Namvazhvu
இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை யூபிலி 2025: எதிர்நோக்கின் திருப்பயணிகள்!
Wednesday, 29 Nov 2023 12:01 pm
Namvazhvu

Namvazhvu

2025-ஆம் ஆண்டு பொது யூபிலி தயாரிப்பின் தொடக்க விழா நவம்பர் 26, 2023 ஞாயிற்றுக்கிழமை, கிறிஸ்து அரசர் பெருவிழா திருவழிபாட்டு வழிகாட்டி

2025-ஆம் ஆண்டு பொது யூபிலி தயாரிப்பினை நவம்பர் 26, 2023 அன்று கிறிஸ்து அரசர் பெருவிழாவின்போது தொடங்க அனைத்துத் தலத் திரு அவைகளுக்கும் முன்மொழியப்பட்டுள்ளது. ஆயினும், தலத் திரு அவை ஆயர் தகுந்த நாள் மற்றும் நேரத்தைத் தேர்ந்துகொள்ளலாம். நாம் யூபிலி 2025-இன் தயாரிப்புகளைத் தொடங்குகிறோம்; கொண்டாட்டங்களை அல்ல என்பதைக் குறிப்பில் கொள்ளவும். கொண்டாட்டங்கள் நவம்பர் 24, 2024 அன்று திருத்தந்தையால் தொடங்கி வைக்கப்படும்.

தயாரிப்பின் தொடக்கம் மூன்று அம்சங்களைக் கொண்டது:

யூபிலி 2025-இன் முத்திரைச் சின்னம் திறக்கப்படல். இச்சின்னம் இயற்கைக்கு இணைந்த அட்டையிலோ அல்லது கொடிமரத்தில் ஏற்றத்தகுந்த துணியிலோ, வெள்ளை பின்னணி நிறத்தில் அச்சிடப்பட்டு, திறக்கப்படவோ அல்லது ஏற்றப்படவோ வேண்டும். அனைத்துப் பங்குகள் மற்றும் சமய நிறுவனங்களில் இச்சின்னத்தைப் பொதுப் பார்வையில் வைக்க அழைக்கப்படுகிறார்கள். பலர் பங்குகொள்ளும் அளவில் அருள் பணியாளர்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி, 2025-ஆம் ஆண்டு பொது யூபிலியின் தயாரிப்பு பற்றிய விளக்கங்கள் அளிக்கப்படலாம். யூபிலி 2025-யின் மன்றாட்டு நவம்பர் 26, 2023 அன்று தொடங்கி யூபிலி ஆண்டு 2025-யின் இறுதிவரை சொல்லப்படும்.

திருப்பலி முன்னுரை மற்றும் முத்திரைச் சின்னம் வெளியிடல்

இயேசு கிறிஸ்துவில் அன்பு நிறை சகோதர சகோதரிகளே! நமது தாய்த் திரு அவை ’ஒருங்கிணைப்பு, பங்கேற்பு, மறைப்பணி’ ஆகியவற்றைக் கருத்தாய்வு செய்து, கூட்டொருங்கியக்கம் சார்ந்த மாமன்றத்தின் 16-ஆம் பொது அமர்வின் முதல் அமர்வை நிறைவு செய்துள்ளது. இப்பயணம் அக்டோபர் 2021-இல் மறைமாவட்ட நிலையில் அனைத்துப் பொதுநிலையினரும் உரையாடல்களில் பங்கு கொண்டதுடன், உலகில் உள்ள அனைத்து நாடுகளின் குரல்களையும் தெளிந்து, அகில உலக நிலையில் ஒருங்கிணைப்பு, பங்கேற்பு, மறைப்பணி ஆகியவற்றைக் கலந்துரையாடல் செய்து, ‘மறைப்பணியில் கூட்டொருங்கியக்கத் திரு அவை’ என்ற ஒருங்கிணைந்த அறிக்கையை இதன் கனியாகப் பெற்றோம்.

