புனித மரிய கொரற்றி 1890 ஆம் ஆண்டு, இத்தாலியில் ஏழ்மை, அன்பு, பக்தி மிகுந்த குடும்பத்தில் பிறந்தார். அன்னை மரியாவின் அரவணைப்பில் தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணித்தார். இறைவார்த்தையை தியானித்து, இறையன்பின் செல்வந்தரானார். காலையும்-மாலையும் செபமும், செபமாலையும் செபித்து தூயவரானார். 13 ஆம் வயதில் முதல் நற்கருணை பெற்றது முதல் நீண்டநேரம் இயேசுவுடன் உறவாடினார். இவருடைய குடும்பம் உரோமையிலுள்ள மாசெலெனி பிரபு வீட்டில் வேலை செய்தனர். அதே வீட்டில் தீயப்பழக்கங்களுக்கு அடிமையான அலெக்ஸாண்டரும் வாழ்ந்தான். அலெக்ஸாண்டர் கொரற்றியை பாவம் செய்யத் தூண்டினான். தூயவரான கொரற்றி பாவம் செய்யக்கூடாது என்றார். கொரற்றி வீட்டில் தனிமையில் இருந்தபோது, அலெக்ஸாண்டர் தனது ஆசைக்கு இணங்க வற்புறுத்தினான். மறுத்த கொரற்றியை தரதரவென்று மாடிக்கு இழுத்து சென்று, கத்தியால் 14 முறை குத்தி ஜூலை 6 ஆம் நாள் கொலை செய்தான்.