Namvazhvu
அருள்முனைவர்  யேசு கருணாநிதி தவக்காலம் நான்காம் ஞாயிறு (யோசு 5:9, 10-12, 2கொரி 5:17-21, லூக் 15:1-3, 11-32)
Wednesday, 23 Mar 2022 10:02 am
Namvazhvu

Namvazhvu

அவர் இனியவர்,

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறைதொமேனிக்கா, லெயத்தாரே’ (‘மகிழ்ச்சி அல்லது அக்களிப்பு ஞாயிறு’) என்று அழைக்கின்றோம். இன்றைய நாள் திருப்பலியின் வருகைப் பல்லவி மிக அழகாக இதை முன்வைக்கிறது: “எருசலேமின் மேல் அன்புகொண்ட அனைவரும் அவளுடன் அகமகிழ்ந்து அவள் பொருட்டு அக்களியுங்கள்; அவளுக்காகப் புலம்பி அழும் எல்லாரும் அவளுடன் சேர்ந்து மகிழ்ந்து கொண்டாடி ஆர்ப்பரியுங்கள். அப்போது அவளின் ஆறுதல் அளிக்கும் முலைகளில் குடித்து நீங்கள் நிறைவடைவீர்கள்; அவள் செல்வப்பெருக்கில்நிறைவாக அருந்தி இன்பம் காண்பீர்கள்” (காண். எசா 66:10-11). எருசலேமை இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்போடு நாம் உருவகப்படுத்தினோம் என்றால், அவரோடு அவருடைய பாடுகளுக்காக அழும் நாம், அவருடைய உயிர்ப்பில் அக்களிப்போம் என்பதே, நிதர்சனமான உண்மை. ஆக, தவக்காலத்தின் இலக்கு துன்பம் அல்லது பாவம் அல்ல; மாறாக, மகிழ்ச்சி அல்லது வெற்றியே. இந்த ஞாயிறு அந்த மகிழ்ச்சியின், வெற்றியின் முன்சுவையாக நமக்குத் தரப்படுகிறது.

இன்றைய இறைவார்த்தை வழிபாட்டின் மையம், இன்றைய பதிலுரைப்பாடலில் இருக்கின்றது: “ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்” (திபா 34:8). தாவீது அபிமெலக்கின் முன் பித்துப்பிடித்தவர் போலத் தம்மைக் காட்டியபோது, அவன் அவரைத் துரத்திவிட, அவனிடமிருந்து தப்பி வெளியேறுகின்றார். தன் உயிர் காக்கப்பட்ட இந்த நேரத்தில், கடவுளின் கருணையைப் புகழ்ந்து பாடுகின்றார் தாவீது (காண். 1 சாமு 21:13-15).

இனிமை’ - இது ஒரு வித்தியாசமான சுவை. சுவை என்பது, ஒருவகை நேரடி வேதியல் உணர்வு என வரையறுக்கிறது விக்கிபீடியா. மேற்கத்தியர் சுவை நான்கு என்பர்: இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு. தமிழர் முறைப்படி சுவை ஆறு: இனிப்பு (‘கனி’), கார்ப்பு (‘மிளகாய்), கசப்பு (‘பாகற்காய்’), புளிப்பு (‘புளியங்காய்’), உவர்ப்பு (‘உப்பு’), துவர்ப்பு (‘பாக்கு’). இந்த அறுசுவைகளும் மனித உடலுக்குத் தேவை என்கிறது சித்த மருத்துவம். இந்த அறுசுவைகளில் இனிப்புக்கு மட்டும் ஒரு தனித்தன்மை உண்டு. அது என்னவென்றால், ‘இனிப்புமட்டும்தான் நாம் ஒருமுறை சுவைத்தாலும், மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் சுவை. மற்ற ஐந்து சுவைகளும் பொதுவாக ஒருமுறை மட்டுமே சுவைக்கக்கூடியவை. மேலும், ‘இனிப்புசுவைதான் நம் உள்ளத்திற்கு நேர்முகமான உணர்வுகளையும், நம் உடலின் புன்னகைத் தசை நார்களையும் உயிர்க்க வல்லது. ஆகையால்தான், வெற்றி, மகிழ்ச்சி, உடற்பயிற்சி, சோர்வு போன்ற நேரங்களில் இனிப்பு சுவை தரப்படுகிறது. இந்தப் பின்புலத்தில்தான் - அதாவது, அடிக்கடி நாம் தேடுவதாலும், அது நமக்குப் புத்துயிர் அளிப்பதாலும் - தாவீது ஆண்டவரை, ‘இனியவர்’ (‘இனிப்பானவர்’) என்று அழைக்கின்றார். ஆக, ஆண்டவரின் இனிமையை ஒருமுறை சுவைத்தால் போதும். அவரிடமே நாம் திரும்பத் திரும்பச் செல்வோம். ஆண்டவர் தாவீதை அச்சத்தினின்று விடுவிக்கிறார், அவமானத்திலிருந்து விடுவிக்கிறார் மற்றும் நெருக்கடியினின்று விடுவிக்கிறார்.

