Namvazhvu
இந்தியத் திரு அவையின் கோரிக்கை
Monday, 15 Apr 2024 06:48 am
Namvazhvu

Namvazhvu

கேரளாவில் யானை தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், மாநில அரசு விரைந்து இதற்குத் தீர்வு காண வேண்டுமென்று சீரோ-மலபார் வழிபாட்டு முறை பேராயர் இரபேல் தாட்டில் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

மக்கள் மட்டுமல்ல, மாறாக அவர்கள் கடினமாக உழைத்து உற்பத்தி செய்யும் உணவுப் பொருள்களும் பாழாக்கப்படுகின்றன என்றும் பேராயர் கருத்துத் தெரிவித்துள்ளார். வன விலங்குகளைப் பாதுகாக்க நம்மிடையே கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனாலும், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இடையே மோதல் எழும் சூழலில், மனிதர்கள் குறைந்த அளவே பாதுகாக்கப்படுகிறார்கள் என்று பேராயர் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

பிப்ரவரியில் தொடங்கி நான்கு மாதங்கள் வரை நீடிக்கும் கோடைக்காலத்தில், வன வளங்கள் வறண்டு போவதால், வன விலங்குகள், அதிலும் குறிப்பாக, யானைகள் தண்ணீர் மற்றும் உணவைத் தேடி மனித வாழ்விடங்களுக்குள் நுழைவதால் இத்தகைய சம்பவங்கள் நிகழ்கின்றன. யானை தாக்குதல்கள் நிகழும் கேரளாவின் வடக்கு மாவட்டத்திலுள்ள பத்து இலட்சம் மக்களில் ஏறத்தாழ 22 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். இவர்கள் பெரும்பாலும் கிழக்கு வழிபாட்டு முறையான சீரோ-மலபார் தலத் திரு அவையின் உறுப்பினர்கள்.

2022-2023-ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி கேரள மாநிலத்தில் 8,873 காட்டு விலங்குகளின் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இதில் 98 நபர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் யானைகள் தாக்கிக் கொல்லப்பட்டவர்கள் மட்டும் 27 பேர் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.