No icon

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள 400 பேரைக் குறித்து கவலை

15

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள 400 பேரைக் குறித்து கவலை

அமைதியின் வேர்கள்’ (Roots of Peace) என்ற சமுதாய நல அமைப்பைச் சேர்ந்த 400க்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்களை, ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வெளியே கொண்டுவரவேண்டும் என்று, அவ்வமைப்பின் நிறுவனரான, ஹேய்டி குன் என்ற கத்தோலிக்கப் பெண்மணி, அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் ஜோ பைடன் அவர்களிடம் சிறப்பு விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ளார்.

போர்களால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில், நிலத்தடி கண்ணிவெடிகளை அகற்றுவதிலும், அந்நிலங்களை விவசாயத்திற்கு ஏற்ற நிலங்களாக மாற்றுவதிலும், ’அமைதியின் வேர்கள்’ அமைப்பைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்க ஜக்கிய நாடு தன் படைகளை அனுப்பியதையடுத்து, அந்நாட்டில், ’அமைதியின் வேர்கள்’ அமைப்பினர் தங்கள் பணிகளைத் துவக்கினர் என்றும், தற்போது, அங்கு, 400க்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்கள் உள்ளனர் என்றும், ஹேய்டி குன் அவர்கள் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் மட்டும், ’அமைதியின் வேர்கள்’ அமைப்பினர், 50 இலட்சம் மரங்களை இதுவரை நட்டுள்ளனர் என்றும், இவ்வமைப்பினரின் உதவியோடு 10,000த்திற்கும் அதிகமான ஆப்கான் மக்கள் முழுநேர வேலைகளில் அமர்த்தப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவரும், அந்நாட்டு இராணுவத்திற்கு துணையாயிருந்த ஆப்கான் மக்களும் அந்நாட்டைவிட்டு வெளியேறும் முயற்சிகளை அரசுத்தலைவர் பைடன் அவர்கள் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 25 ஆம் தேதி புதனன்று, தாலிபான் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில், இப்புதன் முதல், ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் அந்நாட்டைவிட்டு வெளியேறமுடியாது என்று அறிவித்துள்ளனர்.

 

 

Comment