No icon

குடந்தை ஞானி

கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவதை உணர்த்தும் ‘சிவப்பு வாரம்’ முயற்சி

இன்றைய உலகில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படுவது எக்காலத்தையும்விட அதிகமாக இருப்பதைக் குறித்த விழிப்புணர்வை உருவாக்க, நவம்பர் 17 ஆம் தேதி புதன் முதல் 24 ஆம் தேதி புதன்கிழமை முடிய, எட்டு நாட்களை, எசிஎன் எனும் கத்தோலிக்க அமைப்பு சிவப்பு வாரமாக கடைபிடித்து வந்தது.

தேவையிலிருக்கும் திருஅவைகளுக்கு உதவி என்ற பெயரில் இயங்கிவரும் திருப்பீட அமைப்பான எசிஎன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இன்றைய உலகில் மத அடிப்படையிலான சித்ரவதைகள் அதிகரித்துவருவதையும், மத விடுதலையின் தேவையையும் கோடிட்டுக் காட்டுவதாக, இவ்வார நிகழ்வுகள் அமைந்துள்ளன.

ஆஸ்டிரியாவின் வியென்னாவிலுள்ள புனித ஸ்தேவான் மறைமாவட்ட தலைமைக்கோவிலில் துவக்கிவைக்கப்பட்ட இந்த சிவப்பு வாரத்தில், உலகம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஊக்குவிக்கப்பட்டு எனவும், இவ்வாரத்தில், ஸ்லோவாக்கியா நாட்டின் முக்கிய கட்டடங்கள், கனடாவின் மான்டீரில், டொரோன்டோ மறைமாவட்டங்களின் பேராலயங்கள் ஆகியவை, சிவப்பு வண்ணத்தில் ஒளிர்ந்தன. ஆஸ்திரேலியாவின் 6 மறைமாவட்டங்களின் பள்ளிகள், சிவப்பு வண்ணத்தை அணிந்து, இறைவேண்டல் நிகழ்வுகளிலும், எசிஎன் உதவி அமைப்பின் பணிகளுக்கு உதவும் வகையில் நிதி திரட்டல்களிலும் ஈடுபட்டன.

கிறிஸ்தவப் பெண்களும், சிறுமிகளும், ஏனைய சிறுபான்மை மதத்தினரும் தங்கள் மதநம்பிக்கைகளுக்காக துயர்கள் அடைவதைக் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதை, இவ்வாண்டு சிவப்பு வாரத்தின் நோக்கமாக எடுத்துள்ள எசிஎன் அமைப்பு, இவர்கள் தங்கள் மத நம்பிக்கைகளின் பொருட்டு கடத்தப்படுவது, பிற மதத்தவருடன் கட்டாய திருமணத்திற்கு உள்ளாக்கப்படுவது, கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது, பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுவது ஆகியவைகளையும் சுட்டிக்காட்டியது.

மொசாம்பிக், பாகிஸ்தான், சிரியா, ஈரான், ஈராக் உட்பட 153 நாடுகளில் கிறிஸ்தவர்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக உரைக்கும் எசிஎன் அமைப்பு, நவம்பர் 24 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்ட சிவப்பு புதனன்று, பிரித்தானிய பாராளுமன்றத்தில், இவ்வன்முறைகள் குறித்த அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து உள்ளது.

Comment