Namvazhvu
பேரா. முனைவர் பாக்யமேரி அயலகக் கிறித்துவர் தமிழ்ப்பணிகள் மனுவேல் மார்த்தின்சு (1595 - 1656) அந்தோம் தெ ப்ரொவேன்சா (1625- 1666) வீரமாமுனிவர் (8.11.1680 - 4.2.1747)
Thursday, 23 Jun 2022 07:03 am
Namvazhvu

Namvazhvu

3. மனுவேல் மார்த்தின்சு

(1595 - 1656):

மனுவேல் மார்த்தின்சு 1595-இல் போர்த்துகல் நாட்டில் பிறந்தார். 1625-ஆம் ஆண்டு முதல் 1656 ஆம் ஆண்டு வரை மதுரை, திருச்சிராப்பள்ளி, மாரமங்கலம் ஆகிய இடங்களில் தங்கி தமது சமயப் பணியை ஆற்றினார். 1656 ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளியில் இயற்கை எய்தினார்.

மனுவேல் மார்த்தின்சு தமிழில் கிறித்தவ இறைவேண்டல் நூல்களை எழுதினார். இந்நூல்களில் வடமொழி கலப்புமிக்க சொற்கள் காணப்பட்டன. தமிழ் போர்த்துக்கீசிய அகராதி என்னும் ஓர் அகராதி, அன்டேம் டி புரவென்சா (Antão de Proença) என்பவரால் தொகுக்கப்பட்டு 1679 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது.

இவ் அகராதியில் உள்ள சொற்கள் பல மனுவேல் மார்த்தின்சின் நூல்களில் இருந்த வடமொழி கலந்த சொற்களைத் தமிழ்ச் சொற்களாகக் கொண்டு தொகுக்கப்பட்டன. இவ் அகராதியின் ஒரு பிரதி வத்திக்கான் நூலகத்தில் உள்ளது. 1966-இல் மலாயா பல்கலைக் கழகம் இவ் அகராதியினை மீள்பதிப்புச் செய்தது.

4. அந்தோம்

தெ ப்ரொவேன்சா

(1625- 1666):

போர்த்துக்கல் நாட்டினர். 1679 இல் கேரளாவில் அம்பலக்காடு என்னும் இடத்தில் இவரது தமிழ்-போர்த்துக்கீசியம் அகராதி அச்சானது. தமிழில் அச்சான முதல் அகராதி என்னும் பெருமையினை இவரது அகராதி பெறுகின்றது.

5. வீரமாமுனிவர்

(8.11.1680 - 4.2.1747):

இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் 1680 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் இயற்பெயர் கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி.

திருமுழுக்குப் பெயர்:

பெஸ்கியின் பெற்றோர் அக்கால வழக்கத்துக்கு ஏற்ப தம் மகனுக்குச் சிறுவயதிலேயே திருமுழுக்குக் கொடுத்தனர். திருமுழுக்கின்போது இடப்பட்ட பெயர்கொஸ்தான்சோ ஜுசேப்பே எவுசேபியோ பெஸ்கி (Costanzo Giuseppe Eusebio Beschi) என்பதாகும். இதில்க்ஷநளஉhi” என்பது குடும்பப் பெயர். இத்தாலிய மொழியில் இச்சொல்பெஸ்கி என ஒலிக்கும். “எவுசேபியோ என்னும் பெயர் வீரமாமுனிவருக்கு இருந்தாலும் அது அவர்தம் வாழ்நாளில் வழங்கியதாகத் தெரியவில்லை. அதை முனிவரும் பயன்படுத்தவில்லை. “Costanzo Giuseppe என்னும் இத்தாலியப் பெயர் ஆங்கிலத்தில்Constant Josephஎன வழங்கப்பெறும்.

 

இவர் லிஸ்பனிலிருந்து புறப்பட்டு 1710 ஜூனில் கிறித்துவ சமயப் பரப்புப் பணி செய்ய கோவா வந்து சேர்ந்தார். சில நாட்கள் கோவாவில் தங்கியவர், தமிழ்நாடு வரத் திட்டமிட்டு, கொச்சி வந்து அங்கிருந்து பாதசாரியாகவே அம்பலக்காடு வந்து தங்கினார். அங்கிருந்து மதுரையில் காமநாயக்கன்பட்டிக்கு வந்து சேர்ந்தார்.

