Namvazhvu
Church in Pakistan பாகிஸ்தானில் முதல்முறையாக நேரடி ஒளிபரப்பில் திருப்பலி
Friday, 17 Apr 2020 02:53 am
Namvazhvu

Namvazhvu

பாகிஸ்தான் இராவல்பிண்டியின் புனித யோசேப்பு பேராலயத்தில், ஏப்ரல் 12, உயிர்ப்புப் பெருவிழாவன்று நிறைவேற்றப்பட்ட திருப்பலி, தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது குறித்து, அம்மறைமாவட்டத்தின் பேராயர், ஜோசப் அர்ஷத் அவர்கள், பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு தன் நன்றியைக் கூறியுள்ளார்.

பொதுவாக, பாகிஸ்தான் தொலைக்காட்சியில், கிறிஸ்து பிறப்பு மற்றும் உயிர்ப்புப் பெருவிழாக்களின்போது, அவ்விழாக்களைக் குறித்த ஒரு சில செய்திகள் மட்டுமே இடம்பெற்று வருவது வழக்கம். இவ்வாண்டு, முதல் முறையாக, தேசிய தொலைக்காட்சியில், உயிர்ப்புப்பெருவிழா திருப்பலி, நேரடி ஒளிபரப்பின் வழியே மக்களைச் சென்றடைந்தது என்று ஒரு செய்திக்குறிப்பு கூறுகிறது.

பல்சமய அமைதி மற்றும் ஒத்துணர்வு சங்கத்தின் தலைவர், அல்லாமா முகமத் ஆக்சான் சித்திக் (Allama Muhammad Ahsan Siddiqui) அவர்கள், பாகிஸ்தான் தேசிய தொலைக்காட்சி மேற்கொண்ட இந்த நேரடி ஒளிபரப்பு, சிறுபான்மையினரும் இந்நாட்டில் சம உரிமைகள் கொண்ட குடிமக்கள் என்பதை உணர்த்தியுள்ளது என்றும், இது, உண்மையிலேயே நேர்மறையான முன்னேற்றம் என்றும் கூறியுள்ளார்.

இந்த நேரடி ஒளிபரப்பில் திருப்பலியாற்றி மறையுரை வழங்கிய பேராயர் அர்ஷத் அவர்கள், கோவிட் 19 தொற்றுக்கிருமி நெருக்கடி நேரத்தில் உழைத்து வரும் மருத்துவப் பணியாளர்களுக்கு சிறப்பான முறையில் நன்றி கூறினார்.

இஸ்லாமியரை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள பாகிஸ்தான் வரலாற்றில், முதல்முறையாக, கத்தோலிக்கர்களின் திருப்பலி நேரடி ஒளிபரப்பில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா நோய்த்தொற்றின்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி தலைமையிலான அனைத்து சமயத் தலைவர்களுடனான ஆலோசனையின்போது சென்னை மயிலை  பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோனிசாமி அவர்கள், தமிழக அரசுத் தொலைக்காட்சியில் (பொதிகையில்) புனித வார திருப்பலிக் கொண்டாட்டங்களை நேரடியாக ஒளிபரப்ப ஆவண செய்ய வேண்டும் என்ற கோரிக்கைவிடுத்தார். அதனைத் தமிழக அரசு பரிசீலிக்காதது இங்கே வருந்தத்தக்கது.