கூட்டொருங்கியக்கப் பயணத்தோடு இணைந்தும், திருத் தந்தையின் அழைப்பிற்கு இசைந்தும் இந்தியத் திரு அவை இன்று யூபிலி 2025-இன் தயாரிப்புகளைத் தொடங்குகின்றோம்.

பொது யூபிலி கொண்டாட்டத்தின் பொன்மொழி ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’. உறுதியில்லா நிலை மற்றும் துன்பங்களை உருவாக்கிய பெருந்தொற்று மற்றும் போர்களின் மத்தியில், எதிர்நோக்கின் முக்கியத்துவத்தை நம் திருத்தந்தை பிரான்சிஸ் கோடிட்டுக் காட்டுகிறார்.

‘கற்றறிந்து கொள், இறைவேண்டல் செய், எழுந்து நட’ - இந்தச் சொற்களை நாம் இன்று நினைவில் கொள்வோம். இந்தத் தயாரிப்பு ஆண்டாகிய 2023-2024-யைத் தொடங்கும் நாம், இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடுகளில் உள்ளடங்கிய நான்கு அமைப்பு ஆவணங்களைக் கற்றறிவோம். அத்துடன் மனிதம் முழுமைக்காகவும் திரு அவையுடன் இணைந்து இறைவேண்டல் செய்வோம். இதைத் தொடர்ந்து 2025-இல் உரோமை மாநகரின் யூபிலி வாயில் வழி நடந்து, நான்கு பேராலயங்களுக்கும் திருப்பயணம் மேற்கொள்வோம்.

நாம் இப்பொழுது வெளியிடப் போகும் யூபிலி 2025 முத்திரைச் சின்னம் - நான்கு வண்ணங்களில் நான்கு உருவங்கள் - உலகின் நான்கு எல்லைகளிலிருந்து எழுந்து வரும் மானிடம் அனைத்தையும் சித்தரிக்கின்றது. அவர்கள் ஒன்றிணைந்த சகோதரத்துவத்தில் ஒருவரை ஒருவர் தழுவுகின்றனர். முன்னே செல்லும் உருவம் எதிர்நோக்கு அளிக்கும் சிலுவையைப் பற்றிக் கொண்டுள்ளது. உருவங்களுக்குக் கீழே உள்ள பெரும் அலைகள், குழப்பங்களும், துயரங்களும் மேலோங்கிய இன்றைய உலக நிலையை உருவகப்படுத்துகிறது. சிலுவையின் கீழ்ப்பகுதி நீட்டப்பட்டு ஒரு நங்கூரத்தின் வடிவம் பெற்றிருப்பது எதிர்நோக்கின் சின்னம். திருப்பயணியின் பயணம் தனிநபர் ஒருவரின் முயற்சி அல்ல; மாறாக, ஒன்றிணைந்த செயல் திறன் என்பதை இப்படம் வர்ணிக்கின்றது. முத்திரைச் சின்னத்தின் கீழ் யூபிலி 2025-ஆம் ஆண்டின் பொன்மொழியாக: ‘Peregrinantes in Spem’ (எதிர்நோக்கின் திருப்பயணிகள்) அமைந்திருக்கிறது.

யூபிலி 2025-கடவுளையும், திரு அவையையும், நம் ஒவ்வொருவரையும் கொண்டாடுவதற்கானது. பெருந்தொற்றுக்குப் பின் போர்த்தாக்கம் காணும் உலகிற்கு ‘எதிர்நோக்கு’ தேவை. எதிர்நோக்கின் திருப்பயணிகளாக நாம் நம் குடும்பங்கள், பணித்தளங்கள், பங்குகள், மறைமாவட்டங்கள், சமூகம் ஆகியவற்றில் எதிர்நோக்கின் ஒளியேற்றுவோம். கிறிஸ்து அரசர் நம்மில் எதிர்நோக்கின் கதிரை ஊன்றச் செய்து, பணிவிடையின் பாதையில் நாம் நடக்க ஊக்கமளிப்பாராக! இப்பொழுது, யூபிலி 2025-இன் முத்திரைச் சின்னத்தை வெளியிடுவோம்.

