Namvazhvu
குடந்தை ஞானி உக்ரைனின் அமைதிக்காக இந்திய ஆயர்கள் இறைவேண்டல்
Tuesday, 08 Mar 2022 06:19 am
Namvazhvu

Namvazhvu

திருநீற்றுப்புதனை இறைவேண்டல் மற்றும் உண்ணாநோன்பு பக்தி முயற்சிகளில் செலவழிக்குமாறு, இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவை, அனைத்து மறைமாவட்டங்களையும் கேட்டுக்கொண்டது.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையே இடம்பெற்றுவரும் போர் முடிவடைந்து அப்பகுதியில் அமைதி நிலவவேண்டும் என்ற கருத்துக்காக, தவக்காலம் துவங்கும் மார்ச் 2 ஆம் தேதி, புதன்கிழமையை, இறைவேண்டல் மற்றும் உண்ணாநோன்பு நாளாக கடைப்பிடிக்கும்படி விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்பினை அடுத்து, இந்தியக் கத்தோலிக்கரும் இணைந்து செபித்தனர்.

இது குறித்து இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவைத் தலைவரான, கோவா-டாமன் பேராயர் பிலிப்நேரி ஃபெராவோ அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமைதியின் இளவரசரை பின்பற்றி செல்லும் நாம், தற்போதையக் கொடுந்துயரத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இறைவேண்டல் மற்றும், தியாகம் ஆகிய ஆன்மீக ஆயுதங்களால் நம்மை நிரப்பவேண்டும் என்றும், உக்ரைனிலும், உலகின் சில பகுதிகளிலும் இடம்பெறும் போர்கள் முடிவுக்கு வரவும், உலகில் அமைதி நிலவவும் கடவுளை மன்றாடுவோம் என்றும் பேராயர் ஃபெராவோ அவர்கள் கூறினார்.