Namvazhvu
​​​​​​​பேரா. S. பிலிப் &பேரா. இம்மாகுலேட் “ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்” (மத் 10: 28)
Thursday, 02 Dec 2021 11:58 am
Namvazhvu

Namvazhvu

இன்று உலகத்தில் சாவு பற்றிய பயம் கவ்விக் கொண்டிருக்கிறது. சிறுவயதில் உள்ள குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டிய நிலை வரும்போது நம்மையும் அறியாமல் பயம் நம்மை ஆட்கொள்கிறது. பத்து குழந்தைகளைப் பெற்றெடுத்து வைத்திருந்த யோபு கூட பயந்து பாதுகாப்பு தேடியிருக்கிறார்.

விருந்து நாள்களின் முறை முடிந்ததும், யோபு அவர்களை வரவழைத்துத் தூய்மைப் படுத்துவார். என் பிள்ளைகள் ஒருவேளை பாவம் செய்து, உள்ளத்தில் கடவுளைத் தூற்றியிருக்கக் கூடும்என்று யோபு நினைத்து, காலையில் எழுந்து அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எல்லார்க்காகவும் எரிபலியை ஒப்புக்கொடுப்பார். யோபு எப்பொழுதும் இவ்வாறு செய்வது வழக்கம் (யோபு 1:5). இதிலுள்ள சிந்தனை உன்னதமானது. நாம் பிள்ளைகளின் ஆன்மாவைக் குறித்து தொடர்ந்து திருப்பலி நிறைவேற்றி, பாதுகாப்பைத் தேடுவது உண்டா? யோபு இவ்வாறு தன் பிள்ளைகளின் பாவங்கள் மன்னிக்கப்பட இறைவேண்டல் செய்து, விடுதலை பெற்றதனால் அவர்களை இழந்தபோது, அவர்களின் ஆன்மாவைக் காத்துக் கொண்டார். அதுமட்டுமல்ல; பிறகு  அவருக்கு ஏழு புதல்வர்களும், மூன்று புதல்வியரும் பிறந்தனர். மூத்த மகளுக்குஎமிமாஎன்றும் இரண்டாவது மகளுக்குக்கெட்டிசியாஎன்றும் மூன்றாவது மகளுக்குக்கெரேன் அப்பூக்குஎன்றும் பெயரிட்டார். யோபின் புதல்வியரைப்போல் அழகுவாய்ந்த நங்கையர் நாடெங்கும் இருந்ததில்லை. அவர்களின் தந்தை (யோபு), அவர்களின் சகோதரர்களோடு, அவர்களுக்கும் சொத்தில் உரிமை கொடுத்தார். அதன்பின், யோபு நூற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தார். தம் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் நான்காம் தலைமுறை வரை கண்டுகளித்தார். இவ்வாறு யோபு முதுமை அடைந்து, பல்லாண்டு வாழ்ந்து இறந்தார்” (யோபு 42:13-17). 

யோபுவின் வாழ்வு கற்றுத்தரும் பாடம் ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கு அஞ்சி நடந்ததால், எல்லாவற்றையும் இழந்ததுபோல் தோன்றினாலும், ஒன்றையும் அவர் இழக்கவில்லை. எல்லாவற்றையும் திரும்பப் பெற்றுக் கொண்டார். அதனால்தான் இயேசு, “ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில், நாளைய கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும்அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்” (மத் 6:33-34) என்று சொல்லித் தருகிறார்.

ஒவ்வொருநாளும் பிள்ளைகளுக்கான பாதுகாப்பிற்காக இறைவேண்டல் செய்ய வேண்டும். குறிப்பாக ஆன்மாவை அழியாமல் பாதுகாக்கும் வழிமுறைகளை அறிந்து செயல்படவேண்டும்.

எதற்கு அஞ்சவேண்டும்?

இயேசுவின் போதனை காலங்களில் மக்கள் ஆயிரக்கணக்காக அவரைப் பின் தொடர்ந்தனர். மூன்று நாட்கள் இரவும், பகலும் இயேசுவுடன் இருந்தவர்களின் எண்ணிக்கை ஐயாயிரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆயினும், லூக்கா 12:1-7 வரையிலுள்ள பகுதியை வாசித்தால்ஒருவரையொருவர் மிதிக்கும் அளவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தபோது இயேசு முதலில் தம் சீடரோடு பேசத் தொடங்கினார். அவர் அவர்களிடம் கூறியது: என் நண்பர்களாகிய உங்களுக்கு நான் சொல்கிறேன்; உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம். நீங்கள் யாருக்கு அஞ்ச வேண்டுமென நான் உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன். கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகாரமுள்ளவருக்கே அஞ்சுங்கள்; ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்என்று சொல்லும் இயேசு, இன்னும் மேலான ஓர் உண்மையைத் தொடர்ந்து நமக்குக் கற்றுத்தருகிறார்.

ஒரு குருவி இலவசம்

மேலே குறிப்பிட்ட பகுதியில்என் நண்பர்களாகிய உங்களுக்குஎன்று சொல்லி, இந்த உண்மையைச் சொல்லிக்கொடுக்கிறார். “யாருக்கு அஞ்சவேண்டும்?” என சொல்லிக் கொடுக்கும்போது, கொன்றபின் நரகத்தில் தள்ள அதிகாரமுள்ளவருக்கே அஞ்சுங்கள் என்று சொல்லுகிறார். இந்த உண்மைகளைச் சொல்லிக் கொடுத்தபின் இன்னுமொரு முக்கியமான செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளதை கவனத்துடன் கண்டுணர அழைக்கிறேன்.

காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா?” (மத் 10: 29 ()) அப்படி என்றால் இரண்டு காசுக்கு எத்தனை குருவிகள்? நான்கு தானே? ஆயினும்இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? (லூக் 12:6) எனும் கேள்வியில் என்ன புரிகிறது? ஒரு சிட்டுக் குருவி இலவசம். அதாவது, “சும்மாகொடுக்கிறார்கள் அதற்கென்று விலையில்லை. எனினும் அவற்றில் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமின்றி தரையில் விழாது (மத் 10: 29 (b)) எனினும் அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே (லூக் 12:6(b)) சிட்டுக்குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே, அஞ்சாதிருங்கள் (மத் 10:31) என்றும் சொல்லப்பட்டுள்ளது.

ஒரு குருவிஇலவசம்ஆயினும் அவற்றின் மீது அக்கறை உள்ள கடவுள் நம்மை மறப்பாரா? இன்னும் ஒரு சிந்தனை அந்தப் பகுதியில் உள்ளது. தினமும் முகத்தைக் கண்ணாடியில் பார்த்து, தலையை சீவி அலங்கரிக்கும்போதெல்லாம் இதை நினைவு கூர வேண்டும். “உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது” (மத் 10:30) “உங்கள் தலைமுடி எல்லாம் கூட எண்ணப்பட்டிருக்கின்றன. அஞ்சாதீர்கள்” (லூக் 12:7()). சிட்டுக் குருவி இலவசமாய் வழங்கப்படுவதைக் காட்டியும், முடிகள் எண்ணப்பட்டிருப்பது பற்றியும் எடுத்துரைக்கும் இந்த செய்தியிலேஅஞ்சாதீர்கள்என்று சொல்வதை மனதில் பதிய வைக்க வேண்டுகிறேன். இவ்வாறு அஞ்சாதீர்கள் என்பதனை தனது போதனையின் முக்கிய சிந்தனையாக பறைசாற்றும் இயேசுஅஞ்சுங்கள்என்று சொல்கிறார் என்றால் அதன் முக்கியத்துவம் நமக்குப் புரிய வேண்டும் அல்லவா?

இரண்டாம் சாவு:

எல்லாவற்றிலும் உன் முடிவை நினைவில் கொள், அவ்வாறெனில் ஒரு போதும் நீ பாவம் செய்யமாட்டாய்” (சீஞா 7:36) என்று எச்சரிக்கையைத் தருகிறார் சீராக் ஞானி. ‘உன் முடிவை நினைத்துப்பார்; பகைமையை அகற்று, அழிவையும் சாவையும் நினைத்துப் பார்; கட்டளைகளில் நிலைத்திரு” (சீஞா 28:6) என்பது ஞானியின் அறிவுரை.

திருவெளிப்பாட்டு நூலிலே இரண்டாம் சாவு பற்றி மூன்று இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.

1. “இந்த முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குபெறுவோர் பேறுபெற்றோர்; அவர்கள் தூயோர் ஆவர். அவர்கள் மீது இரண்டாம் சாவுக்கு அதிகாரம் இல்லை, அவர்கள் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் பணிபுரியும் குருக்களாய் இருப்பார்கள், கிறிஸ்துவோடு ஆயிரம் ஆண்டுகள் ஆட்சிபுரிவார்கள்”(திவெ 20:6)

2. சாவும் பாதாளமும் நெருப்பு ஏரியில் எறியப்பட்டன. இந்த நெருப்பு ஏரியே இரண்டாம் சாவு (திவெ 20:14).

3. ஆனால், கோழைகள், நம்பிக்கை இல்லாதோர், அருவருப்புக்குரியோர், கொலையாளிகள், பரத்தமையில் ஈடுபடுவோர், சூனியக்காரர், சிலைவழிபாட்டினர், பொய்யர் ஆகிய அனைவருக்கும், நெருப்பும் கந்தகமும் எரியும் ஏரியே உரிய பங்கு ஆகும். இதுவே இரண்டாம் சாவு (திவெ 21:8).

இரண்டாம் சாவு நிரந்தரமான இடத்திற்கு இட்டுச் செல்லும். அது மிகவும் கொடுமையானது. இயேசு இது குறித்து சொல்லும் இன்னொரு இடத்தில் ஒரு கை, ஒரு கால், ஒரு கண் இல்லாமல் போனாலும், விண்ணகத்திற்குச் செல்லுங்கள், நரகத்திற்குச் செல்ல வேண்டாம் என்பார் (மாற் 9: 44, 46, 48). ஏனெனில், நரகத்திலே அவர்களைத் தின்னும் புழு சாகாது, நெருப்பும் அவியாது. அதனால்தான் ஆன்மாவையும், உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள் என்பதை மனதில் நிறுத்துங்கள். இந்த எச்சரிக்கை குறித்து நீங்களே விரிவாகத் தேடிக் கற்றுக் கொள்வது நல்லது.                (கதிர் வீசும்)