Namvazhvu
(எசா 62:1-5, 1 கொரி 12:4-11, யோவா 2:1-12)  ஆண்டின் பொதுக்காலம் 2 ஆம் ஞாயிறு    
Tuesday, 11 Jan 2022 12:26 pm
Namvazhvu

Namvazhvu

தீர்ந்தது நிறைந்தது!

பழைய பொருள்கள் விற்கும் ஒரு கடையில் வயலின் ஒன்று பல நாள்களாக விற்காமல் கிடந்தது. விலையைக் குறைத்தாலும் யாரும் வாங்கவில்லை. ‘இதை வைத்து அடுப்பெரிக்கக்கூட முடியாதுஎன்று யாரும் வாங்காமல் ஒதுங்கினர். அந்நேரம் முதியவர் ஒருவர் வந்தார். அந்த வயலினைத் தன் கையில் எடுத்து, தான் வைத்திருந்த துணியால் அதை மெதுவாகத் துடைத்தார். பின் அங்கேயே அமர்ந்து அதை வாசிக்கத் தொடங்கினார். வயலினிலிருந்து புறப்பட்ட இசையைக் கேட்டு கடை வீதியே ஸ்தம்பித்து திரும்பிப் பார்த்தது. வயலினை வாசித்து முடித்த முதியவர் அதை அதே இடத்தில் வைத்துவிட்டுப் போய்விட்டார். அவர் சென்ற சற்று நேரத்தில், ‘அது எனக்கு, அது எனக்குஎன்று அந்த வயலினை வாங்கப் பலர் போட்டி போட்டுக் கொண்டு ஓடி வந்தனர்.

தீர்ந்து போன இசை வயலினில் நிறைந்தது - அந்த முதியவரால்! தீர்ந்து போன திராட்சை இரசம் ஜாடிகளில் நிறைந்தது - நம் இயேசுவால்! நம் வாழ்க்கையில் தீர்ந்து போகும் அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை இன்று நிறைவதும் அவரால்தான் - எப்படி?

இயேசு கானாவூர்த் திருமண விழாவில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றிய நிகழ்வைஇன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். யோவா 2:1-11) காண்கிறோம். யூத மரபில் திருமணம் என்பது எட்டு நாள்கள் நடக்கின்ற ஒரு குடும்ப, சமூக, நட்பு விழா. இதில் மையமாக இருப்பதுதிராட்சை இரசம்.’ உணவுப் பொருள்களில் தயாரிப்பிற்கு அதிக நாள்கள் எடுக்கும் பொருள் திராட்சை இரசம் தான். ஆகையால், ஒரு திருமணம் என்றால் குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்னே திட்டமிட்டு திராட்சை இரசம் செய்யத் தொடங்க வேண்டும். அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் திராட்சை பயிரிடவும் வேண்டும். கானாவூரின் இந்தக் குடும்பம் ஏறக்குறைய ஒரு வருடமாக இந்தத் திருமணத்திற்காகத் திராட்சை இரசத்தை தயாரித்திருக்க வேண்டும். ஏதோ ஒரு காரணத்தால் திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது. இந்தக் குறைவு வெறும் பசி அல்லது உடல்சார் குறைவு அல்ல; மாறாக, சமூக அந்தஸ்தின் குறைவு. திராட்சை இரசம் பரிமாறாத திருமண இல்லம் இகழ்ச்சிக்குரியதாகக் கருதப்படும்.

திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதுஎன்ற நிகழ்வைத் தொடங்கி வைக்கிறார் இயேசுவின் தாய் (யோவான் நற்செய்தியாளர், ‘மரியாஎன்னும் பெயரை தன் நற்செய்தியில் பயன்படுத்தவில்லை). ‘அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்ய முடியும்?’ ‘அம்மாஎன்பது இங்கே பெண்களை மரியாதை நிமித்தம் அழைக்கும் வார்த்தையே அன்றி, ‘தாய்என்ற அர்த்தம் அல்ல; மேலும், தொடர்ந்து, ‘உனக்கும், எனக்கும் என்ன?’ எனக் கேட்கின்றார் இயேசு. ஒருவர் மற்றவரை தொந்தரவு செய்யும்போது, தொந்தரவு செய்யப்படுபவர், தொந்தரவு செய்பவரைப் பார்த்துக் கேட்பதாகவோ (நீத 11:12) அல்லது சம்பந்தப்படாத ஒருவரை ஒன்றில் வலுக்கட்டாயமாக சம்பந்தப்படுத்தும்போது, அவர் கழுவுற மீனுல நழுவுற மீனா ஓடும்போது சொல்வதாகவோ (2 அர 3:13) இச்சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது; பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘எனது நேரம் இன்னும் வரவில்லையே!’ என்கிறார் இயேசு. யோவான் நற்செய்தியில் இரண்டு வகை நேரம் குறிப்பிடப்படுகிறது: ஒன்று, ‘க்ரோனோஸ்’. அதாவது, நாம் அன்றாடம் பயன்படுத்தும் நொடி, நிமிடம், மணி, நாள், வாரம் சம்பந்தப்பட்டது. இதன்படி, இந்த நிகழ்வு நடக்கும் நாள்மூன்றாம் நாள்.’ இரண்டு, ‘கைரோஸ்’. அதாவது, மீட்பு நேரம். இயேசு குறிப்பிடும் நேரம் இந்த இரண்டாம் நேரமே. தான் செயல்படும் நேரம் இன்னும் வரவில்லை என்று இயேசு சொல்வது இரண்டாம் வகை நேரத்தையே குறிக்கிறது.

அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்என்று இயேசுவின் தாய் அங்கிருந்த பணியாளர்களிடம் சொல்கின்றார். சிலுவையின் அடியில் இயேசு தன் தாயை, ‘இதோ! உன் தாய்என்று தன் அன்புச் சீடரிடம் ஒப்படைக்கின்றார். இங்கே, மறைமுகமாக, ‘இதோ! உன் தலைவர்என்று இயேசுவை தலைவராகப் பணியாளர்களிடம் முன்மொழிகின்றார் இயேசுவின் தாய்.

தூய்மைச் சடங்கிற்கென வைக்கப்பட்ட ஆறு கற்தொட்டிகளில் நீர் நிரப்புமாறு சொல்கின்றார் இயேசு. யூத, இசுலாமிய, அல்லது சில இந்து மரபு வழிபாட்டுத்தலங்களுக்குச் சென்றால் வெளியே தண்ணீர்த்தொட்டி இருப்பதை நாம் பார்க்கலாம். இப்போது நவீனமாக திருகு-குழாய்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு சில இடங்களில் தொட்டியில் தண்ணீர் சேமிக்கப்பட்டிருக்கும். உள்ளே செல்பவர்கள் தங்கள் காலணிகளைக் கழற்றிவிட்டு இத்தண்ணீரில் இறங்கி பின் வழிபாட்டிற்குள் செல்வார்கள். கீழை மரபில் உள்ள மற்றொரு பழக்கம் - இரண்டு வகையான தண்ணீரைப் பயன்படுத்துதல்: குடிக்க ஒன்று, சுத்தம் செய்ய மற்றொன்று. குடிக்க வைத்திருக்கும் தண்ணீர் பாதுகாப்பாக இருக்கும். சுத்தம் செய்ய வைக்கப்படும் தண்ணீர் கேட்பாரற்றுக் கிடக்கும். ஆக, காலடிகளைக் கழுவுவதற்குப் பயன்படுத்தப்படும் சுத்தம் குறைந்த தண்ணீர் பந்தியில் ஊற்றிப் பரிமாறப்படும் திராட்சை இரசமாக மாறுகிறது.

இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்என்கிறார் இயேசு. தொட்டிகளில் உள்ள தண்ணீர் திராட்சை இரசமாக மாறியதா, அல்லது பணியாளர்கள் மொண்டு போகும்போது அது மாறியதா என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால், தண்ணீர் திராட்சை இரசமாக மாறுகிறது.

இந்த இரசம் எங்கிருந்து வந்தது என்பதை பணியாளர்களே அன்றி, பந்தி மேற்பார்வையாளர் அறியார் எனப் பதிவு செய்கின்றார் யோவான். ‘எங்கிருந்து வந்தது?’ என்பதற்கான விடை, ‘தொட்டியிலிருந்து,’ அல்லதுஇயேசுவிடமிருந்துஎன்று வாசகர் புரிந்துகொள்ளலாம். பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, ‘நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?’ எனக் கேட்கின்றார். மேலோட்டமாக, இந்தக் கேள்வியை அவர் மணமகனைப் பார்த்துக் கேட்கின்றார். ஆனால், இந்நிகழ்வை வாசிக்கும் ஒவ்வொருவரும், தாமே பந்தி மேற்பார்வையாளராக மாறி, இயேசு என்னும் புதிய மணமகனிடம் கேட்பது போன்று இருக்கிறது.

யோவான் இந்நிகழ்வை முதல் அறிகுறி என அழைக்கின்றார். இயேசு எப்படிப்பட்டவர்? அவர் எதற்காக வந்தார்? என்பதற்கான அறிகுறியாக அவரின் செயல்கள் இருந்தன என்பதைச் சுட்டிக்காட்டத்தான் யோவான் இச்சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். இந்த அறிகுறி வழியாக இயேசுவின் மாட்சி வெளிப்படுகிறது. சீடர்கள் நம்பிக்கை கொள்கின்றனர். ஆக நிகழ்வு ஒன்றுதான். ஆனால், இங்கே, தீர்ந்து போன ரசம் நிறைகிறது. சீடர்களின் ஐயம் தீர்ந்து போய் நம்பிக்கை நிறைகிறது.

எசாயா நூலின் மூன்றாம் பகுதியிலிருந்து (காண். எசா 61:1-5) எடுக்கப்பட்டுள்ள, இறைவாக்குப் பகுதியின் பின்புலம் இஸ்ரயேல் மக்களின் நாடு திரும்புதல். கி.மு. 539ஆம் ஆண்டு பாரசீக அரசன் சைரசு பாபிலோனியாவில் சிறைப்பட்டுக் கிடந்த மக்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்பலாம் என்று கட்டளை பிறப்பிக்கின்றார். திரும்பி வந்தவர்கள் தங்கள் நாடும், நகரும், ஆலயமும் சிதைந்து கிடந்ததைக் கண்டு மிகவும் துயருற்றனர். தரை மட்டமாகக் கிடந்த தங்கள் வீடுகள், ஆலயம், சாம்பலாகக் கிடந்த தங்கள் வயல்கள் என நிலம் வறண்டு கிடந்தது. ‘எல்லாவற்றையும் சீக்கிரம் கட்டி எழுப்பிவிடலாம்என்ற நம்பிக்கை சிறிது சிறிதாகக் கரைய ஆரம்பிக்கிறது. சோர்வும், தோல்வியும், ஏமாற்றமும், சந்தேகமும் கவ்விக் கொள்கிறது. தங்கள் கடவுள் தங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யா? என்ற கேள்வியும் எழ ஆரம்பிக்கிறது. இந்தப் பின்புலத்தில்தான் எசாயாவின் இறைவாக்கு அங்கே உரைக்கப்படுகின்றது. முழு நம்பிக்கையோடும், தடுமாற்றமில்லா உறுதியோடும் எருசலேமின் புதிய மாட்சி பற்றி இறைவாக்குரைக்கின்றார் எசாயா.

