றானது பலவற்றை முன் கொணர்ந்திருக்கிறது; மேலும் எண்ணற்ற மக்களால் அனுபவிக்கப்படும் துன்பம், தனிமை, வறுமை, அநீதிகளை அதிகரித்துள்ளது. நம்முடைய போலியான பாதுகாப்பு முகத்திரையை அகற்றி, கையறுநிலையையும் நம்மிடையே சப்தமின்றி வளர்ந்துவரும் இரு துருவநிலையையும் வெளிப்படுத்தியுள்ளது. மிகவும் பலவீனமானவர்களும் நலிவுற்றவர்களும் இதனை மென்மேலும் உணரத் தொடங்கியுள்ளனர். நாங்கள் ஊக்கமின்மையையும், ஏமாற்றத்தையும் களைப்பையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நம்பிக்கையை அடக்கி ஒடுக்கி வளர்ந்து வரும் எதிர்மறை நிலையிலிருந்து எங்களைப் பாதுகாக்க முடியவில்லை. எங்கள் சார்பில் இருப்பினும் ‘‘நாங்கள் எங்களைப்பற்றி அல்ல; இயேசு கிறிஸ்துவைப் பற்றியே அறிவிக்கிறோம். அவரே ஆண்டவர் எனப் பறைசாற்றி வருகிறோம். நாங்கள் இயேசுவின் பொருட்டு வந்த உங்கள் பணியாளர்களே’ (2கொரி 4:5). இதன் விளைவாக, நம் இதயங்களில் எதிரொலித்து நாம் பறைசாற்றுகிற வாழ்வின் ஆற்றல் வாய்ந்த செய்தியான ‘அவர் இங்கு இல்லை உயிர்த்து விட்டார்’ (லூக் 24: 6) என்பதை நமது சமூகங்களிலும் மற்றும் குடும்பங்களிலும் கேட்க முடியும். இந்த நம்பிக்கைச் செய்தி துணிபுவாதத்தின் (determinism) அனைத்து வடிவங்களையும் அதனால் தொடப்படுவதற்கு தங்களை அனுமதிக்கும் அனைவரையும் தகர்த்தெறிந்து, எழுவதற்கு தேவையான சுதந்திரத்தையும் தைரியத்தையும் வழங்குகிறது; கருணையைக் காட்டுவதற்கு சாத்தியமான ஒவ்வொரு வழியையும், சாலையின் மருங்கில் எவரையும் கைவிடாத நெருக்கமான, நமக்கான இறைநெருக்கத்தின் அருளடையாளத்தைப் (Sacramenta) படைப்புதிறனோடு தேடுகிறது.

ஆரோக்கியமான சமூக இடைவெளி என்ற பெயரில் கண்டு - கொள்ளாமையையும் அக்கறையின்மையையும் மாறுவேடமிட்டு நியாயப்படுத்துகிற சோதனை மிகுந்த இப்பெருந்தொற்று நாட்களில், கருணைமிக்க மறைத்தூதுப்பணிக்கான அவசரத் தேவை உள்ளது. இது போதுமான இடைவெளியை சந்திப்பதற்கான, அக்கறை கொள்வதற்கான, முன்னேற்றத்திற்கான ஒரு வாய்ப்பாக மாற்றக்கூடும். நாங்கள் கண்டதையும் கேட்டதையும் (திப 4:20), நாங்கள் அனுபவித்த இரக்கத்தையும், நம்பகத்தன்மைக்கான ஆதாரமாக இருத்தி, நமது காலம், நமது ஆற்றல், நமது ஆதாரங்களுக்கு தகுதியான தோழமையும் சார்புநிலையும் மிக்க ஒரு சமூகத்தைக் (அனைவரும் உடன்பிறந்தோரே, 36) கட்டமைப்பதற்கான ஒரு பகிரப்பட்ட பேரார்வத்தை மீண்டும் நம்மைக் கண்டடையச் செய்கிறது ‘எதுவும் மாறுவதில்லை; ஒவ்வொன்றும் அப்படியே நீடிக்கிறது’ என்ற ஐயவாதத்தின் (skepticism) மிகவும் கீழான நிலைக்குள் நாம் மூழ்காதிருக்கச் செய்யும் சாக்குப்போக்குகளிலிருந்து ஆண்டவருடைய வார்த்தை தினமும் நம்மைக் காப்பாற்றி மீட்கிறது. எந்த ஒரு முக்கியமான விளைவையும் பார்க்காவிட்டால், தங்களுடைய பாதுகாப்பு, வசதிகள், மகிழ்ச்சி ஆகியவற்றை ஏன் கைவிடவேண்டும் என்று வியப்பவர்களுக்கு, நம்முடைய பதில் எப்போதும் ஒரே மாதிரியே இருக்கும். ‘இயேசு கிறிஸ்து பாவத்தையும் சாவையும் வென்று தற்போது வல்லமையுள்ளவராக இருக்கிறார். இயேசு கிறிஸ்து உண்மையிலேயே வாழ்கிறார் (நற்செய்தியின் மகிழ்ச்சி 275). நாமும் உயிருள்ளவர்களாக, உடன்பிறப்புக்களாக, நம்பிக்கையின் செய்தியை பேணி வளர்த்து, அதை பகிர்ந்து கொள்ளும் ஆளுமை உள்ளவர்களாக இருக்க இயேசு விரும்புகிறார். நாமும் சகோதரத்துவத்துடன், இந்த நம்பிக்கைச் செய்தியைப் போற்றிப் பேணி, பகிரும் திறனுடன் வாழவேண்டும் என்று விரும்புகிறார். இன்றையச் சூழலில், ஆண்டவரால் திருப்பொழிவுச் செய்யப்பட்ட நம்பிக்கையினுடைய மறைத்தூதுப் பணியாளர்கள் எவரும் தம்மைதாமே மீட்டுக்கொள்ள இயலாது என்ற இறைவாக்கினருக்குரிய நினைவூட்டுதலை வழங்குவார்கள்.

“நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” (திப 4:20) என்று முழுமையான உறுதிபாட்டுடன் நாமும் கூட திருத்தூதர்களைப்போல முதல் கிறிஸ்தவர்களைப் போல சொல்ல முடியும். ஆண்டவரிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட ஒவ்வொன்றும் நன்குப் பயன்படுத்தப்படுவதற்கும் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இயேசுவின் ஆற்றலை திருத்தூதர்கள் கண்டு, கேட்டு, தொட்டுணர்ந்தது போல (காண்க. 1 யோவா 1: 1-4), நாமும் தினமும் கிறிஸ்துவினுடைய துயரமிக்க, மாட்சிமிக்க சதையை தொட்டுணர இயலும். அங்கே நாம் சந்திக்கும் ஒவ்வொருவருடனும் நம்பிக்கையின் அமைப்பை, நம் பக்கம் ஆண்டவர் இருக்கிறார் என்ற உறுதியான அறிவைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய தைரியத்தைக் கண்டடையமுடியும். கிறிஸ்தவர்களாக நாம், ஆண்டவரை நமக்கு மட்டும் கொண்டிருக்க முடியாது; திருஅவையின் நற்செய்தி அறிவிக்கும் மறைத்தூதுப்பணியானது நம்முடைய உலகை மாற்றுவதிலும் இப்படைப்பைப் பராமரிப்பதிலும் வெளியார்ந்த நிறைவைக் காண்கிறது.

நம் ஒவ்வொருவருக்குமான ஓர் அழைப்பு

இவ்வாண்டிற்கான உலக மறைத்தூது நாளுக்கான கருப்பொருள் “நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” (திப 4:20) என்பதுதான். இது நம் ஒவ்வொருவரையும் ‘சொந்தம்‘ கொண்டாடி நமதாக்கிக் கொள்ளவும் நம் இதயங்களில் நாம் எதைத் தாங்கியிருக்கிறோமோ அதை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கவும் பணிக்கிறது. மறைத்தூதுப் பணி என்பது திருஅவையின் ஓர் அதிகார முத்திரையாக அதாவது, அவள் இருப்பதே நற்செய்தி அறிவிப்பதற்குத்தான் ( புனித ஆறாம் பவுல், இன்றைய உலகில் நற்செய்தி அறிவிப்பு 14). நம்முடைய இறைநம்பிக்கை வாழ்வு பலவீனமடைகிறது; அதன் இறைவாக்கினருக்குரிய ஆற்றலையும் நாம் தனிமைப்படுத்தப்பட்டு, சின்னஞ்சிறிய குழுக்களாக பின்வாங்கும்போது அது பேராச்சரியத்தையும் நன்றியுணர்வையும் தூண்டியெழுப்பும் அதன் திறனையும் இழக்கிறது. இயல்பாகவே, இறைநம்பிக்கை வாழ்வு என்பது எங்கும் எவரையும் ஆரத்தழுவுவதற்கும் தோழமை உணர்வில் (openness-cordialit) வளர்வதற்குமதான் அழைக்கிறது. ஓர் உயர்ந்தோர் குழாமாக மாறும் சோதனைக்கு தங்களைக் கையளிப்பதிலிருந்து முதல் கிறிஸ்தவர்கள் விலகி, ஆண்டவர்தம் அழைப்பான ‘இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்னும் நற்செய்தியை உலக நாடுகளிடையே சென்று, அவர்கள் கண்டதற்கும் கேட்டதற்கும் ஏற்ப, சான்று பகர்வதற்கான, புதிய வாழ்வை வழங்கும் அவர்தம் அழைப்பாலும் ஆண்டவராலும் தூண்டப்பெற்றனர். மற்றவர்கள் இவர்களுடைய முயற்சி மற்றும் தியாகத்தின் பலனை அனுபவிக்கும் விதத்தில் தாராள உள்ளத்துடனும் நன்றியுணர்வுடனும் பெருந்தன்மையுடனும் அறிவின் விதைகளை விதைப்பவர்களுக்கு உரிய எடுத்துக்காட்டுடன் செய்துள்ளனர். மிகவும் பலவீனமானவர்கள், குறைகள் நிறைந்தவர்கள், மனக்கலக்கம் அடைந்தவர்கள்கூட அவர்களுக்கே உரிய வழியில் மறைத்தூதர்களாக இருக்க முடியும். நன்மைத்தனம் பல்வேறு குறைபாடுகளுடன் இருந்தாலும் அது எப்போதும் பகிரப்படவேண்டும். (கிறிஸ்து வாழ்கிறார் 239) என்பதை நான் நினைத்துப்பார்க்க விழைகிறேன்.

அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை நாம் கொண்டாடும் உலக மறைபரப்பு நாளில், பெருந்தன்மைமிக்க, மகிழ்ச்சியான திருத்தூதர்களாக இருப்பதற்கான நம்முடைய திருமுழுக்கு வாக்குறுதியைப் புதுபிப்பதற்கு நமக்கு உதவிட, தங்களுடைய சாட்சிய வாழ்வு வாழ்ந்தவர்கள் அனைவரையும் நாம் நன்றியுடன் நினைவுகூர்வோம். நெஞ்சுரத்துடன் தங்களுடைய வீட்டையும் குடும்பத்தையும் பின்னால் விட்டுவிட்டு, நற்செய்தியின் மீட்பளிக்கும் செய்திக்கு ஆர்வம்கொண்ட இடங்களுக்கும் மக்களுக்கும் நற்செய்தியைக் கொணர்ந்தவர்களை சிறப்பாக நாம் நினைவுகூர்வோமாக.

அவர்களுடைய மறைத்தூதுநிறை சாட்சியத்தை ஆழ்ந்து தியானித்து, நமக்கு நாமே ஊக்கம் பெற்று, “தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள் (லூக் 10:20) என்று இறைஞ்சுவதற்கு நாம் தூண்டப் பெறுவோம். மறைத்தூதுக்கான அழைப்பு என்பது இறந்தகாலத்திற்குரியது அல்ல; அல்லது முற்காலத்திலிருந்து செயல்முறைக்கு ஒவ்வாத பேச்சின் எச்சமும் அல்ல; இன்றும்கூட இயேசுவுக்கு இறையழைத்தலை அனுபவிக்கும் திறன்மிக்க இதயங்கள் தேவைப்படுகிறது; நமது உலகின் கடையெல்லைவரைக்கும் கருணையின் தூதர்களாகவும் முகவர்களாகவும் செல்வதற்கு வலியுறுத்துகிற உண்மையான காதல் கதையைப் போல தங்கள் இறையழைத்தலை அனுபவிக்கும் திறன்மிக்க இதயங்கள் தேவைப்படுகிறது.

அவர் இந்த அழைப்பை ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வழிகளில் தெரிவிக்கிறார். நம்மைச் சுற்றியுள்ள, நம் நகரங்களின் அல்லது நம்முடைய சொந்த குடும்பங்களின் அனைத்து கடையெல்லைகளையும் நாம் நினைத்துப்பார்க்க வேண்டும்; அன்புச் செய்வதற்கான உலகளாவிய தாராளக்குணத்திற்கு இன்னொரு பரிமாணம் உண்டு; இது புவியியல் சார்ந்ததன்று; மாறாக, இருத்தல் சார்ந்தது. எப்போதும், சிறப்பாக, இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில், உடல்ரீதியாக நமக்கு அருகில் இருந்தபோதும், நம்முடைய நல வட்டாரத்தில் அங்கமாக இப்போது இல்லாதவர்களை நாம் சென்றடைவதற்கு, நாம் நம்முடைய வட்டத்தை, விரிவுப்படுத்துவதற்கான அன்றாடத் திறனை வளர்த்துக்கொள்வது என்பது மிகவும் இன்றியமையாததாகும். (காண்க. அனைவரும் உடன் பிறந்தோரே. 97). மறைத்தூதுப் பணியில் இருப்பதென்பது, கிறிஸ்து செயல்படுவதுபோல நினைப்பதற்கு விரும்புவது. நம்மைச் சுற்றியுள்ளவர்களும் என்னுடைய சகோதரர்களே, சகோதரிகளே என்று அவருடன்சேர்ந்து நம்புவது ஆகும். அவர்தம் கருணைமிக்க அன்பு நம்முடைய இதயங்களைத் தொட்டு, நம் அனைவரையும் உண்மையான மறைத்தூது சீடர்களாக்குவதாக.

முதல் மறைத்தூது சீடரான அன்னை மரியா, நம் நாடுகளில் உப்பாக, ஒளியாக விளங்குவதற்கு, திருமுழுக்குப் பெற்ற அனைவருக்குள்ளும் பேரார்வத்தை அதிகரிப்பாராக.

திருத்தந்தை பிரான்சிஸ்

!Mission  என்பது ‘மறைத்தூதுப் பணி’ என்று தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.