மறையுரைக் குறிப்புகள்

(தொடர்ந்து வரும் பகுதி யூபிலி 2025-இன் பொருள், நோக்கம், தயாரிப்பு மற்றும் இதன் கொண்டாட்டம் ஆகியவற்றை விவரிக்கின்றது. மறையுரையைத் தயார் செய்யக் கருவியாக உதவுகிறது. நம்பிக்கையாளர் மன்றாட்டுகளின் முடிவில் சிறிது நேர அமைதியின்போது, குருவானவர், யூபிலி 2025-இன் தயாரிப்புகள் பயனுள்ளதாக இருக்க வேண்டுமென்று மன்றாட மக்களை அழைக்கின்றார்)

a) விவிலியத்தில் யூபிலி: சொற்பிறப்பியல் ரீதியாக ‘யூபிலி’ என்ற சொல் எபிரேய மொழியில், ஐம்பதாவது ஆண்டின் பிறப்பை அதாவது (7 முறை 7 ஆண்டுகள்) 49 ஆண்டுகளின் நிறைவை அறிவிக்கப் பயன்படுத்தப்படும் எக்காளத்தைக் குறிக்கும் ‘யூபில்’ என்ற மூலச்சொல்லிலிருந்து வருகிறது. லேவியராகமம் 25:8-13-இன்படி யூபிலி விழா கொண்டாட்டம் அடிமைகள் விடுவிக்கப்படுவது, கடன்கள் மன்னிக்கப்படுவது, நிலபுலன்கள் திருப்பிக் கொடுக்கப்படுவது என்பவைப் பற்றி விவரிக்கின்றது. அதாவது, நான்கு ‘R’ - REST (நிலத்திற்கு ஓய்வு); REVIEW (மக்கள் மற்றும் கால் நடைகள் கணக்கெடுப்பு, நில அளவுகள் பரிசீலனை); RESTORE (அனைத்தையும் புதுப்பித்துச் சமூகக் கடிகாரத்தைத் தொடக்க நிலைக்கு நகர்த்தி), RECONCILE (கடவுளோடும், ஒருவர் மற்றவரோடும் ஒப்புரவு செய்வது) என்பதே யூபிலியின் புரிதல். இறைவாக்கினர் எசாயா (காண்: எசா 61; லூக் 4) கூறும் புனித ஆண்டு, இந்த யூபிலி விழாவினையே குறிப்பிடுகிறது. இங்கு புனித ஆண்டு, கடவுளின் தயவையும், கருணையையும் நினைவுகூர்ந்து அறிக்கை செய்வது என்பதாகும். திருவிவிலியக் கண்ணோட்டத்தில் யூபிலி விழா, கடந்ததை உள்வாங்கி (விடுதலையை நினைத்து), நிகழும் இத்தருணத்தை வாழ்ந்து (ஆறுதல் பெற்று), வருங்கால நோக்கத்தை (முன்னோக்கிச் செல்ல) அமைப்பது. இதுவுமின்றி யூபிலி என்பது ‘காலத்தின் விழா’. காலத்தின் விழா என்ற காரணத்தால், இது கடவுளிடமிருந்து பெற்ற பரிசு. ஆகவேதான் ‘எல்லாக் காலங்களும், யுகங்களும் உம்முடையதே’ என்று பாஸ்கா திருவிழிப்பின்போது மன்றாடுகிறோம்.

b) வரலாற்றில் யூபிலிகள்: முதல் முறையாகப் ‘புனித ஆண்டு’ என்ற ஜூபிலி வருடத்தைத் திருத்தந்தை 8-ஆம் போனிபாஸ் 1300-ஆம் ஆண்டில் அறிவித்தார். தொடக்கத்தில் 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை யூபிலி விழா கொண்டாடப்பட்டது; திருத்தந்தை 6-ஆம் கிளமென்ட் 1343-இல் இதை 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடவும், 1470-ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் பவுல் இதை 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடவும் ஏற்பாடுகள் செய்தனர். இத்துடன் சிறப்பான புனித ஆண்டுகளும் கொண்டாடப்பட்டன: 1933-ஆம் ஆண்டு திருத்தந்தை 11-ஆம் பயஸ் 1900-ஆம் (ஆயிரத்து தொள்ளாயிரத்து) மீட்பின் ஆண்டு விழாவாகக் கொண்டாடினார் (இதனை அடிப்படையாகக் கொண்டு சில அருங்கொடைக் குழுக்கள் 2023-ஆம் ஆண்டைப் பெரும் பணிக் கட்டளையின் யூபிலியாகக் கொண்டாடுவதாகப் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால், திரு அவை இதை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை).

