Namvazhvu
அருள்பணி. எம். ஏ. ஜோ, சே.ச. குறையாத அன்பு
Friday, 19 Nov 2021 11:22 am
Namvazhvu

Namvazhvu

சத்யா: என்னுடைய நெருங்கிய சினேகிதிகள்ள ஒருத்தி சுதா. இவ சுதாவோட அக்கா. இவ பேரு சுபத்ரா. இவ ஒருத்தனோட சில வருஷமா நெருங்கிப் பழகினா. ஆனால்...

சுந்தர்: நீங்களே சொல்லுங்க சுபத்ரா.

சுபத்ரா: அவனும் நானும் சுமார் அஞ்சு வருஷமா பழகினோம். நான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறப்போ அவன் தேர்ட் இயர் படிச்சான். எனக்கு அவனைப் பிடிச்சிருந்தது. ஆனால், அவன்தான் முதலில் என்னை லவ் பண்றதாச் சொன்னான். நான் ஏத்துக்கிட்டேன். அதுக்கு பிறகு நாங்க சுத்தாத இடம் இல்லை.

சத்யா: காலேஜில எல்லாருக்கும் நீங்க ரெண்டு பேரும் காதலர்கள்னு தெரியுமில்லையா?

சுபத்ரா: தெரியும். ஒரு வருஷத்துல ரெண்டு பேர் வீட்லயும் தெரிஞ்சிருச்சு. ஆள் யார், என்னன்னு தெரிஞ்ச பிறகு ரெண்டு வீட்டிலயும் மறுப்பு சொல்லல.

சுந்தர்: கொஞ்சம் பொறுங்க. நீங்க சேர்ந்து ஊர் சுத்துனப்போ, சாரி, நீங்க லவ் பண்ணப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறதில உறுதியாக இருந்தீங்களா?

சுபத்ரா: ஆமா. நான் எத்தனையோமுறை நேரடியாகவே கேட்டிருக்கேன். ஒவ்வொருமுறையும்நிச்சயமா. இத்தனை நாள் இப்படிப் பழகின பிறகு நான் எப்படி இன்னொரு பெண்ணை கல்யாணம் பண்ணிக்க முடியும்?”னு தான் சொல்லுவான்.

சத்யா: அவன் காலேஜ் முடிச்ச பிறகு?

சுபத்ரா: காலேஜ் முடிக்கிறதுக்கு முன்னாடி கேம்பஸ் இன்டர்வியூல வேலை கிடைச்சு வேலையில சேர்ந்துட்டான். அதுக்குப் பிறகும் எதுவும் மாறல. நான் தேர்ட் இயர் எக்ஸாம் எழுதறதுக்கு முன்னாடி அவனுக்கு அமெரிக்காவில வேலை கிடைச்சது. நான் போக வேண்டாம்னு பிடிவாதமாச் சொன்னேன்.

சுந்தர்: ஏன்?

சுபத்ரா: “நான் தேர்ட் இயர் முடிச்சவுடனே வீட்ல பேசி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடலாம். கல்யாணம் முடிஞ்ச பிறகு நீ போய் வேலையில் சேரு. பிறகு நானும் வந்து சேர்ந்துக்கிறேன்னு சொன்னேன்.

சத்யா: அவன் கேக்கலையா?

சுபத்ரா: அவனுக்கு வெயிட் பண்ண இஷ்டம் இல்ல. வெயிட் பண்ணா வேலை போயிடுமோன்னு பயந்தான். அதனால என்னை அழ வெச்சிட்டுப் போயிட்டான்.

சுந்தர்: நீங்களும் அங்கு ஏதாவது வேலைக்கு ட்ரை பண்ணியிருக்கலாமே?

சுபத்ரா: எவ்வளவோ முயன்றும் கிடைக்கவே இல்ல. அதனால இங்கேயே வேலைக்குச் சேர்ந்தேன். ஆறு மாசத்துக்கு முன்னாடி அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்.

சத்யா: அடப்பாவி!

சுந்தர்: அமெரிக்கப் பெண்ணா இல்ல அங்கே போயி வேல பாக்குற இந்தியப் பொண்ணா?

சுபத்ரா: இந்தியப் பொண்ணுதான்.

சுந்தர்: எதனால அப்படி ஆச்சுன்னு ஏதாவது அந்த ஆள் சொன்னாரா?