இன்றைய முதல் வாசகம் (காண். யோசு 5:9, 10-12) இஸ்ரயேல் மக்கள் யோசுவாவின் தலைமையில் யோர்தான் ஆற்றைக் கடந்து, பாலும் - தேனும் பொழியும் கானான் நாட்டிற்குள் நுழைந்த பின், நடந்த முதல் நிகழ்வுகளை சொல்கிறது. இரண்டு நிகழ்வுகள் நடக்கின்றன: முதலில், பாலைநிலத்தில் பிறந்த ஆண்களுக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது. இவர்கள் இந்தச் சடங்கால் ஆண்டவருக்கு அர்ப்பணமானவர்கள் ஆகின்றார்கள். இவர்களின் பெற்றோர் பாலைநிலத்தில் மோசேக்கும், கடவுளுக்கும் எதிராக முணுமுணுத்ததால் கடவுளால் கொல்லப்படுகின்றனர். இந்தச் சடங்கு முடிந்ததும், ஆண்டவர் யோசுவாவிடம், ‘இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கி விட்டேன்என்கிறார். அது என்ன பழிச்சொல்? இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டவுடன் அவர்களைப் பின்தொடர்ந்து வருகின்ற எகிப்தியர், ‘இஸ்ரயேல் மக்கள் மூடர்கள். ஏனெனில், தாங்கள் அறியாத ஒரு கடவுளைப் பின்பற்றிச் சென்று, பாலைவனத்தில் நாடோடிகளாகத் திரிகிறார்கள். அவர்கள் கடவுளும் பொய், அவர்களுடைய கடவுளின் வாக்குறுதியும் பொய்எனப் பழித்துரைக்கின்றனர். ஆனால், இன்று யோர்தானைக் கடந்து, கானானில் மக்கள் குடியேறியவுடன் அவர்களின் பழிச்சொல் பொய்யாகிறது. கடவுள் தன் வாக்குறுதியை நிறைவேற்றி, தன்னை உண்மையானக் கடவுள் என்று இஸ்ரயேல் மக்களுக்கும், எகிப்தியருக்கும் உணர்த்துகின்றார். இரண்டாவதாக, கில்காலில் இஸ்ரயேல் மக்கள் தங்கள் முதல் பாஸ்காவைக் கொண்டாடுகின்றனர். வாக்களிக்கப்பட்ட  நாட்டில் கொண்டாடப்படும் முதல் பாஸ்காவும் இதுவே. இங்கே, இவர்கள் நிலத்தின் விளைச்சலை உண்ணத் தொடங்குகின்றனர். உண்ட  மறுநாளிலிருந்து மன்னா பொழிவது நின்றுவிடுகிறது. இது அவர்களுடைய வாழ்வில் ஒரு புதிய தொடக்கம். இதுவரை யாவே இறைவனோடு இருந்த தொப்புள் கொடி அறுந்து, இன்று இவர்கள் தாங்களாகவே தங்களின் சொந்தக் கால்களில் நிற்கத் தொடங்குகின்றனர். இவ்வாறாக, இறைவன் இவர்களைக்குழந்தைகள்நிலையிலிருந்துபெரியவர்கள்என்ற நிலைக்கு உயர்த்துகின்றார்.

ஆக, இறைவனின் இனிமை இங்கே இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: ஒன்று, அவர் பழிச்சொல் நீக்குகின்றார். இரண்டு, அவர்களுக்கு புதிய தொடக்கத்தைத் தருகின்றார்.