2015-ஆம் ஆண்டை திருத்தந்தை பிரான்சிஸ் இறை இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டாக அறிவித்தார். ‘பெரும் யூபிலி 2000’ - இதற்கு முன் நடந்தேறிய நடைமுறை ஜூபிலியாக இருந்ததுடன், அதற்கு மூன்று ஆண்டுகள் தயாரிப்பு செய்தோம்: 1997 (திருமகனாம் கடவுள்), 1998 (தூய ஆவியாராம் கடவுள்) மற்றும் 1999 (தந்தையாம் கடவுள்). புனித வாயில் வழியாக நுழைதல், திருப்பயணங்கள் மேற்கொள்ளுதல், பேறுபலன்கள் பெறுதல் ஆகியவை யூபிலி நிகழ்வுகளின் செயல்பாடுகளைக் கொண்டு அமைகிறது.

c) ஜூபிலியின் சிறப்பியல்புகள்: யூபிலி விழா செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் நற்செய்தி அறிவிப்புப் பணி மையத்தின் உலகளாவிய பணி சார்ந்த அடிப்படை கேள்வித் துறை யூபிலியின் ஏழு சிறப்பியல்புகளை முன்வைக்கின்றன. அவைகள்: 1) பல தளங்களைத் தாண்டி தோழர்களுடன் திருப்பயணம் செய்வது; 2) புனித வாயில் வழியாக ‘இயேசுவே வாயில்’ என்ற நினைவில் நான்கு உரோமை பேராலயங்களுக்குள் நுழைவது;

3) ஒப்புரவு (கடவுளை நம் வாழ்வில் மையப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்டுவது, பாவ அறிக்கை செய்வது); 4) இறைவேண்டல் (கடவுளின் பிரசன்னத்திற்கும், அவருடைய அன்பின் சலுகைக்கும் திறந்த மனம் கொண்டிருப்பது); 5) திருவழிபாடு (திரு அவையின் பொது இறைவேண்டல், உச்சமும் ஊற்றும், வாயில் திறப்பு); 6) நம்பிக்கை அறிக்கை (திருமுழுக்குப் பெற்றவரின் அடையாளம், திருத் தூதர் நம்பிக்கை அறிக்கை, நைசீன் நம்பிக்கை அறிக்கை) மற்றும் 7) பேறுபலன்களை நாடும் செயல்பாடுகள் (இறை இரக்கத்தை அனுபவித்தல், துன்பங்களை ஏற்றுக்கொள்ளல்).

d) ஜூபிலியின் மூன்று நோக்கங்கள்:

1) இயேசுவைக் கொண்டாடுவது. யூபிலி ஆண்டில் நாம் முதன்மையாகத் தூய ஆவியாரின் வல்லமையால் மனுவுருவான தந்தையின் மகன் இயேசுவைக் கொண்டாடுகிறோம். அவருடைய பிறப்பு, வாழ்வு, பணி, பாடுகள், சாவு மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை நினைவுகூர்கின்றோம். அவரை இன்னும் தெளிவாக அறியவும், இன்னும் மென்மையாய் அன்பு செய்யவும், இன்னும் நெருக்கமாய் அவரைப் பின்பற்றவும் மன உறுதியுடன் பலன் தரும் முயற்சிகளை மேற்கொள்வோம். 2) திரு அவையைக் கொண்டாடுவது - இவரே நம் தாயும்-ஆசிரியருமாய் இருக்கிறவர். நம் உடனிருப்பாலும், பங்களிப்பாலும் நம் புனித கத்தோலிக்கத் திரு அவைக்கு நம் உறுதியைப் புதுப்பிப்போம்.

