Namvazhvu
Diocese of Vellore வேலூர் மறைமாவட்டத்தின் நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அருள்முனைவர் ஜான் ராபர்ட்
Monday, 06 Apr 2020 06:19 am
Namvazhvu

Namvazhvu

வேலூர் மறைமாவட்டத்தின் ஆறாவது ஆயராக மேய்ப்புப் பணி ஆற்றிய மேதகு ஆயர் சவுந்தரராஜூ பெரிய நாயகம் அவர்கள், மார்ச் மாதம் 21 ஆம் தேதி திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக இறந்து நல்லடக்கம் செய்யப்பட்டார். அதற்கு பிறகு, மார்ச் மாதம் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை,  திருத்தந்தையின் இந்திய பிரதிநிதி மேதகு பேராயர் ஜியாம்பாட்டிஸ்டா டிகுவாத்ரோ அவர்களின் வழிகாட்டுதல்படி வேலூர் மறைமாவட்ட ஆலோசக-அருள்தந்தையர்கள் ஒன்றுகூடி ஒருமனதாக வேலூர் மறைமாவட்டத்தின் தற்போதைய முதன்மைக் குரு பேரருள்திரு. முனைவர் I.ஜான் ராபர்ட் அவர்களை,  மறைமாவட்ட நிர்வாகியாக தேர்ந்தெடுத்துள்ளனர்.  

புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் இறையியல் பேராசிரியாகப் பணியாற்றிய இவரை, ஆயர் சவுந்தரராஜூ அவர்கள் ஜூன், 2013 அன்று மறைமாவட்ட முதன்மைக் குருவாகத் தேர்ந்துகொண்டார் என்பதும் ஆயர் அவர்களுக்கு உறுதுணையாக வேலூர் மறைமாவட்ட அருள்பணியாளர்களையும் துறவியர்களையும் இறைமக்களையும் திறம்பட வழிநடத்தினார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இவர் வேலூர் மறைமாவட்டத்தில் உள்ள உதேயேந்திரம் பங்கில் மே 29, 1963 ஆம் ஆண்டு பிறந்தார். இவருடன் உடன் பிறந்த அறுவரில் ஒருவர் சலேசிய அருள்பணியாளராகவும் ஒருவர் குட் ஷெப்பர்டு அருள்சகோதரியாகவும் இறைத்தொண்டு ஆற்றுகின்றனர். 
வேலூர் மறைமாவட்டத்திற்காக மே 03, 1989 அன்று குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அருள்முனைவர் ஜான் ராபர்ட் அவர்கள்,  கருமாத்தூர் புனித அருளானந்தர் கல்லூரியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அளவில் இளங்கலை மெய்யியலில் தங்கப் பதக்கமும் உலகப் புகழ்பெற்ற பனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் முதுகலை இந்திய மெய்யியல் மற்றும் சமயப் பாடப்பிரில் தங்கப்பதக்கமும் வென்றுள்ளார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் சைவ சித்தாந்தாவில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட இசைக் குறுந்தகடுகளையும் ஒலிப்பேழைகளையும் வெளியிட்டு இசைத்தமிழுக்கும் திருஅவைக்கும் தொண்டாற்றியுள்ளார். நம் வாழ்வு வார இதழிலும் மலையருள் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ மாத இதழ்களிலும் பல்வேறு கட்டுரைப் படைத்து இயல் தமிழுக்கும் தொண்டாற்றியுள்ளார். சிறந்த மறையுரையாளரான இவர் ஐந்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார்.