இன்றைய இரண்டாம் வாசகம் (காண். 2 கொரி 5:17-21) பவுலடியார் தான் பெற்றிருக்கின்ற ஒப்புரவுத் திருப்பணி பற்றி, கொரிந்து நகர மக்களுக்கு எடுத்தியம்புவதாக அமைந்துள்ளது. இவ்வாறாக, தன் திருத்தூதுப்பணியின் ஒரு முக்கிய அங்கமாக ஒப்புரவுப் பணியை முன்வைக்கின்றார். பாவம் இயல்பாகவே நம்மைக் கடவுளிடமிருந்தும், ஒருவர் மற்றவரிடமிருந்தும் பிரித்துவிடுகிறது. கடவுளுக்கும், நமக்கும் பாவத்தால் எழுப்பப்பட்ட சுவரை உடைத்து, இருவரையும் இணைக்கும் பாலமாகக் கிறிஸ்து விளங்குகின்றார். ஆக, “கிறிஸ்துவோடு ஒருவர் இணைந்திருக்கும்போது, அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து, புதியன புகுந்தது அன்றோ! இவை யாவும் கடவுளின் செயலேஎன்று சொல்லும் பவுலடியார், இந்த ஒப்புரவு முழுக்க, முழுக்க கடவுளின் முன்னெடுப்பாக இருக்கிறது என்பதையும், அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். ஏனெனில், “நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்கிறார்.” அதாவது, கிறிஸ்து பாவநிலையை ஏற்றாரெனில், பாவத்தின் விளைவான இறப்பை ஏற்றார். ஆனால், அந்த இறப்பிலிருந்து அவர் உயிர்த்ததால், நம்மையும் அவரோடு இணைத்துப் புதுப்படைப்பாக்குகிறார்.

ஆகவே, இறைவனின் இனிமை இங்கேயும் இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: ஒன்று, கிறிஸ்து வழியாக இவ்வுலகைத் தம்மோடு ஒப்புரவாக்கி, அதற்கு புத்துயிர் தருகின்றார். இரண்டு, இந்தப் பணி மற்றவர்களுக்கு அறிவிக்கப்படுமாறு திருத்தூதர்களிடம் இந்த ஒப்புரவுச் செய்தியை ஒப்படைக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகம் (காண். லூக் 15:1-3, 11-32) நமக்கு மிகவும் அறிமுகமான ஓர் உவமை. ‘ஒரு தந்தையும் இரண்டு மகன்களும்எனப்படும் இந்த எடுத்துக்காட்டை இயேசு, பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞரின் முணுமுணுப்பிற்கு எதிர்சான்றாக வைக்கின்றார். இங்கே, கவன மையம் அல்லது கவனக்குவிப்பு, இளைய மகனோ அல்லது மூத்த மகனோ அல்ல; மாறாக, தந்தையே. இக்கதையில் வரும் தந்தை தொடக்கமுதல் இறுதிவரை இனியவராக, கனிவுடையவராக, இரக்கம் உடையவராக இருக்கிறார். இயேசு தன் சமகாலத்தில் இரண்டு வகை மக்களோடு உறவாடுகிறார்: ஒன்று, வரிதண்டுபவர்கள், பாவிகள். இவர்கள் யூத

சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர். இரண்டு, யூதச் சட்டம் மற்றும் முறைமைகளுக்கு பிரமாணிக்கமாய் நடந்த பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும். இந்த இரண்டாம் குழுவினர், இயேசு முதல் குழுவினரோடு உறவாடுவதைக் கண்டு, இடறல் பட்டனர். இந்த இரண்டு குழுக்களும் இரண்டு மகன்களையும் குறிக்க, உவமையில் வரும் தந்தை இயேசுவின் அல்லது கடவுளின் உருவகமாகிறார்.

சுருக்கமாகச் சொன்னால், தூரத்திற்குச் செல்கின்ற இளைய மகன் இல்லம் திரும்புகிறான். வீட்டிற்குள்ளேயே இருக்கின்ற மூத்த மகன் இல்லம் திரும்ப மறுக்கிறான். இவ்விரண்டு கதை மாந்தர்களுக்காகவும் வீதிக்கு வருகின்றார் தந்தை: முதல் மகனை அரவணைத்துக் கொள்ளவும், இரண்டாம் மகனை அழைத்துச் செல்லவும். ஆனால், என்ன வருத்தம்! மூத்த மகன் தன்னையே அடிமை என நினைத்தான், இளைய மகன் தன்னைப் பணியாளனாக ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினான். இக்கதையில் அப்பாதான் கதாநாயகன். ஏனெனில், இரண்டு மகன்கள் வீட்டிற்கு வரும் நேரத்தில், தந்தை அங்கு இருந்தார். இளைய மகன் வீட்டைவிட்டுப் புறப்பட்ட நாளிலிருந்து, தந்தை இவனுக்காக ஊருக்கு வெளியில் நிற்கின்றார். எல்லாவற்றையும் இழந்து அவன் வரும்போது, ஊரார் கேலிபேசிவிடக்கூடாது என்ற அக்கறையில் அங்கேயே நிற்கிறார் தந்தை. இளைய மகனைத் தந்தை எதிர்கொண்டது ஏதோ ஒரு விபத்தால் - சான்ஸ் - அல்ல; மாறாக, விருப்பத்தால் - சாய்ஸ். தானே, தெரிந்து நின்று, தழுவி, அரவணைத்து, அள்ளிக்கொள்கின்றார் தந்தை. இதுதான் இந்தப் பெயரில்லாத் தந்தையின் இனிமை. இந்த இனிமை இரக்கத்தோடு காத்திருக்கிறது. தன் மகன் ஏற்படுத்திய பொருள்செலவைப் பெரிதாகப் பார்க்கவில்லை. தன் மகனைத் தீர்ப்பிடவில்லை. தன் பெயரைக் கெடுத்தாலும், அதைப் பொருட்படுத்தவில்லை. சேறு, சகதி, அழுக்கு என வந்த மகனிடம், ‘நீ போய் முதலில் குளித்துவிட்டு வா!’ என்று சொல்லவில்லை. அவன் தனக்குரியது என எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போனாலும், அவனுக்குரிய முதல்தர ஆடை, கைக்கு மோதிரம், காலுக்கு மிதியடியைத் தயாராக வைத்திருக்கிறது இந்த இனிமை. தன் மூத்த மகன் இல்லம் நுழைய மறுத்தாலும், அவனைக் கடிந்துகொள்ளாமல் அவனுக்கு விளக்கம் தந்து, அவனுடைய பார்வையை அகலப்படுத்துகிறது இந்த இனிமை.

