Namvazhvu
கனடா Sainte-Anne-de-Beaupré தேசிய திருத்தலம்
Saturday, 30 Jul 2022 06:41 am
Namvazhvu

Namvazhvu

கியூபெக் நகருக்கு கிழக்கே, புனித இலாரன்ஸ் ஆற்றங்கரையில் அமைந்துள்ள Sainte-Anne-de-Beaupré திருத்தலம், கனடாவின் எட்டுத் திருத்தலங்களில் ஒன்றாகும். 350 ஆண்டுகளுக்கு மேலாக, திருப்பயணிகளை ஈர்த்துவரும் புனித அன்னா தேசிய திருத்தலத்தில் பல புதுமைகள் நடைபெறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். அப்பகுதியில் வாழ்ந்துவந்த Étienne de Lessard என்பவர், குடியேற்றதாரர்களுக்கு உதவும் வகையில் ஓர் ஆலயம் கட்டுவதற்காக, கத்தோலிக்கத் திருஅவைக்கு, 1658ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி, தனது சொத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கினார். அச்சிற்றாலயத்தில் புனித அன்னா திருவுருவமும் வைக்கப்பட்டது. Louis Guimont என்பவர் வாதநோயால் துன்புற்றாலும். இவ்வாலயத்தின் கட்டுமானப் பணிகளுக்கு உதவிசெய்துவந்தார். அவர் அவ்வாலயத்தின் அடித்தளத்தில் மூன்று கற்களை வைத்தவுடன், தனது நோயின் வேதனைகள் அனைத்தும் மறைந்ததாக உணர்ந்தார். இவர் அற்புதமாய் குணமடைந்ததைத் தொடர்ந்து, பலரும் புனித அன்னாவிடம் செபிக்கத் தொடங்கினர். 13ம் லூயி அரசரின் மனைவியும், பிரான்சின் அரசியுமான ஆஸ்ட்ரியாவின் அன்னா உட்பட பலர் தங்களின் உடல், உள்ள நோய்களிலிருந்து குணமும் அடைந்தனர். நாளடைவில் இவ்விடத்திற்கு திருப்பயணிகளின் வருகை அதிகரித்து வந்ததால், இச்சிற்றாலயத்தைச் சுற்றி பசிலிக்கா ஒன்று எழுப்பப்பட்டு, 1876ஆம் ஆண்டில் வழிபாட்டிற்கென திறந்துவைக்கப்பட்டது. 1922ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் தேதி, இப்பசிலிக்கா தீயினால் சேதமடைந்தது. எனவே தற்போதைய பசிலிக்கா 1926ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. அதன் உட்புற வேலைகள் அனைத்தும் 1946ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டன.

இந்த பசிலிக்காவிலுள்ள பலவண்ண ஓவியங்கள், கலைவேலைப்பாடுகள், மரத்தாலான திருவுருவங்கள் போன்றவை அம்மக்களின் கிறிஸ்தவ நம்பிக்கையில் புனித அன்னாவின் பங்கை எடுத்தியம்புகின்றன. புனித அன்னா பசிலிக்கா, வட அமெரிக்காவிலுள்ள மிகப் பழமையான திருப்பயண திருத்தலமுமாகும். ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 26ம் தேதி சிறப்பிக்கப்படும் புனித அன்னா விழாவன்று, இத்திருத்தலத்திற்கு ஏராளமான திருப்பயணிகள் செல்கின்றனர். இப்புனிதர் கப்பல் பயணிகளின் பாதுகாவலராகப் போற்றப்படுகிறார்.