சாமிநாதப்பிள்ளை என்பவரும், முத்துசாமிப்பிள்ளை என்பவரும் வீரமாமுனிவர் வாழ்க்கை வரலாற்றினை எழுதினர். இவர்கள் இருவருள் காலத்தால் முற்பட்ட சாமிநாதப்பிள்ளை எழுதிய வாழ்க்கை வரலாறு, நூலாக வெளிவரவில்லை. இந்நூலை அடியொற்றிப் பின்வந்த முத்துசாமிப்பிள்ளை வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றினை எழுதி நூலாக வெளியிட்டார்.

சாமிநாதப்பிள்ளையும், முத்துசாமிப் பிள்ளையும் தெரிவிக்கின்ற வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றில் அவரது தோற்றம் பழக்க வழக்கங்கள் பற்றிக் குறிப்பிடும் கருத்துக்கள் அனைத்தும் வீரமாமுனிவருடையன அல்ல, அவை அனைத்தும் இராபர்ட் டி நொபிலியின் தோற்றங்களே, பழக்க வழக்கங்களே எனத் தமிழ் ஆய்வறிஞர் . இராசமாணிக்கனார் ஆய்வின் அடிப்படையில் நிறுவி உள்ளார்.

இக் கருத்து வேற்றுமைகளைப் பற்றிக்காண்போம்.

வீரமாமுனிவரின் தமிழக வாழ்க்கை முறை பற்றி முத்துசாமிப் பிள்ளை:

1822 இல், முதன் முதலாக வீரமாமுனிவருடைய சரித்திரத்தைத் தமிழில் வித்துவான் முத்துசாமிப் பிள்ளை என்பவர் எழுதி வெளியிட்டார். அந்நூலில் வீரமாமுனிவருடைய நடையுடை பாவனைகளைப்பற்றி, இந்தத் தேசத்தில் வந்தநாள் முதலாகப் புலால் மாமிசங்களை நிவர்த்தித்து (தவிர்த்து), இரண்டு தமிழ்த் தவசிப் பிள்ளைகளைப் பரிசுத்த அன்னபாகஞ் செய்யச் சொல்லி, தினம் ஒரு பொழுது மாத்திரம் போசனம் பண்ணிக்கொண்டிருப்பார். தமது மடத்திலிருக்கும்பொழுது, கோபிச் சந்தனம் நெற்றியில் இட்டுக்கொண்டு, தலைக்குச் சூரியகாந்திப்பட்டுக் குல்லாவும், அரை(இடுப்பு)க்கு நீர்க்காவிச் சோமன் இவற்றுடன் திருநெல்வேலிக் கம்பிச் சோமன் போர்வை முக்காடும் இட்டுக் காலில் பாதகுறடும் போட்டுக் கொண்டிருப்பார். இவர் வெளியில் போகும்போது பூங்காவி அங்கியும் நடுக்கட்டும், வெள்ளைப்பாகையும், இளங்காவி உத்தரிய முக்காடும், கையினில் காவி உருமாலையும், காதில் முத்துக்கடுக்கனும், கெம்பொட்டுக் கடுக்கனும், விரலில் தம்பாக்கு மோதிரமும், கையில் தண்டுக் கோலும், காலில் சோடு(செருப்பு)டனும் வந்து, பல்லக்கு மெத்தையின் மேலிட்டிருக்கும் புலித்தோலாசனத்தின் மேல் எழுந்தருளியிருந்து, உபய வெண்சாமரை வீசவும், இரண்டு மயில்தோகைக்கொத்து வீசவும், தங்கக் கலசம் வைத்த காவிப்பட்டுக் குடைபிடிக்கவும் சாரி (நகரில் வெளியே) போவார். இவர் இறங்கும் இடங்களிலும் புலித்தோல் ஆசனத்தின் மேல் உட்காருவார் என விவரித்துள்ளார். ஆனால், முத்துசாமிப்பிள்ளையின் கருத்துகளுக்குத் தமிழறிஞர் . இராசமாணிக்கனார் மறுப்புத் தெரிவிக்கின்றார்.