ஆக, இறைவனின் இனிமை இங்கேயும் இரண்டு நிலைகளில் வெளிப்படுகிறது: இளைய மகனுக்கு இரக்கமாக, கனிவாக, தழுவலாக, கரிசனையாக வெளிப்படுகிறது. மூத்த மகனுக்கு, விளக்கம் சொல்லிப் புரிய வைத்து, அவனுடைய கண்ணோட்டத்தை மாற்றுகிறது.

இவ்வாறாக, இன்றைய முதல், இரண்டு மற்றும் மூன்றாம் வாசகங்கள், திருப்பாடலோடு இணைந்துஇறைவனின் இனிமையைஅல்லதுஅவர் இனியவர்என்பதை நமக்குக் காட்டுகின்றன. ‘அவர் இனியவர்என்றால்அந்த இனிமையைநாம் அனுபவிக்கிறோம் என்றால், அவரைப் போல, ‘நாம் இனியவர்ஆவது எப்படி?

1. பழிச்சொல் நீக்கும் இனிமை

இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழையும்போது, அவர்கள் வெளிப்புறத்தில் அவர்களுக்கு உணவு, பாதுகாப்பு, உடைகள், வீடு என எல்லாம் இருந்தாலும், அவர்களின் உள்ளத்தில் ஒரு நெருடல் இருக்கிறது. அதுதான் எகிப்தியரின் பழிச்சொல். அந்தப் பழிச்சொல் அவர்கள் எந்த நன்மையையும் சுவைத்து அனுபவிக்க, அவர்களின் மகிழ்ச்சியை எதிர்கொள்ள, அவர்களுக்குத் தடையாக இருக்கின்றது. இறைவன் இந்தப் பழிச்சொல்லைத் துடைக்கின்றார். ‘நீங்கள் முட்டாள்கள், ஏமாளிகள், உங்கள் கடவுள் பொய்யர், நீங்கள் அழிந்து போவீர்கள்!’ என்ற பழிச்சொல்லைத் துடைக்கின்றார். இன்று நாம் அறிந்துகொள்ள வேண்டியதும் இதுதான். இறைவன் நம்மேல் உள்ள பழிச்சொல் அனைத்தையும் துடைக்க வல்லவர். ‘இதோ என் அன்பார்ந்த மகன்-மகள்என்று அவர் உங்களையும், என்னையும் அழைக்கும் அந்த நொடியே அனைத்துப் பழிச்சொல்லையும் துடைத்துவிடுகிறார். ஊரார் நம்மைவிலைமாதருடன் உறவு கொண்டவன்,’ ‘பன்றி மேய்த்தவன்,’ ‘பன்றியின் உணவை உண்டவன்,’ ‘தந்தை சொல் கேளாதவன்என்று சொன்னாலும், சொந்த அண்ணனே, ‘உம் மகன்என்று மூன்றாம் நபராகப் பார்த்தாலும், இறைவன் பழிச்சொல்லை நீக்குகிறார். ‘நான் உன் வீட்டு வேலைக்காரன்என்று சொல்ல வாயெடுத்தவனை அதற்கு மேல் பேசவிடாமல், மகனுக்குரிய நிலையில் வைத்துக்கொள்கிறார். ஆக, இறைவன் என் பழிச்சொல்லை நீக்குகிறார் என்றால், நான் அவருடைய இனிமையை உணர்கிறேன் என்றால், என் நாவில் இத்தகைய சொற்கள் ஒருபோதும் வரக்கூடாது. இன்னா சொற்கள் விடுத்து இனிய சொற்கள் பேசும்போது நாமும் இனியவரே.