சுபத்ரா: இல்ல. மொத்தமா என்னைக் கட் பண்ணிட்டான்.

சத்யா: சரி, இன்னும் அவனை நினைச்சு ஏங்குறியா? எதுக்கு இந்த மாதிரி பயலுகளை நினைச்சு ஏங்கணும்?

சுபத்ரா: ஏக்கம் எல்லாம் எப்பவோ போயிருச்சு. காதல் சுத்தமா கரைஞ்சு போச்சு. ஆனா பயங்கரமா கோபம் வருது. முதல்ல அவன் மேலே. அடுத்து அவங்க அப்பா, அம்மா, தம்பி மேல. அவங்க எல்லாத்துக்கும் தெரியும் இல்ல நாங்க ரெண்டு பேரும் பழகினது? இவங்க எல்லாம் என்ன பண்ணிட்டு இருந்தாங்க? என் மேலயும் கோபம் தான். இப்படிப்பட்டவனையா நம்ம இவ்வளவு நாளா காதலிச்சோம்னு.

சத்யா: அவன் கல்யாணத்துக்குப் பிறகு அவனைப் பார்த்தியா?

சுபத்ரா: ரெண்டு வாரத்துக்கு முன்னால பார்த்தேன். லீவுக்கு வந்திருப்பான் போல இருக்கு. அவன் ஒய்ஃபும் கூட இருந்தா. எனக்கு வந்த கோபத்தில, போய் அவன் முன்னால நின்னு, எல்லாரும் பார்க்கிற மாதிரி நாலு அறை விடலாமானு தோணுச்சு. அம்மா கூட இருந்தாங்க. அவங்களக் கூட்டிட்டு வெளியே வந்துட்டேன். இந்த ஆத்திரம், கோபம் தான் இப்போ பிரச்சனை.

ஆசான்: தமிழ்ச்செல்வன் என்றொரு எழுத்தாளர் எழுதிய அருமையான கதை ஒன்று இருக்கிறது. மார்க்சிய, கம்யூனிஸ்ட் சிந்தனைகளால் உரம் பெற்ற இவர் ஒரு சமூகப் போராளி.

சுந்தர்: கதையோட பேரு?

ஆசான்: ‘வெயிலோடு போய்’...

சத்யா: எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே! இது ஒரு திரைப்படமா வந்ததா?

ஆசான்: ஆம். திரைப்படத்தின் பெயர்பூ.’ கதை வெளிவந்து பல்லாண்டுகள் கழித்து, இயக்குனர் சசியின் இயக்கத்தில் திரைப்படமாய் வந்தது. கதையின் நாயகி மாரியம்மாள் என்கிற அப்பாவி கிராமப் பெண். அவளது தாயின் ஒரே தம்பியின் மகன் தங்கராசு.

சுந்தர்: மாமாவோட பையன்.

சத்யா: அவளுக்கு முறை மாப்பிள்ளை.

ஆசான்: தங்கராசு மச்சானுக்குத் தான் மாரியம்மா என்று தொடக்கத்திலிருந்தே எல்லாரும் முடிவு செய்துவிட்டார்கள். இதுதானே முறை என்று எல்லாரும் நினைத்துக் கொண்டார்கள். தங்கராசும் மாரியம்மாவும் கூட அப்படித்தான் நினைத்திருந்தார்கள். எனவே இரண்டு பேரும் எந்நேரமும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தார்கள். இதெல்லாம் அவள் நான்காம் வகுப்புக்கு வரும்வரை தான். மாரியம்மா நான்காம் வகுப்பு படித்த போது இவளது மாமனுக்கு புதுக்கோட்டைக்கு மாற்றம் வந்தது.

சுந்தர்: அதாவது தங்கராசோட அப்பாவுக்கு.

ஆசான்: ஆமாம். அதனால் தங்கராசுவும் அவனது குடும்பமும் ஊரை விட்டுக் கிளம்பியபோது மாரியம்மாள் போட்ட கூப்பாட்டை இன்றைக்கும் கிழவிகள் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்கள். ‘நானும் கூட வருவேன்என்று தெருவில் புரண்டு, கையை காலை உதறி ஒரே கூப்பாடு. அதைச் சொல்லிச் சொல்லி ஊர்ப் பெண்கள் அவளிடம், ‘என்னடி உன் புருஷன்காரன் என்னைக்கு வாரான்?’ என்று கேலி பேசுவார்கள்.