ஆண்டவரின் வாயிலிருந்து வரும் புதிய பெயர்என்பதே இறைவாக்கின் மையமாக இருக்கிறது. விவிலியத்தில் பெயர் மாற்றங்கள் இரண்டு பொருள்களைத் தருகின்றன: ஒன்று, பெயர் மாற்றம் பெறுகிற அந்த நபர் புதிய பணிக்கான அல்லது புதிய வாழ்க்கைமுறைக்கான அழைப்பைப் பெறுவார். இரண்டு, புதிய பெயரைத் தருவதன் வழியாகக் கடவுள் அந்த நபரின் மேல் புதிதாக உரிமைக் கொண்டாடுவார். இன்றைய முதல் வாசகத்தை,

() புதிய பெயர் (62:1-4),

() புதிய வாழ்க்கை நிலை (62:5),

() புதிய பாதுகாப்பு (62:6)

என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். யூதர்களின் திருமணக் கொண்டாட்டம் மூன்று நிகழ்வுகளாக நடைபெறும். முதலில், வாக்குறுதி பத்திரம் எழுதப்படும். இரண்டு, மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையே உடன்படிக்கை செய்யப்படும். மூன்று, மணமகனும் மணமகளும் உடலால் இணைவர். இரண்டாவது நிகழ்வான உடன்படிக்கை அல்லது வாக்குறுதி பத்திரத்தில்தான் மனைவியின் பெயர் மாற்றப்படும்.

அதேபோல, இங்கே ஆண்டவரும் இஸ்ரயேலை மணப்பதற்கு முன்னர், தழுவிக்கொள்ளுமுன், அவளுக்கு பாபிலோனிய அடிமைத்தனத்தில் வழங்கப்பட்டஅசுவா’ (‘கைவிடப்பட்டவள்’),’ ஷெமமா’ (‘பாழ்பட்டது’) என்ற பெயர்களை மாற்றி, ‘எப்சி-பா’ (‘என் மகிழ்ச்சி அவளிடம்’), ‘பெயுலா’ (‘மணமுடித்தவள்’) என்ற புதிய பெயர்களை அளிக்கின்றார். நாடிழந்து நிற்கும், இழப்பை சரிசெய்ய முடியாமல் தவிக்கும் இஸ்ரயேல் மக்களை இறைவன் உரிமையாக்கிக் கொண்டு அவர்களுக்குப் புதிய வாழ்க்கை நிலையை வாக்களிக்கின்றார். மணமகளுக்கு பாதுகாப்பு தரும் மணமகன் போல இஸ்ரயேலுக்குப் பாதுகாப்பு தருவார் இறைவன். திருமணத்தில் மணமக்கள் ஒருவர் மற்றவருக்குத் தரும் உரிமை அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பது போல, இறைவன் இஸ்ரயேல் மக்கள் மேல் கொண்டாடும் உரிமை அவர்களின் பாதுகாப்பு அரணாக இருக்கின்றது. இஸ்ரயேல் மக்களின் அடிமைத்தனம் தீர்ந்து போக, இறைவன் தரும் அமைதி அவர்களில் நிறைகிறது.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 1 கொரி 12:4-11) பவுல் கொரிந்து நகரத்திருச்சபையின் பிளவுகளில் ஒன்றானகொடைகள் பிளவுபற்றியதாக இருக்கின்றது. கொரிந்து நகரத் திருச்சபை போட்டி, பொறாமை, பிளவு நிறைந்த சபையாக இருக்கிறது. அதன் பிளவுக்கான பல காரணங்களில் ஒன்றுஅருள்கொடையும்அக்கொடையினால் வரும்திருத்தொண்டும்.’