3) நம்மையே நாம் கொண்டாடுவது. நம்முடைய தனி வரங்களாலும், கொடைகளாலும், அழைப்புகள் மற்றும் பணிகளாலும், நம் வாழ்க்கை முறைகள் மற்றும் விழுமியங்களாலும் நாம் ஒருவரை ஒருவர் கொண்டாடுகிறோம். கடவுளை நினைவில் கொள்ளவும், அவரோடும், அவரது திரு அவையோடும் நாம் கொண்ட உறவை ஆய்வு செய்யவும், கடவுளோடும், அவர் தம் மக்களோடும் நம் உறவுகளைப் புதுப்பிக்கவும் ஜூபிலி 2025 நம்மை அழைக்கின்றது. ஒன்றிணைந்து நற்செய்திப் பணி செய்து, பங்களித்து, கூட்டொருங்கியக்கப் பயணம் மேற்கொள்ளும் சூழலில், நாம் இயேசுவையும், திரு அவையையும், நம்மையும் கொண்டாடுவது அமைகிறது.

e) கற்றறியவும், செபம் செய்யவும் ஓர் ஆண்டு (2023-2024): கடவுளின் மக்கள் முன்செல்ல திசை மற்றும் வழிகாட்டுதல் பெறும் பொருட்டு இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் நான்கு அமைப்பு ஆவணங்களைக் கற்றறிய நம் திருத்தந்தை விரும்புகிறார். நான்கு அமைப்பு ஆவணங்களை (Dei Verbum, Sacrosanctum Concilium, Lumen Gentium, and Gaudium et Spes) வாசித்து, மன்றத்தின் பொது கருப்பொருள்களைப் புரிந்துகொள்ளவும், இயேசுவையும்- திருஅவையையும், இன்றைய உலகில் நம் வாழ்வையும் ஆராய நாம் அழைக்கப்படுகின்றோம்.

இரண்டாம் வத்திக்கான் சங்கம் மற்றும் நான்கு அமைப்பு ஆவணங்கள் ஆகியவற்றின் பின்புலன்களைத் தரும் வகையில், நற்செய்தி அறிவிப்புப் பணி மையம் 35 சிறு புத்தகங்களை வெளியிட்டுள்ளது. இந்த இறைவேண்டல் ஆண்டில் நாம் அகில உலகத் திரு அவையோடு இணைந்து தலத் திரு அவைகளில் அனைத்து மானிடத்துக்காகவும் இறைவேண்டல் செய்ய அழைக்கப்படுகின்றோம். கிறிஸ்தவ வாழ்வு, அருள்சாதனங்கள், அருளடையாளங்கள், பக்தி முயற்சிகள், பொது வழிபாடுகள் ஆகியவற்றில் நாம் செபத்தை பற்றிய சிந்தனைகளை மேற்கொள்ளலாம். இந்த மையம் செபத்தைக் குறித்து 9 குறிப்பேடுகளை வெளியிட்டுள்ளது.

f) யூபிலி ஆண்டு (2025): யூபிலி ஆண்டில் நாம் நான்கு பேராலய (புனிதர்கள் பேதுரு மற்றும் பவுல் ஆலயம், புனித யோவான் லாத்தரன் ஆலயம், புனித மரியாவின் பேராலயம், நகர்ச்சுவர் வெளியே உள்ள புனித பவுல் பேராலயம்) புனித வாயில்களில் நுழைவோம். சிறைகள், முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள், மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள் எதிர்நோக்கின் சுடரை ஏற்ற, அவ்விடங்களுக்குச் சென்று எதிர்நோக்கின் வாயில்களுக்குள் நுழைவோம்.

இந்தப் பொது யூபிலி 2025 நம்மை எதிர்நோக்கின் பயணிகளாக, எதிர்நோக்கை அளிப்பவர்களாக, எதிர்நோக்கை வாழ்பவர்களாகக் கூட்டொருங்கியக்கப் பயணத்தின் ஓர் அங்கமாக இருக்க நம்மை அழைக்கின்றது.