2. பழையன கழிக்கும் இனிமை

கிறிஸ்துவோடு உலகை ஒப்புரவாக்கும் இறைவன், பழையன அனைத்தையும் அழிக்கின்றார். முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்களின் மன்னாவை நிறுத்துவதன் வழியாக, மக்களின் பழைய சார்புநிலையை அழிக்கின்றார். நற்செய்தி வாசகத்தில், தந்தை இரண்டு மகன்களின் பழைய இயல்பையும் அழிக்கின்றார். இளைய மகன் கடந்த நாட்களில் என்ன செய்தான் என்றோ, எவ்வளவு கையிருப்பு கொண்டு வந்துள்ளான் என்றோ, அடுத்தது என்ன திட்டம் என்றோ கேட்கவில்லை. மூத்த மகன் வைத்திருந்த முற்சார்பு எண்ணத்தையும் அழிக்கிறார். ஆக, பழையது நமக்கு உற்சாகம் தந்தால் நலம். ஆனால், நம்மைக் கட்டிவைத்து நகர முடியாமல் செய்தால், அது கழிக்கப்பட வேண்டும். பழையதை மறந்து, இன்றில் இப்பொழுதில் வாழும்போது, இறைவனின் இனிமையை அனுபவிக்கவும், அதை மற்றவருக்கு வழங்கவும் முடியும். ஏனெனில், இறைவனுக்கு இன்று மட்டுமே உண்மை.

3. தழுவிக்கொள்ளும் இனிமை

இன்றைய நற்செய்தியில் வரும் தந்தையின் கணிதமும், லாஜிக்கும் வித்தியாசமாக இருக்கிறது. அவர் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் பார்த்து வருத்தப்படாமல், நிகழ்வின் மொத்தத்தைப் பார்க்கிறார். ‘நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும்’ - இதுதான் இவருடைய மிஷன், ஸ்டேட்மெண்டாக இருக்கிறது. அவன் போனான், அழித்தான், திரும்பினான். அதனால் என்ன? நடந்ததைப் பற்றி என்ன செய்ய முடியும்? அடுத்து என்ன செய்வது? ‘மகிழ்ந்து கொண்டாடுஎன்று இளைய மற்றும் மூத்த மகனை ஒருசேரத் தழுவிக்கொள்கிறார். இது யாரால் முடியும் என்றால், உறுதியை மனத்தில் வைத்துச் சிந்திப்பவரால் மட்டும்தான். ‘ஒன்றின் தொடக்கமல்ல; அதன் முடிவே கவனிக்கத்தக்கதுஎன்கிறார் சபை உரையாளர் (7:8). இறுதியில், எல்லாம் இனிமையாகும். ஆக, நிகழ்வுகளை இந்த இறுதியோடு இணைத்துப் பார்த்தால், இறைவனின் இனிமை நமக்குச் சொந்தமாகும்.

இறுதியாக, மகிழ்ச்சியின் ஞாயிறைக் கொண்டாடும் நாம், இறைவனின் இனிமையை அனுபவித்து, மகிழ்வுறும் நாம், அதே இனிமையை மற்றவருக்கும் வழங்கும்போது, மகிழ்ச்சி இரட்டிப்பாகும். காலையில் கூட்டைவிட்டுப் புறப்படும் பறவை, மாலை கூட்டிற்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையால்தான் சுற்றித் திரிகிறது. சுற்றித் திரிதல் தவறல்ல; கூடு திரும்பாமல் இருப்பதுதான் தவறு. இஸ்ரயேல் மக்கள் கானான் நாடு என்னும் கூடு திரும்பினர். கொரிந்து நகர மக்கள் ஒப்புரவு என்னும் கூடு திரும்பினர். இரு மகன்களும் தந்தையின் இல்லம் என்னும் கூடு திரும்பினர். இவர்கள் கூடு திரும்பக் காரணம், இவர்கள் அங்கே இனிமையைக் கண்டனர். இனிமையைக் காணும் இடம் நோக்கி, நம் இதயம் சாயும் என்பது நம் மரபியல் ஊட்டம். அந்த இனிமை இறைவனிடம் என்றால், பயணம் இனிதாகும். ஏனெனில், அவர் இனியவர் - உங்களையும் என்னையும் போல!