No icon

நம் வாழ்வு

நீட் தேர்வு - அரசியலே! அப்பாலே போ!

நீட் தேர்வு - அரசியலே! அப்பாலே போ!

நடந்த முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் இளம் தலைமுறையின் வாக்குகளைக் கவர்ந்திழுத்ததில் திமுக கூட்டணியின் நீட் தேர்வு இரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதியும் ஒன்று.  குழுமூர் மருத்துவர் அனிதாவின் மரணம் முதல் நீட் என்றாலே தமிழகத்திற்கு ஒவ்வாது. ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த நீட் தேர்வால் இதுவரை அனிதா தொடங்கி சாத்தாம்பாடி கனிமொழி வரை 13 மாணவர்களை  இழந்திருக்கிறோம். ஏழை எளிய மாணவர்களை மருத்துவக் கல்வியிலிருந்து அப்புறப்படுத்தும் நவீன சனாதன தர்மத்தின் புதிய தீண்டாமைக் கொள்கையான நீட் நுழைவுத் தேர்வு, பாஜகவின் நவீன மனுதர்ம அஸ்திரம்.  நீட் என்னும் நுழைவுத்தேர்வை கட்டாயமாக்கியதோடு மட்டுமின்றி, உச்ச நீதிமன்றம் வரை சென்றாலும் அதற்கு தீர்வே கிடைக்காத வண்ணம் சரியான பாதுகாப்பு வளையம் போட்டிருக்கிறது. நீட்டை அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் என்று பழியை அவர்கள்மேல் போட்டு தப்பித்துக்கொள்வதோடு மட்டுமின்றி, அதற்கெதிராக யாரும் அறவழியில் போராட முடியாதபடிக்கு கெடுபிடிகளை விதித்திருக்கிறது. அனிதாவின் மரணம் கொண்டுவந்த நீட்டுக்கு எதிரான எழுச்சியை ஒடுக்கிய முந்தைய எடப்பாடி தலைமையிலான அரசு, நெருக்கடி காரணமாக, பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் லாவகமாகக் காட்டி, சட்டமன்றத்தில் பெயரளவுக்கு தீர்மானம் நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காததை இரண்டு வருடங்களாக அறிவிக்காமல் முழு பூசணியை சோற்றில் மறைத்தது. 

திமுகவும் தேர்தல் வாக்குறுதியாக நீட் தேர்விலிருந்து விலக்கு என்பதை பகிரங்கமாக அறிவித்தது.  ஆட்சிப் பொறுப்பேற்றவுடனே நீதிபதி ராஜன் அவர்களின் தலைமையில் கமிட்டியை அமைத்தது. அவர்களும் அவ்வளவு எதிர்ப்புக்கும் வழக்குக்கும் மத்தியில் தகுந்த கள ஆய்வு செய்து ஜூலை மாதமே அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.  தமிழக சுகாதாரத்  துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், நீட் தேர்வுக்கு தயாராகுங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தி, இம்மாதம் 12 ஆம் தேதி நீட் தேர்வு நடந்து முடிந்த அடுத்த நாள், கூட்டத் தொடரின் இறுதி நாளில், 13.09.2021 அன்று நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளனர். வழக்கம் போல் பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் எடப்பாடி தலைமையிலான அதிமுக, சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்துவிட்டு ஊடகத்திற்கு முன்பாக இம்மசோதாவிற்கு எங்கள் ஆதரவு என்று அறிவித்துள்ளனர்.  அதிமுக என்றாலும் சரி, திமுக என்றாலும் சரி, நீட் என்று வரும்போது, தங்களுக்கான தேர்தல் அரசியல் லாபம் என்ன? என்பதைப் பார்த்தே செயல்படுகின்றனர். 

