Namvazhvu
நற்கருணைக் கொண்டாட்டம் ஆசிய ஆயர் பேரவை நிறையமர்வு-இரண்டாம் வார நிகழ்வுகள்
Friday, 21 Oct 2022 07:28 am
Namvazhvu

Namvazhvu

வெளிப்படுத்தப்படும் உண்மைகள் என்ற தலைப்பில் ஆசிய ஆயர் பேரவை நிறையமர்வுக் கூட்டத்தின் இரண்டாம் வார நிகழ்வுகள் நற்கருணைக் கொண்டாட்டத்துடன் தொடங்கப்பட்டுதிருஅவையில் இளையோர் என்ற கருத்தை மையப்படுத்திய பல கலந்துரையாடல்களுடன் தாய்லாந்தில் நடைபெற்றன.

அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்கப்பட்டு 30 ஆம் தேதி  வரை தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய ஆயர் பேரவை நிறையமர்வுக் கூட்டத்தின் இரண்டாம் வார நிகழ்வுகள் அக்டோபர் 17ஆம் தேதி திங்கள்கிழமை முதல்திருஅவையில் இளையோர், பெண்கள் மற்றும்  புலம்பெயர்ந்தோரின் நிலை, பங்கேற்பு, ஆற்றும் பணிகள் போன்றவற்றைப்பற்றிய பல வல்லுனர்களின்  கலந்துரையாடலோடு தொடங்கப்பட்டது.   

இளையோர் குரலுக்கு செவிமடுக்கும் அருள்பணியாளர்கள் மறுநற்செய்தியாக வாழவேண்டும்  எனவும், வீடு, அலுவலகம், பள்ளி என எல்லாவற்றிலிருந்தும் மாறுபட்டதாக தலத்திருஅவை இருக்கவேண்டும்  எனவும் திருஅவை தலைவர்கள், மூத்தோர், இளையோருக்கு ஆன்மீக வழிகாட்டுதலை அளித்து, அவர்களின் வளர்ச்சிக்கு கருணையுடன் உதவிகள் புரிய வேண்டும் எனவும் தகமாட்சு மறைமாவட்டத்தின் இளையோர் பணிக்குழுத்தலைவரான அருள்பணியாளர் அகிரா தகயமா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

தொற்று நோயின் பரவல் ஒவ்வொருவரையும் டிஜிட்டல் உலகில் தன்னிறைவு பெற்றவர்களாக, ஆன்மீகப் பசியற்றவர்களாக மாற்றிவிட்டது எனவும், இளையோர் திருஅவையில் இல்லை என்பதை விட, இளையோர் மத்தியில் நானில்லை என்று எண்ணி செயல்படும் மேய்ப்பர்கள், இளையோரால் தேடப்படுபவர்களாக மாறுகின்றார்கள் எனவும் கோலாலம்பூர் இளையோர் பணிக்குழு உறுப்பினர்  திரு கிரிகோரி பிரவின் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆசிய திருஅவையில் பெண்கள் பங்களிப்பிற்கான புதிய பாதை, பற்றியும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளான, ஆண் பெண்பாகுபாடு, வருமான ஏற்றத்தாழ்வு, குடும்ப வன்முறை, போன்றவற்றிலிருந்து  விடுபட சமநீதியில் கவனம் செலுத்துவது அனைவரின் பொறுப்பு பற்றியும் புலம்பெயர்ந்த்தோர் நலன் பற்றியும்  அக்கலந்துரையாடல்களில் பேசப்பட்டன.