Namvazhvu
குடந்தை ஞானி மதச்சார்பின்மையை நிலைநிறுத்த பொதுநிலையினர் ஆணைய வேண்டுகோள்
Wednesday, 22 Jun 2022 07:40 am
Namvazhvu

Namvazhvu

இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் (CBCI) பொதுநிலையினருக்கான ஆணையமானது, நாடு சுதந்திரமடைந்ததின் 75 வது ஆண்டைக் கொண்டாடும் வேளையில், நாட்டில் மதச்சார்பின்மையை நிலைநிறுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. "மதச்சார்பின்மையின் மகத்துவம் நிலைநிறுத்தப்பட வேண்டும், மேலும் மதச்சார்பின்மையின் உயர்ந்த கொள்கைகளை சீர்குலைக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது", என்று பொதுநிலையினர் ஆணையக் குழுவின் செயலாளர் E.C செபாஸ்டியன் கூறினார். நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜூன் 6 ஆம் தேதி கேரள கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு (KCBC), "உலகெங்கிலும் மதத்தின் பெயரால் வன்முறை தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை உலக நாடுகள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நமது நாட்டிலும் சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள், நாமும் இதுபோன்ற அச்சுறுத்தல்களிலிருந்து விடுபடவில்லை என்பதை வெளிப்படுத்துகின்றன. இதுபோன்ற வன்முறை செயல்கள் நாட்டின் அமைதியை விரும்பும் குடிமக்களுக்கு கவலையளிக்கும் ஒன்றாகும். எனவே ஒன்றியம் மற்றும் மாநில அரசுகள் இதற்கான சட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்" என்று கூறியது.

பொதுநிலையினர் ஆணையக் குழுவின் செயலாளர் E.C செபாஸ்டியன், ஜூன் 8 ஆம் தேதி  "ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தென்மாநிலங்களிலும் இந்நிலை உருவாகி வருகிறது. மக்களின் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய நிலையினை ஆளும் அரசுகள் உணர்ந்து கொள்ள வேண்டும். இதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் (CBCI) பொதுநிலையினருக்கான ஆணையமானது, ஆகஸ்ட் மாதத்தில் மதவாதம் தொடர்பான வன்முறை குறித்து தேசிய அளவிலான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தும்" என்று கூறினார்.