No icon

குடந்தை ஞானி

5.பிலிப்பீன்ஸ், மத்தியக் கிழக்கில் ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புகள்

5.பிலிப்பீன்ஸ், மத்தியக் கிழக்கில் ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புகள்

16வது உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புக்களின் முதல்நிலைப் பணிகளைத் துவக்கிவைத்துள்ள, பிலிப்பீன்ஸ் நாட்டின் கத்தோலிக்க ஆயர்கள், மேய்ப்புப்பணி அறிக்கை வழியாக, தலத்திருஅவை பற்றிய இரு முக்கிய கேள்விகளை விசுவாசிகளுக்கு முன்வைத்துள்ளனர்.

நம் உலகளாவியத் திருஅவை எவ்வாறு இருக்கின்றது? நம் தலத்திருஅவையில் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் பயணம் எவ்வாறு நடைபெறுகிறது? ஒன்றுசேர்ந்து பயணிப்பதில் வளர்வதற்கு எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என தூய ஆவியார் நமக்கு அழைப்புவிடுக்கிறார்? போன்றவை பற்றி சிந்திக்குமாறு, பிலிப்பீன்ஸ் ஆயர்கள் கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

உலகளாவிய மனிதக் குடும்பத்தோடு திருஅவை எவ்வாறு இணைந்துள்ளது? நாம் உலகின் உப்பாகவும் ஒளியாகவும் இன்னும் நாம் இருக்கின்றோமா? திருஅவைக்குள் கலந்துரையாடல் வாழ்வுமுறையாக உள்ளதா? வேறுபாடுகளைத் தவிர்த்து, தாழ்ச்சி மற்றும் மதிப்பு ஆகியவற்றோடு நாம் செவிசாய்க்கத் தயாரா? மனித சமுதாயத்தின் துன்பங்களை உணர்கின்றோமா? போன்றவை பற்றியும் கத்தோலிக்கர் சிந்திக்குமாறு பிலிப்பீன்ஸ் ஆயர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

பிலிப்பீன்ஸ் திருஅவையில் முதல்நிலை பணியின் நிறைவாக, 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி முதல் 9ம் தேதிவரை தேசிய அளவில் கூட்டம் நடைபெறும் எனவும், அதில் வரைவுத் தொகுப்பு தயாரிக்கப்பட்டு வத்திக்கானுக்கு அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியக் கிழக்குப் பகுதி

மத்தியக் கிழக்குப் பகுதியில், இந்த முதல்நிலை தயாரிப்புப்பணிகள் உயிர்த்துடிப்போடு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை பேராயர் Pierbattista Pizzaballa அவர்கள், இத்தயாரிப்புப் பாதைக்கு, எம்மாவுஸ் சீடர்களின் பயணம் என்று தலைப்பிட்டுள்ளார்.

ஈராக்கின் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள், மாமன்ற நடைமுறை, பொதுநிலையினரின் திறமைகளைக் கண்டுணர்ந்து அவற்றை ஊக்குவிக்க முக்கியமான திருப்புமுனை என்று கூறியுள்ளார். மத்தியக் கிழக்கில் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு முதல்நிலைத் தயாரிப்புக்கள், இம்மாதம் 30ம் தேதி துவங்குகின்றன.

“ஒன்றிணைந்து பயணம் மேற்கொள்ளும் திருஅவைக்காக: ஒருங்கிணைப்பு, பங்கேற்பு, மறைப்பணி” என்ற தலைப்பில், 16வது உலக ஆயர்கள் மாமன்றம், 2023ம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கிறது. (AsiaNews)

 

 

Comment