ஆனால் மாரியம்மாள் அதை எல்லாம் பொருட்படுத்தவே இல்லை. தன் மச்சான் தங்கராசுவுக்கு எதெல்லாம் பிடிக்காது என்று அவள் நினைத்தாளோ அதை எல்லாம் கவனமாய் ஒதுக்கினாள். மச்சான், மச்சான் என்று அவன் நினைவாகவே இருந்த மாரியம்மாபெரிய மனுஷியானதும் அவனைப் பற்றி நினைக்கவே அவளுக்கு வெட்கமாகவும் கூச்சமாகவும் இருந்தது. அவனைப் பற்றிய நினைவுகளோடு கனவுகளும் இப்போது சேர்ந்து கொண்டன.

தீப்பெட்டி ஒட்டும் வேலைக்காக டவுனுக்குப் போய் வேலை செய்த போதும் அவளுக்கு மச்சானின் நினைப்பு சிறிதும் மாறவில்லை. காலம் கடந்தாலும், பஞ்சம் வந்தாலும், அப்பா இறந்து அன்றாடப் பிழைப்பே சிரமமாகி விட்டாலும் மச்சானைப் பற்றிய அவளது எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் எதுவும் மாறவில்லை. அவனைப் பற்றிய செய்திகளையெல்லாம் சேர்த்துச் சேர்த்து மனதிற்குள்ளே பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டாள் மாரியம்மா.

அவளது நம்பிக்கையில் இடி விழுந்தது ஒரு நாள். மாமனும் அத்தையும் அவளின் ஊருக்கு வந்தார்கள். தன்னைப் பெண் கேட்டு பரிசம் போடத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று மாரியம்மா நினைத்திருந்தபோது, அவர்கள் வேறு இடத்தில் பெண் பார்த்து, திருமணம் நிச்சயித்துவிட்டு, திருமணத்திற்குத் தங்களை அழைக்க வந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. இப்படிச் செய்ததற்கு எந்த விளக்கமும் சொல்லாமல் அவள் அண்ணனிடம் கல்யாணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே வந்து எல்லா வேலைகளையும் பார்க்க வேண்டும் என்று வேறு சொல்லி விட்டுப் போனார்கள். அவர்கள் போன பிறகு அண்ணன் கோபத்தில் குதித்தான். தங்கராசுவின் தங்கை கல்யாணத்திற்கு எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு தான் செய்ததற்குக் காரணம் இது நாளைக்கு நமது தங்கச்சி வந்து வாழப் போற வீடு. நம்ம வந்து ஒத்தாசை செய்யலைன்னா வேறு யாரு செய்வா என்று நினைத்துச் செய்ததாகவும், ஆனால் இப்படி வரதட்சணையாக பெண் வீட்டார் தருவதாகச் சொன்ன நகை நட்டுக்கு ஆசைப்பட்டு, தயக்கமின்றி தங்கை மாரியம்மாவை ஒதுக்கிவிட்டு, இப்படி அந்நியத்தில் போய் திருமணத்தை நிச்சயிப்பார்கள் என்று நினைக்கவே இல்லை என்று கத்தினான்.

படித்து உத்தியோகம் பார்க்கிற மாப்பிள்ளைக்கு தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை செய்ற பெண்ணை எப்படி திருமணம் செய்து வைப்பார்கள்?” என்று கேட்ட தாய், இறந்து போன தன் கணவனின் படத்தின் முன் நின்று அவ்விரவு தன் மனக்குமுறலை எல்லாம் கொட்டி ஒப்பாரி வைத்தாள்.

மாரியம்மாள் மட்டும் இப்படி நடந்த பிறகும் தங்கராசுவைச் சிறிதும் வெறுக்கவில்லை. அவன் திருமணத்திற்கு யாரும் போகக் கூடாது என்று சொன்ன அண்ணனைப் பணிய வைக்க தான் நான்று கொண்டு செத்துப் போவதாக பயமுறுத்திப் போக வைத்தாள். ‘எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்என்று அவள் கண்ணீரோடு மனசு துடிக்க வேண்டிக் கொண்டாள்.

தங்கராசு தன் தங்கைக்கு துரோகம் செய்துவிட்ட கோபத்தில் மாரியம்மாவின் அண்ணன் விரைவில் பக்கத்து ஊரைச் சார்ந்த ஒரு சொந்தக்காரப் பையனைப் பேசி, அவளைக் கல்யாணம் செய்து கொடுத்தான்.

