Namvazhvu
திருத்தந்தை அமைதியை உருவாக்குவதில் அறிவியலின் பங்கு
Saturday, 17 Sep 2022 04:41 am
Namvazhvu

Namvazhvu

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதற்கும், போர்களைத் தவிர்ப்பதற்கும் அறிவியல் அறிவு பயன்படுத்தப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை, பாப்பிறை அறிவியல் கழகத்தினரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

பாப்பிறை அறிவியல் கழகம் கடந்த மூன்று நாள்களாக நடத்திய ஆண்டு நிறையமர்வு கூட்டத்தில் பங்குபெற்ற ஏறத்தாழ எண்பது பிரதிநிதிகளை, செப்டம்பர் 10 ஆம் தேதி சனிக்கிழமையன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, உலகில் அமைதியைக் கொணர்வதற்கு அறிவியல் முக்கிய பங்காற்ற முடியும் என்று கூறியுள்ளார்.

காலநிலை மாற்றம், தொடர்ந்து இடம்பெற்றுவரும் போர்கள் உட்பட இவ்வுலகம் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சனைகளில் சிலவற்றைத் தீர்ப்பதற்கு அடிப்படை அறிவியல் குறித்த அறிவு சிறந்த முறையில் எவ்வாறு பயன்படுத்தப்படவேண்டும் என்பது பற்றிய தன் சிந்தனைகளை திருத்தந்தை பிரான்சிஸ் பகிர்ந்து கொண்டுள்ளார்.

1603ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்பிறை அறிவியல் கழகத்தின் வரலாறு பற்றிய சிந்தனைகளோடு தன் உரையைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கூட்டம் நடைபெற்றுள்ள, “மனித முன்னேற்றம், அமைதி, மற்றும், இப்பூமிக்கோளத்தின் நலத்திற்கு அடிப்படை அறிவியல்என்ற தலைப்பை மையப்படுத்தியும் தன் கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார்.

இந்த அறிவியல் கழகம், திருஅவையின் நிறுவனங்களுக்குள் தனித்துவமிக்க ஓர் இடத்தைக் கொண்டிருக்கிறது எனவும், திருஅவையின் உண்மை மீதுள்ள அன்பையும், உலகு பற்றிய அறிவையும் வெளிப்படுத்துவதன் ஒரு வழியாக, அது அறிவியல் ஆய்வை ஊக்கப்படுத்துகிறது எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.  

நம் மனிதக் குடும்பமும், சுற்றுச்சூழலும் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால்களுக்குப் பதிலளிப்பதற்கு உதவும்வண்ணம், உடன்பிறந்த உணர்வு, நீதி, மற்றும், அமைதியின் தேவைகளைக் கருத்தில்கொண்டதாய் அறிவியலில் இடம்பெறும் சாதனைகள் எப்போதும் அமையவேண்டும் என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்

மனித உரிமைகள், உலகளாவிய சட்டம், ஒருவர் ஒருவரோடு ஒத்துழைப்பு ஆகியவை மதிக்கப்படுவது இவ்வுலகில் அதிகமதிகமாகக் குறைந்துவரும்வேளை, அறிவியல் அறிவு, அமைதியைக் கட்டியெழுப்புவதை ஊக்கப்படுத்துவதாய் இருக்கவேண்டும் என்றுரைத்த திருத்தந்தை, இவ்வுலகில் இடம்பெற்றுவரும் மூன்றாம் உலகப் போர் மக்களை பெரும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது என கவலையோடு குறிப்பிட்டுள்ளார்

போர்களைத் தவிர்க்கவும், துன்பம், ஏழ்மை, அடிமைத்தனத்தின் புதிய முறைகள் போன்றவை ஒழிக்கப்படவும் வேண்டும் என்று வலியுறுத்திக் கூறியுள்ள திருத்தந்தை, அமைதியை உருவாக்கும் ஒரு சக்தியாக அறிவியல் மாறவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.