கோவையில் பிறந்து, தமிழ் இலக்கியப் படிப்பை விரும்பிக் கற்று, கடந்த முப்பது ஆண்டுகளாக தமிழ்த்துறையில் பேராசிரியராக சென்னை மாநிலக் கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளில் முத்திரைப் பதித்து, முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியராகி, உலக அளவிலும் தமிழக அளவிலும் இலக்கிய உலகில் அங்கீகரிக்கப்பட்டவர்தான் பேரா. முனைவர் பாக்யமேரி. எழுத்துலகில் கல்வியுலகில் இவர் ஒரு நிறைகுடம். தமிழக அரசின் வேலைவாய்ப்புத் தேர்வு எழுதுபவர்கள் இவரது நூல்களைப் படிக்காமல் தமிழ்த் தேர்வில் தேர்ச்சிப்பெறுவது இயலாது. முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களே இவரது திருமுகம். அப்படிப்பட்ட நூலாசிரியர் படைத்த அற்புதமான இரு நூல்களே ஐரோப்பிய கிறித்துவர் சமயப்பணிகள் மற்றும் அயலகக் கிறித்துவர் தமிழ்ப்பணிகள். இருநூல்களும் தமிழக அரசின் தொழில்துறை மற்றும் தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களின் வாழ்த்துரையோடும் தமிழக சிறுபான்மையினர் ஆணையத்தின் செயல்மிகு தலைவர் உயர்திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்களின் அணிந்துரையோடு வெளிவந்துள்ளன.
‘ஐரோப்பிய கிறித்துவர் சமயப்பணிகள்’ என்னும் நூலில் புனித தோமா, புனித பிரான்சிஸ் சவேரியார், ஓரியூர் புனித அருளானந்தர் ஆகியோரின் சமயப் பணிகளை எந்த அளவுக்கு விவரிக்க முடியுமோ அந்த அளவுக்கு, அன்றைய இந்தியச் சூழல், சமூக நிலை, சமய நிலை, பொருளாதார நிலை, இலக்கிய நிலை என்று எல்லா தளங்களிலும் தன் கவனத்தைச் செலுத்தி, ஒவ்வொரு பத்தியையும் முத்திரைப் பதிக்கிறவிதத்தில் படைத்துள்ளார். ஒவ்வொரு எழுத்திலும் உயிரும் மெய்யும் உறவும் ஒன்றிப்பும் நின்று விளையாடும். ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டுகிறபோது அதே பக்கத்தை இன்னொருமுறை வாசித்து அதிலுள்ள சிந்தனைகளை என்றும் நினைவில் வைத்துக் கொள்ள முடியுமா? என்ற வாசிப்பவரிடம் இயல்பாகத் தோன்றும். ஒவ்வொரு பக்கமும் உயிரோவியம்.. பேசும் எழுத்தோவியம்.