‘ஜி20’ கூட்டமைப்பின் 18-வது உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் கடந்த மாதம் உற்சாகத்தோடும், பெரும் ஆரவாரத்தோடும் நடந்தேறியிருக்கிறது. ‘ஜி20’ - யின் உறுப்பு நாடுகள் ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் தலைமைப் பொறுப்பேற்று வரும் நிலையில், 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான மாநாட்டை இந்தியா தலைமைப் பொறுப்பேற்று ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற கருப்பொருளில் நடத்தி முடித்திருக்கிறது. இது இந்தியாவில் நடைபெற்ற முதல் ‘ஜி20’ மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டை நடத்திய இந்திய ஒன்றிய அரசு வழக்கம் போல் நடைபெறும் ‘ஜி20’ மாநாடுபோல் அல்லாமல், 60 நகரங்களில் 200 கூட்டங்களை 125 நாடுகளிலிருந்து வந்த ஓர் இலட்சம் அதிகாரப்பூர்வ பங்கேற்பாளர்களைக் கொண்டு நடத்தியிருக்கிறது என்பது கூடுதல் தகவல். ஆயினும், கருப்பொருள் உணர்த்தும் ‘ஒரே பூமி...’ என்ற பதத்தில், ‘ஒரே’ என்ற சொல்லாடல் இந்தப் பா.ஜ.க. அரசின் அடிப்படை முழக்கத்தை எதிரொலிப்பதாகவே அமைந்திருக்கிறது; ஒரே நாடு... ஒரே மொழி... ஒரே தேர்தல்... என்பதையே நினைவூட்டுகிறது. எங்கும் ‘ஒரே’ என்பதே இவர்களின் அண்மைக்கால முழக்கமாக உள்ளது.
கூடுதல் செலவினங்களும், பகட்டான அலங்காரங்களும் கொண்டு, பெரும் வியப்பூட்டும் வகையில் யாவரும் வியந்து புகழ வேண்டும் என்ற எண்ணத்துடன் நடந்தேறிய இந்த உச்சி மாநாடு, அன்றைய நாள்களில் நிகழ்ந்த இந்தியாவின் மிக முக்கியமான ஒரு நிகழ்வைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது அல்லது மறைத்துவிட்டது என்பதே உண்மை. நம்மில் பலராலும் பெரிதும் கூர்ந்து கவனிக்கப்படாமல் கடந்து சென்ற நிகழ்வுகளில் ஒன்று, அண்மையில் வெவ்வேறு மாநிலங்களில் நடந்த ஏழு சட்டப்பேரவை இடைத் தேர்தல்கள்; மற்றும் நாக்பூரின் தலைமைப் பீடத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அதன் முடிவுகள்! ‘ஜி20’ உச்சி மாநாடு வெற்றி மாநாடு என்று இந்திய ஒன்றியத் தலைமை அமைச்சருக்குப் புகழாரம் சூட்டுவதிலேயே கருத்தாய் இருந்த ஊடகங்கள் பல, இந்த நிகழ்வைக் காட்சிப்படுத்தவும், செய்தியாக்கவும் தவறிவிட்டன. நெற்றிக்கண் திறந்து, உண்மை அறிந்து பேச வேண்டிய ‘விலையேறப்பெற்ற’ ஊடகங்கள் இன்று விலைபேசப்பட்டுவிட்டதால், அவை தனிமனித புகழ்ச்சிக்கு இரையாகிப்போயின.
ஆயினும், உண்மை அறிந்தோர் சிலர் உரைக்கும் செய்தி இந்த நாட்டையும், அதன் மக்களையும் நேசிப்போர் காதுகளில் எதிரொலித்துக்கொண்டேதான் இருக்கின்றது. காங்கிரஸ் உள்ளிட்ட 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இ-ந்-தி-யா’ என்று பெயரிடப்பட்ட கூட்டணி உருவான பிறகு சந்தித்த முதல் (இடைத்) தேர்தல் என்பதால் பலருடைய கவனத்தை அத்தேர்தல் ஈர்த்தது. இன்னும் சில மாதங்களில் ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் களும், 2024, மே மாதத்தில் மக்களவைக்கான பொதுத் தேர்தலும் வரவிருக்கும் சூழலில், இந்த ஆறு மாநிலங்களில் உள்ள ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் முக்கியமானதாகக் கவனிக்கப்பட்டன. ஆளும் பாசிச பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணியை ஆட்சியிலிருந்து அகற்ற மேற்கொள்ளப்பட்ட ஒரு வெள்ளோட்டமாகவே இது கருதப்பட் டது. இந்த இடைத்தேர்தலில் மூன்றை ஆளும் பா.ஜ.க.வும், நான்கை ‘இ-ந்-தி-யா’ கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளும் பெற்றன. ஆனால், ஊடகங்களில் நான்கைவிட, மூன்று பெரிதாக்கப்பட்ட விந்தையும் நடந்தேறியது. உண்மையில் பா.ஜ.க. என்பது ஊதிப் பெரிதாக்கப்பட்ட ஒரு பிம்பம் மட்டுமே என்பதை நடந்து முடிந்த இடைத் தேர்தல் முடிவுகள் காட்டிவிட்டன. குறிப்பாக, காவிக் கொள்கைகளின் பரிசோதனைக் கூடமான உத்திரப்பிரதேசத்தில் அக்கட்சிக்குச் சம்மட்டி அடி விழுந்திருக்கிறது. ‘இ-ந்-தி-யா’ கூட்டணியிடம் தோற்று, மண்ணைக் கவ்வியுள்ளது பா.ஜ.க. பிரதமர் பதவிக்கான ‘மியூசிக்கல் சேர்’ ஓட்டத்தில் மோடிக்குப் பின்னால் ஓடி வந்து கொண்டிருக்கும் யோகி ஆதித்யநாத், காற்றுப்போன ஒரு பலூனாக இன்று காட்சியளிக்கிறார். செய்வதறியாது கையைப் பிசைகிறது பா.ஜ.க.வின் தலைமைப் பீடமான நாக்பூர். 1957-60-களில் பேரறிஞர் அண்ணா கூறிய தீர்க்கத்தரிசனம் இங்கு நினைவுகூறத்தக்கது: “கூட்டுறவே நாட்டுயர்வுக்கு வழிவகுக்கும்; காலம் மாறும்; வல்லூறுகளைச் சிட்டுக்குருவிகள் வீழ்த்தும் காலமும் வரும்,” என்று அவர் கூறிய அந்தக் காலம் வந்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது.