அருள்கொடைகள் பலவாக இருந்தாலும், அவை ஒரே புள்ளியில் சங்கமிக்கின்றன: அந்தப் புள்ளிக்கு இரண்டு முகங்கள் உண்டு: ஒன்று, ‘ஆவியானவர்என்னும் ஊற்று, இரண்டு, ‘பொதுப்பயன்பாடுஎன்னும் நோக்கம். ஆக, எல்லா அருள்கொடைகளும் ஒரே ஆண்டவரால் தரப்பட வேண்டும். அவை ஒட்டுமொத்த குழுமத்தின் வளர்ச்சிக்குப் பயனுள்ளவையாக அமைதல் வேண்டும். அருள்கொடைகள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடைமை என்றாலும், அது பயன்படுத்தப்பட வேண்டியது பொது நன்மைக்காக. இறைவன் நம்மைக் கொடைகளால் நிரப்புகின்றார் என்றும், அக்கொடைகளைக் கொண்டு நாம் ஒருவர் மற்றவரை நிரப்பக் கடமைப்பட்டுள்ளோம் என்பதும் இங்கே புலனாகிறது.

திராட்சை இரசம் தீர்ந்து போய்க் கிடக்கும்நம் வாழ்க்கை நிலைகள் எவை? அவற்றை இறைவன் எப்படி நிரப்புகின்றார்?

இறைவன் தரும் நிறைவை நாம் காண்பது எப்படி? இறுதி வரை இனிய இரசத்தைக் காத்துக்கொள்ளுதல் சாத்தியமா?

() எதார்த்தம் அறிதல். ‘திராட்சை இரசம் தீர்ந்துவிட்டதுஎன்னும் இயேசுவின் தாயின் அறிதலே அறிகுறிக்கு முதற்படியாக அமைகின்றது. தீர்ந்துவிட்டது என்று நான் உணராத ஒன்றை இறைவன் நிரப்ப முடியாது. சில நேரங்களில், ‘திராட்சை இரசம் தீரவில்லைஎன நாமே போலியான ஆறுதல் கூறுகிறோம் அல்லது நம் தொட்டிகளை வெறும் கானல் நீரால் நிரப்பிக்கொள்கின்றோம். ‘குறைவுஎன்பது ஒரு எதார்த்தம். அதை நினைத்து நாம் கவலைப்படத் தேவையில்லை. வயது மூப்பு, நோய், வறுமை, தனிமை, வேலையின்மை, சோர்வு, உறவுச் சிக்கல் ஆகியவற்றால் நம் வாழ்க்கையில் ஏற்படும் குறைவை ஏற்றுக்கொள்ளுதல் முதல் சவால்.

() கல்தொட்டிகளை நிரப்புதல். வெறும் தொட்டிகளில் இரசம் ஊற்றெடுக்கவில்லை. மாறாக, தண்ணீர் இரசமாக மாறுகின்றது. இறைவன் நம்மை நிறைக்குமுன்னர் நாம் நம் தொட்டிகளை, நம்மிடம் உள்ளதைக் கொண்டு நிறைத்தல் நலம். கொரிந்து நகர மக்கள் தங்கள் தொட்டிகளை அருள்கொடைகளால் நிரப்புகின்றனர்.

() அவர் சொல்வதைச் செய்தல். இயேசு சொன்னதை முதலில் பணியாளர்கள் செய்கின்றனர். பின் தண்ணீர் செய்கின்றது. இயேசுவின் சொல்லின் ஆற்றலை வெளிப்படுத்தும் நிகழ்வாக இது அமைந்துள்ளது. புதிய மணமகன் தன் குரலால் அனைத்தையும் நிறைக்கின்றார். இன்று நாம் அவர் சொல்வதை எங்கெல்லாம், எப்படியெல்லாம் கேட்கின்றோம்?.

நம் தாழ்நிலை கண்டு தள்ளி நிற்பவர் அல்லர் நம் இறைவன். நம் பழைய இயல்பை புதிய இயல்பாக மாற்றக் கூடியவர் அவர். அவரின் நிறைவை அனுபவிக்கும் நாம் அதை நம் வாழ்வால் அறிக்கையிடுதல் நலம் (காண். திபா 96).