சிறிது காலம் கழித்து, இவர்கள் ஊரில் நடக்கும் காளியம்மன் கோவில் பொங்கலுக்காக மச்சான் தங்கராசு மனைவியோடு வருகிறான் என்று கேள்விப்பட்ட மாரியம்மா வேகாத வெயிலையும் பொருட்படுத்தாது, மதியமே ஓட்டமும் நடையுமாய் வந்து சேர்ந்துவிட்டாள். அவளது கணவன் கடையில் வியாபாரத்தைப் பார்த்துவிட்டு இரவு வருவதாகச் சொன்னான்.

மாலையில் மச்சானின் வீட்டுக்குப் போகிறாள் மாரியம்மா. மச்சானின் மனைவியிடம் அன்பாக, அக்கறையாகப் பேசி, “யக்கா மாசமா இருக்கிகளா?” என்று ஆர்வத்தோடு கேட்கிறாள். அவள் ஒரு நெடிப்புடன், “ஆமா. இப்ப அது ஒன்னுக்கு தான் கேடுஎன்று சலித்துக் கொண்டதும் மாரியம்மாவுக்குப் புரிந்தது. மச்சானின் திருமண வாழ்வில் மகிழ்ச்சி இல்லை என்று புரிந்து கொண்டு, வீடு திரும்பி, குமுறிக் குமுறி அழுகிறாள்.

சுந்தர்: இப்படி அவளை ஏமாத்தி இன்னொருத்தியைக் கல்யாணம் பண்ண பிறகும் அவன் மேல அவளுக்கு துளி வெறுப்போ, கோபமோ வரலியா? ஆச்சரியம்.

சத்யா: காதலா இருந்தது அவனோட கல்யாணத்துக்குப் பிறகு பாசமா, பிரியமா மாறிடுச்சு.

ஆசான்: இப்படி எல்லாராலும் இருக்க முடியாது. தீமை செய்பவர்களைக் கூட, துரோகம் செய்கிறவர்களைக் கூட வெறுக்காமல், மன்னித்து ஏற்கும் கடவுளைப் போல மற்றவர்கள் என்ன செய்தாலும் குறையாமல் அவர்களை அன்பு செய்வோர் மிக மிக அரிது.

சத்யா: ஆனால் தங்கராசு மாதிரி ஆட்கள் அரிதில்லை.

ஆசான்: உண்மைதான். அவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். ஆழ்ந்த உறவுகள் நிரந்தரமானவை என்று அவர்கள் நம்புவதில்லை. காலம், இடம், சூழல் போன்றவற்றை எல்லாம் வென்று அவை நிலைப்பவை என்று அவர்கள் நம்புவதில்லை. வேர் இல்லாத செடியை எப்படி ஒரு சிறு மழைகூட அடித்துச் சென்று விடுகிறதோ, அதுபோல சின்ன மாற்றங்கள், சிரமங்கள் கூட இவர்களின் அன்பை அடித்துக் கொண்டு போய் விடுகின்றன. இத்தகைய மனிதர்களை நம்பி இவர்களை நேசிப்பவர்கள் தான் பாவம்.

சுந்தர்: மாரியம்மா மாதிரி.

சுபத்ரா: சரி, எனக்கு என்ன சொல்றீங்க?

ஆசான்: சுபத்ரா, நீ காதலித்தவன் உன்னை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை மணந்து கொண்டான் என்பதற்காக அவன் மீது அடங்காக் கோபத்தை நீ அடை காத்தால், துன்பம் உனக்குத் தான். அவனுக்கு அல்ல. இது உன் மன நிம்மதியை மட்டுமல்ல; உன் உடல் நலத்தையும் கெடுத்துவிடும். நம்மை விட்டுவிட்டுச் செல்பவர்களைசெல்லுங்கள்என்று நாம் விட்டுவிடப் பழக வேண்டும். அவர்கள் சென்ற பிறகு அவர்கள் நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு கோபப்படுவது, துயரப்படுவது எந்தவிதத்திலும் நமக்கு உகந்ததல்ல. சிரமப்பட்டு வேதனையை விரட்டிவிட்டு, ‘எங்கிருந்தாலும் வாழ்க!” என்பதே நமது நலத்திற்கும் நாளைய வாழ்வுக்கும் நல்லது.