இத்தேர்தல் முடிவுகளிலிருந்து நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது, ‘பா.ஜ.க. வெல்ல முடியாத கட்சி அல்ல! எதிர்க் கட்சிகள் வலுவாக ஒன்றுபட்டால், வெற்றி எளிதாகச் சாத்தியப்படும்’ என்பதுதான். ஆயினும், மாநிலத்திற்கு மாநிலம் எதிர்க் கட்சிகளின் ‘இ-ந்-தி-யா’ கூட்டணி பா.ஜ.க.வை அப்புறப்படுத்த வெவ்வேறு தேர்தல் உத்திகளைக் கையாள வேண்டியிருக்கிறது என்பதும், கூட்டணிக் கட்சிகளுக்கிடையே உள்ள பெரும் சவால்! எனவே, இக்கூட்டணிக் கட்சிகளுக்கிடையே முழு கொள்கைகளிலும் உடன்பாடு இல்லாவிட்டாலும், பா.ஜ.க.வை எதிர்ப்பது ஒன்றே முக்கிய இலக்காகக் கொண்டு உடன்பாடு கொள்ள வேண்டும். பா.ஜ.க.வை ஆட்சிக் கட்டிலிலிருந்து அகற்றுவது என்பதே இவர்களின் முழக்கமாக, செயல்பாடாக அமைய வேண்டும். மேலும், இக்கூட்டணிப் பயணத்தில் பா.ஜ.க.வின் எதிர்ப்பு வாக்குகள் ஒன்றுகூட சிதறிவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தைத் தவறாகக் கையாண்டதன் விளைவு என்ன என்ற பாடத்தைப் பா.ஜ.க.வுக்கு இக்கூட்டணி கற்றுத்தர வேண்டும்.
புதிய இந்தியா மலராதா! சனநாயகம் மீட்டெடுக்கப்படாதா! வேற்றுமையில் ஒற்றுமை மீண்டும் பேணப்படாதா!’ என்ற ஏக்கத்தில் சிறுபான்மையினரும், ‘இந்து’ என்ற போர்வைக்குள் பா.ஜ.க.வால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ள சைவ - வைணவ தமிழர்களும், நாட்டார் தெய்வங்களைக் கொண்டுள்ள தமிழ் மரபு களும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது, ஆளும் ஒன்றிய பா.ஜ.க. வின் ஆட்சியைச் சகித்துக்கொள்ள முடியாத மனநிலையையே பிரதிபலிக்கின்றது. இம்மனநிலையின் எதிரொலிப்பு, 2024 இல் காலம் மாறும்; காட்சி மாறும்; ஆட்சி மாறும் என்பதையே உணர்த்துகிறது. அதுவே நம் எதிர்நோக்கும் கூட!
‘பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து’ (குறள் 738)
என்று நாட்டின் ஐவகை அணிகலன்களைக் கூறும் ஐயன் வள்ளுவரின் கூற்று நனவாக, நோய் இல்லாத, செல்வம் நிறைந்த, விளைபொருள் வளம் கூடிய, இன்ப வாழ்வு அமைந்த, நல்ல காவல் கொண்ட அரசு அமையவும், நம் முன்னோர் கண்ட கனவு நனவாகவும் எதிர்வரும் 2024 - நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருப்போம்!
காரணங்களைக் காட்டி சூழ்நிலைக் கைதிகளாக இருப்போமானால், நமக்கு ஐந்தறிவு போதும்; ஆனால், சூழ்நிலையை வெல்லுகின்ற ஆற்றல் நம்மில் இருப்பதால், நமக்கு ஆறாம் அறிவும் இருக்கிறது என்றே உணர்த்திடுவோம்!
அன்புத் தோழமையில்,
முதன்மை ஆசிரியர்