இந்திரா காந்தியின் எமெர்ஜென்சி காலத்தில் மாநிலப் பட்டியலிலிருந்து கல்வியை, பொதுப் பட்டியலுக்குக் கொண்டுச் சென்றதை அனைத்து அரசியல் கட்சிகளுமே வசதியாக மறந்துவிடுகின்றனர்; அல்லது மறைத்துவிடுகின்றனர்.  கல்வியை பொதுபட்டியலிலிருந்து, மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவந்தாலன்றி, நீட் தேர்விலிருந்து விலக்கு என்பது முயற்கொம்புதான். கல்வி, பொதுப் பட்டியலில் இருக்கும் வரை, மாநில அரசுகள் இயற்றும் எந்தச் சட்டமும் ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்களுக்கு உட்பட்டுதான் இருக்க முடியும்.  தற்போதைய குடியரசுத் தலைவர் அவர்கள் ஒருபோதும் ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கும் நாக்பூர் தலைமைக்கும் எதிராக செயல்பட மாட்டார்.  அவரது ஒப்புதலுக்கு தமிழக ஆளுநர் அனுப்பும்பட்சத்தில் அது நிச்சயம் நிராகரிக்கப்படும். எடப்பாடி தலைமையிலான அரசு, அப்படி நிராகரிக்கப்பட்டதை இரண்டு ஆண்டுக்காலம் மறைத்தது போல வித்தைக் காட்டலாம். ஆனால், தண்ணியில் விட்ட காற்று நிச்சயம் ஒரு நேரம் மேலே வந்து தீரும்.  சட்டரீதியாக போராடினால்கூட உச்சநீதிமன்றம் பொதுப்பட்டியலில் உள்ள காரணத்தைக் காட்டி எளிதாக நிராகரித்துவிடும்.  நீட் தேர்வைப் பொருத்தவரை அரசியல்வாதிகள்  தங்கள் அரசியல் விளையாட்டை நிறுத்திக்கொள்ள வேண்டும்.  வாய்ப்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று வாய்சவடால் விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மாணவர்களின் ஒவ்வொரு உயிரும் மிக விலை உயர்ந்தவை. யாராலும் ஒருபோதும் திரும்ப கொடுக்க முடியாது.  நீட் முறைகேடு ஒருபுறம் மாணவர்களை அலைகழித்தாலும் தமிழக அரசியல்வாதிகளின் அரசியல் விளையாட்டும் அநியாயமானதே. கல்வியைப் பொதுப்பட்டியலிலிருந்து  மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவராதவரை, கல்வி மீதான இந்தப் பாசிச தாக்குதலை நம்மால் எதிர்கொள்ள இயலாது.  ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்தைப் போல இது மக்கள் போராட்டமாக மாற வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏழரை சதவீதம் ஒதுக்கீடு என்பதெல்லாம் தற்காலிகத் தீர்வாக இருக்குமேயொழிய நிரந்தரத் தீர்வாக அமையாது. சட்டமன்றத் தீர்மானமும் தீர்வாகாது. யானைப் பசிக்கு சோளப் பொரி தீர்வாகாது. கருநாகராஜன் போன்றவர்கள் காத்திருக்கிறார்கள். உச்ச நீதி மன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்று வக்காளத்து வாங்குவதற்கு அக்ரஹாரவாசிகள் தயாராக இருக்கிறார்கள்.

கல்வி பொதுப்பட்டியலில் உள்ள நிலையில், தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உரிமை உள்ளது.  அந்தச் சட்டமானது ஒன்றிய கேபினட்டில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றாலொழிய நடைமுறைக்கு வராது. ஒருவேளை ஒன்றிய அரசுக்கு அரசியல் சாசனத்திற்கு எதிரான அம்சங்கள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால் விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளும். இதுதான் நடைமுறை. 

சட்டப் போராட்டம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பு நாடகமே. ஆதார் வழக்கு இதற்கு ஒரு நல்ல உதாரணம். தொடக்கத்தில் ஆதாரைச் சேர்ப்பதிலிருந்து விலக்கு விலக்கு என்றிருந்த நிலை மாறி, கொரோனா தடுப்பூசி போடுவதற்கு கூட ஆதார் கட்டாயம் என்றாகிவிட்டது.

பொதுப்பட்டியலில் இருந்த ஜல்லிக்கட்டுக்கு எதிரான விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டம், தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டமசோதாவோடு கூடவே, மக்களின் எழுச்சியால் மத்திய அரசை அடிபணிய வைத்தது. சட்ட மன்றத்தை விட மக்கள் மன்றமே வலிமையானது. அரசியல் கட்சிகள், தங்களின் தேர்தல் லாபத்திற்காக சடுகுடு ஆடுவதை விட்டுவிட்டு, சாமானியனின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். இனியொரு அனிதாவையும் கனிமொழியையும் நாம் இழக்கக் கூடாது.  இருக்கு - இல்லை என்று கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுவதை தமிழக அரசு விட வேண்டும். மசோதாவை நிறைவேற்றிவிட்டு அதன் தொடர் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேண்டும்.  நீட் தேர்வை நடத்துவதிலும் முடிவுகளை வெளியிடுவதிலும் வெளிப்படைத் தன்மை வேண்டும்.  மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் அதன் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். ஒரே நாடு ..அனைத்திற்கும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி மூலம் ஒரே தேர்வு என்பதெல்லாம் ஏமாற்றுவேலை. நீட் தேர்வைப் பொருத்தவரை ‘அரசியலே அப்பாலே! போ!’

Comment