No icon

உக்ரைன் போர் குறித்த திருப்பீடத்தின் நிலைப்பாடு

உரையாடலில் நம்பிக்கை இழக்காமல் இருக்க திருப்பீடம் அழைப்பு

தொடர்ந்து போர் நடைபெற்றுவரும் உக்ரைன் நாட்டில் அமைதியைக் கொணர்வதற்கு, உரையாடலில் சோர்வுறாது ஈடுபடவேண்டியது முக்கியம் என்று, பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள் கூறியுள்ளார்.

"அமெரிக்கா" என்ற இயேசு சபையினரின் இதழுக்கு, வத்திக்கான் நிரூபராகப் பணியாற்றும் Gerard O’Connell என்பவருக்கு அளித்த பேட்டியில், உக்ரைன் போர் குறித்த திருப்பீடத்தின் நிலைப்பாடு, திருத்தந்தையின் உக்ரைன் பயணம் போன்றவை குறித்த தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டபோது பேராயர் காலகர் இவ்வாறு கூறியுள்ளார்,.

உக்ரைனில் அமைதியை நிலைநிறுத்துவதற்கு, உலகளாவிய சமுதாயம், உரையாடலில் நம்பிக்கை வைத்து அதில் ஈடுபடவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறியுள்ள பேராயர் காலகர் அவர்கள், உக்ரைனுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்கே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் முக்கிய முன்னுரிமை கொடுத்து வருகிறார் எனவும் கூறியுள்ளார்.

தனது அண்மைய உக்ரைன் பயணம் குறித்து நினைவுக்குக் கொணர்ந்த பேராயர் காலகர் அவர்கள், மீள்கட்டமைப்பில் அந்நாட்டு மக்கள் கொண்டிருக்கும் மனஉறுதி, துணிவு, அதேநேரம், அம்மக்கள் அடைந்துவரும் துன்பங்கள் ஆகியவை பற்றி அறிந்துகொண்டேன் என்றும் கூறியுள்ளார்.

உக்ரைனில் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படவும், அமைதி நிலைநிறுத்தப்படவும் திருப்பீடம் தொடர்ந்து அழைப்புவிடுத்து வருகிறது என்றும், திருப்பீடம் இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் இடைநிலை வகிக்க ரஷ்யாவிடமிருந்து தெளிவான அழைப்பிதழ் வரவில்லை என்றும் உரைத்துள்ள பேராயர் காலகர் அவர்கள், திருப்பீடத்தின் நிலைப்பாட்டை ரஷ்யா வரவேற்கிறது, அதேநேரம், திருத்தந்தை மாஸ்கோவிற்குச் செல்வதற்கு வெளிப்படையான அழைப்பிதழ் எதுவும் இதுவரை கிடையாது என்றும் கூறியுள்ளார்.

Comment