வீரமாமுனிவரின் தமிழக வாழ்க்கை முறை பற்றிய . இராசமாணிக்கனாரின் மறுப்பு:

முத்துசாமிப் பிள்ளை வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை 1822 இல் எழுதி, அந்நூலை அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1840 இல் வெளியிட்டார். முத்துசாமிப்பிள்ளை 1840 இல் இறந்த பிறகு அவரது தமிழ் வரலாற்றை 1843 இல் அப்பாவுபிள்ளை என்பவர் பதிப்பித்தார். எனவே, வீரமாமுனிவர் வரலாறு பற்றித் தமிழில் அச்சான முதல் நூல் இதுவே.

ஆனால், இதற்கு முன்னரே சாமிநாதப் பிள்ளை என்பவர் முனிவரின் வரலாற்றை 1798 இல் எழுதியதாகவும், அது அச்சேறாமல் இருந்ததாகவும் அதைத் தாம் பயன்படுத்தியதாகவும் முத்துசாமிப் பிள்ளையே தம் வரலாற்றில் கூறியுள்ளார்.

வீரமாமுனிவரின் வரலாற்றை எழுதிய முத்துசாமிப் பிள்ளையின் நூலில் முனிவரின் வாழ்க்கைமுறை பற்றிய பல தவறான செய்திகள் அடங்கியிருப்பதை வீரமாமுனிவர் தொண்டும் புலமையும் என்னும் ஆய்வு நூலில் இராசமாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார். முனிவர் பற்றிய தவறான செய்திகள் எழுந்ததற்கு முக்கிய காரணம் தத்துவ போதகர் என்று சிறப்புப்பெயர் பெற்ற இராபர்ட் டி நோபிலி பற்றிய செய்திகளை வீரமாமுனிவருக்கு ஏற்றியுரைத்ததே என்று . இராசமாணிக்கம் ஆய்வின் அடிப்படையில் நிறுவியுள்ளார்.

இராபர்ட் டி நொபிலி 1606 இல் மதுரை வந்து 50 ஆண்டுகளாக உழைத்தபின் 16.01.1656 அன்று மயிலாப்பூரில் உயிர்துறந்தார் என முன்பே கண்டோம். அவருக்குத்தான் தத்துவப் போதகர் என்னும் பெயர் இருந்தது.

வீரமாமுனிவரையும் தத்துவ போதகரையும் பிரித்தறியாமல் எழுந்த குழப்பத்தை . இராசமாணிக்கம் மேலும் விவரிக்கிறார்:

வீரமாமுனிவர் பெயரே தமிழ் நாட்டில் செல்வாக்கோடு வழங்கி வந்தமை

தத்துவ போதகர் யார் என்றுகூடப் பொதுமக்கள் அறியாமல் இருந்தமை

வீரமாமுனிவரைத் தத்துவப் போதகர் எனப் பிறழ உணர்ந்தமை

சைவ உணவையே கையாண்டது, அன்றாட நோன்பு இருந்தது, உயர்ந்த ஆடைகளையே அணிந்தது, பூணூல் போட்டது, கொடியுடைய கோல் ஏந்திச் சென்றது, பல்லக்கில் சென்றது

வடமொழியிலும் தெலுங்கிலும் தமிழில்போல் பாண்டித்தியம் பெற்றது

முதல் முதலாகத் தமிழிலும் தெலுங்கிலும் உரைநடை நூல்கள் இயற்றியது

தத்துவபோதகர் ஆற்றிய தொண்டு, பழக்க வழக்கங்கள் முதலிய எல்லாம் வீரமாமுனிவர் மீது ஏற்றிக் கூறியமை

இவற்றை எல்லாம் வீரமாமுனிவர் செய்ததாக முத்துச்சாமிப் பிள்ளையும் அவரைப் பின்பற்றிய பல ஆசிரியர்களும் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. கொடியுடைய கோலோ, பூணூலோ வீரமாமுனிவர் மேற்கொள்ளவில்லை. அவற்றை அணிந்தவர் தத்துவப் போதகரே. தத்துவப் போதகர் வேறு, வீரமாமுனிவர் வேறு. ஆகவே வீரமாமுனிவரைத் தத்துவப்போதகர் என்று அழைப்பதோ, தத்துவப் போதகர் படத்தை வீரமாமுனிவரின் உருவமாகக் காட்டுவதோ பொருத்தமற்றது என இராசமாணிக்கனார் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இதன் மூலம் நாமும் இராபர்ட் டி நொபிலிக்கும், வீரமாமுனிவருக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்ந்து கொள்ளலாம்.

