மதுரை உயர் மறைமாவட்ட அருள்பணியாளர், இறையியலாளர், முனைவர் L. ஆனந்தம் அவர்கள், தூய அருளானந்தர் தன் மறைசாட்சியத்தால் செந்நீர் சிந்திய புண்ணியப் பூமியாம் சிவகங்கை மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை உயர் மறைமாவட்டத்தின் இரு பேராயர்களின் செயலராக, கொடைக்கானல் பங்குப் பணியாளராக, ஜெர்மன் நாட்டில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக, சென்னை - பூவிருந்தவல்லி குருமடப் பேராசிரியராக, தமிழக ஆயர் பேரவையின் ‘நம் வாழ்வு’ வார இதழின் முதன்மை ஆசிரியராக, மதுரை-பேதுரு ஆன்மிகப் பயிற்சி குருமட அதிபராக, மதுரை உயர் மறைமாவட்ட மேய்ப்புப்பணி இயக்குநராக, தூய செபமாலை அன்னை பங்குப் பணியாளராக, மறைவட்ட அதிபராக, தமிழ்நாட்டில் தலைசிறந்த மரியியல் பேராசிரியராக, இந்திய இறையியலாளர்கள் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவராக, தமிழ் இறையியல் பேரவையின் முன்னாள் தலைவராக, தமிழ்த் தொகுப்பு இறையியலாளர் பேரவையின் தற்போதைய தலைவராக, சிறந்த மறையுரையாளராக, எழுத்தாளராக, தமிழ் இலக்கியப் பேச்சாளராக, பன்முகத் தன்மை கொண்ட அருள்கலைஞராக அறியப்பட்ட தந்தை L. ஆனந்தம் அவர்கள் மதுரை உயர் மறைமாவட்ட துறவியர் பேரவையின் ஆயர் பொதுப் பதில் குருவாக அண்மையில் நியமிக்கப்பட்டார்.
தற்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தந்தை அவர்களைச் சிவகங்கை மறைமாவட்டத்தின் மூன்றாவது ஆயராக, செப்டம்பர் 21, 2023 அன்று நியமித்திருக்கிறார்கள்.
‘நம் வாழ்வு’ வார இதழின் மேனாள் முதன்மை ஆசிரியர், ஆயர் பொறுப்பேற்பது கண்டு ‘நம் வாழ்வு’ மகிழ்கிறது; புதிய ஆயரின் பணி சிறக்க வாழ்த்துகிறது!
- முதன்மை ஆசிரியர்
‘நம் வாழ்வு’