Namvazhvu
அருள்பணி. P. ஜான் பால் ஆண்டின் பொதுக்காலம் 4 ஆம் ஞாயிறு   (எரே 1:4-5,17-19, கொரி 12:31-13:13, லூக் 4:21-30)
Tuesday, 25 Jan 2022 12:02 pm

Namvazhvu

திருப்பலி முன்னுரை

மனித குலத்தின் மீது கொண்ட  அன்பின் காரணமாகவே தந்தையாம் இறைவன் தம் ஒரே பேறான மகனை உலகிற்கு அனுப்பினார். ஆனால், அன்பு செய்ய வந்த கடவுளின் திருமகனை இன்றைய நற்செய்தியின்படி,  மலை உச்சியிலிருந்து தள்ளி கொல்லப் பார்க்கிறார்கள். யாவே இறைவன், தன் இஸ்ரயேல் மக்களைத் தெரிந்தெடுத்து அன்பு செய்தார். ஆனால், இஸ்ரயேல் மக்களோ தாங்கள் தான் யாவே இறைவனைத் தெரிந்து கொண்டதுபோல நடந்து கொண்டார்கள். இதை அவர்களுக்கு உணர்த்தவே, ஆண்டவர் இயேசு கிறிஸ்து, புறவினத்து பெண்ணாக கருதப்பட்ட சாரிபாத்து கைம்பெண்ணிடமே இறைவாக்கினர் எலியா அனுப்பப்பட்டார். புறவினத்து ஆணாக கருதப்பட்ட நாமானுக்கே தொழுநோய் நீங்கியது என்று, யாவே இறைவன் புறவினத்து மக்களுக்கு செய்த அற்புதங்களையும் கூறுகிறார். ஆனால், அம்மக்களோ ஆண்டவர் இயேசுவை கீழே தள்ள, இழுத்துச் செல்கிறார்கள். அன்பு செய்பவர்கள் கடவுளை நேரடியாக, தெளிவாக காண முடியும் என்று பவுலடியார் கூறுகிறார். ஆனால், இம்மக்களோ தங்கள் கண்முன்னே நேரில் இருக்கும் இறைவனை கண்டுணராமல் போகிறார்கள். காரணம் அவர்கள் உள்ளத்தில் இருந்த கோபம், ஆணவம், அகங்காரம், வணங்கா கழுத்துடைய தன்மையே ஆகும். நம் உள்ளத்தில் அன்புக்கு பதிலாக இதுபோன்ற தீய எண்ணங்கள் இருக்கும்போது, நம்மால் இறைவனையும், சக உறவுகளையும் காணமுடியாது. எனவே, அன்பால் அனைத்தையும் காணும் வரம் வேண்டி இப்பலியில் பங்கெடுப்போம்.

முதல் வாசக முன்னுரை

யாவே இறைவன், எரேமியா இறைவாக்கினரை திருநிலைப்படுத்தி, தன் வார்த்தைகளை இஸ்ரயேல் மக்களுக்கு உரைக்க அனுப்புகிறார். நான் சொல்வதை ஒன்றுவிடாமல் கலக்கமுறாமல் சொல்;  இல்லையேல் உன்னை கலக்கமுற செய்வேன் என்றுரைக்கும் இறைவனின் வார்த்தையை இம்முதல் வாசகத்தில் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

அன்பே அனைத்திலும்  தலைசிறந்தது. எவர் ஒருவர் அன்பு செய்கிறாரோ, அவர் கடவுளை நேரடியாக, தெளிவாகக் காண்பார். பல்வேறு கொடைகளைப் பெற்றிருந்தாலும் அன்பு செய்யக் கூடிய உள்ளம்  நம்மிடம் இல்லையென்றால், அனைத்துமே வீண் என்றுரைக்கும் இந்த இரண்டாம் வாசகத்தை கேட்போம்.

மன்றாட்டுக்கள்

1. எங்களை வழிநடத்தி வரும் தந்தையே! உம்மால் திருப்பொழிவு செய்யப்பட்டு, உமது திரு அவையை வழிநடத்தும் திருப்பணியாளர்கள், இறைவாக்கினர்கள் எரேமியாவைப்போல கலக்கமுறாமல், உமது வார்த்தையை இவ்வுலகிலுள்ள எல்லா மக்களுக்கும் எடுத்துரைக்க வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இரக்கமுள்ள தந்தையே! நாட்டை ஆளும் தலைவர்கள், உம் திருமகன் இயேசுவைப்போல எல்லா மக்களையும் அன்பு செய்யவும், பணமோ, பதவியோ அல்ல; மாறாக அன்பே தலை சிறந்தது என்பதை உணர்ந்து  நல்லாட்சி புரிய வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எல்லாம் வல்ல தந்தையே! அகங்காரம், ஆணவம், தலைகணம் போன்றவைகளால் எங்கள் குடும்பங்கள் சீர் குலைந்து போகாமல், நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு என்னும் பண்புகளால் எங்கள் இல்லற வாழ்வு மேம்பட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் விண்ணகத் தந்தையே! நாங்கள், எங்கள் ஆன்மீக குருக்களையும், ஞான மேய்ப்பர்களையும் மதித்து, அவர்கள் தருகிற அறிவுரைகளுக்கு கீழ்ப்படிந்து, அவற்றின்படி வாழ்ந்து, ஒரு உண்மையான கிறிஸ்தவ சமுதாயத்தை உருவாக்கிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. அன்புத் தந்தையே! அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அன்பு செய்யும் பண்பு மனிதரிடையே குறைந்து வருகிறது என்பதை காட்டுகின்றன. முடிந்த அளவு நாங்கள், அனைவரையும் அன்பு செய்து, ஒரே குடும்பமாக வாழ்ந்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.