வீரமாமுனிவரின் சமயப்பணிகள்:

வீரமாமுனிவர், தமிழகத்தில் பல மாவட்டங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களைக் கட்டியுள்ளார். குறிப்பாக, புனித பெரியநாயகி அன்னைக்குத் தமிழ்க் கலாச்சாரப்படி அன்னை மாமரிக்குப் புடவை உடுத்தியபடி மரத்தாலான சுரூபங்களைச் செய்து அன்னையின் பெருமையையும் புகழையும் உலகறியச் செய்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் உள்ள தவளப்பள்ளம் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம்

ஆவூர் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னை ஆலயம்

ஏலாக்குறிச்சி கிராமத்தில் புனித அடைக்கல அன்னை ஆலயம்

கடலூர் மாவட்டம் கோனான்குப்பம் கிராமத்தில் புனித பெரியநாயகி அன்னைக்கு ஆலயம் ஆகிய அன்னை ஆலயங்களைக் கட்டியுள்ளார்.

வீரமாமுனிவர் கட்டியுள்ள அனைத்து ஆலயங்களும் ஒரே வடிவில் இருக்கிறது. இவர் கட்டி எழுப்பியுள்ள ஆலயத்திற்குள் 50 பேர் மட்டுமே அமரலாம்.

வீரமாமுனிவரின் தமிழ்ப்பணி

இவர் தமிழகம் வந்தபின், சுப்பிரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். இவரது தமிழார்வமும், தமிழ்ப் புலமையும் வியக்க வைக்கின்றன. நம் அனைவரையும் இன்றளவும் பெருமைப்பட வைக்கின்றன.

தமிழன் என்று சொல்லடா

தலை நிமிர்ந்து நில்லடா

எனக் கூறுமளவிற்கு நம்மை எல்லாம் தலைநிமிர்ந்து நிற்க வைத்துள்ளார் வீரமாமுனிவர் எனில் மிகையன்று. வீரமாமுனிவரின் சிறப்புக்களைக் காண்போம்.

இலக்கியப் பேருரைகள் நடத்துமளவிற்குப் புலமை பெற்றார்.

இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; “சுவடி தேடும் சாமியார்எனவும் அழைக்கப்பட்டார்.

தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம் திருப்புகழ்,

நன்னூல், ஆத்திசூடி முதலான நூல்களைப் பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.

தமிழ்க் கற்க ஏதுவாகத் தமிழ் - இலத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் 1000 தமிழ்ச் சொற்களுக்கு இலத்தீன் மொழியில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும். பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ் - போர்த்துக்கீசிய அகராதியை உருவாக்கினார்.

தமிழ் இலக்கிய இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்து வந்தன. அவற்றை மக்கள் எளிதில் படித்தறிய முடியவில்லை என்பதனை உணர்ந்து உரைநடையாக மாற்றியவர் இவர்.

சதுரகராதியை, நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார்.

சதுரகராதி:

வீரமாமுனிவர் 1710-இல் தமிழகம் வந்தார். அதற்கு முன்பாக தமிழகராதிகள் இருந்தாலும் தமிழ்-தமிழ் அகராதிகள் இருக்கவில்லை. சதுரகராதி என்ற பெயரில் வீரமாமுனிவர் முதல் தமிழ்-தமிழ் அகராதி படைத்தார். 21.11.1732 அன்று சதுரகராதி நிறைவுற்றதை வீரமாமுனிவர் அந்நூலின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார். சதுரகராதி முதலில் 1919-ஆம் ஆண்டில் அச்சு நூலாக வெளியிடப்பட்டது.

வீரமாமுனிவரின் அகரமுதலி வெளிவருவதற்கு முன்பு தமிழில் பல நிகண்டு நூல்கள் இருந்தன. அதாவது செய்யுள் வடிவில் இருக்கும் அகராதி வடிவத்திற்கு நிகண்டு எனப் பெயர். உரைநடையில் இருக்கும் நிகண்டின் வடிவமே அகராதி எனலாம். அகராதி என்றொரு புது வகைப் படைப்பு தமிழில் தோன்ற வீரமாமுனிவர் காரணமானார். - (தொடரும்)