No icon

குடந்தை ஞானி

மாண்புமிகு செல்வமேரி!  கிறிஸ்தவத்திற்கு பெருமை!

டிசம்பர் 6, திங்கள்முன்னிரவு நேரம். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்திலிருந்து அருகில் உள்ள வாணியக்குடி என்று ஊருக்குச் செல்ல, ‘பெண்களுக்கு இலவசம்என்ற போர்டு வைச்ச அரசுப்பேருந்தில் அந்த இரவு நேரம் ஏறியிருக்கிறார் 60 வயது மதிக்கத்தக்க மீனவப் பெண்மணி மாண்புமிகு செல்வமேரி. இவர் குளச்சல் வட்டாரத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் மீன்களை பகலில் விற்றுவிட்டு, மிஞ்சும் மீன்களை குளச்சல் மீன் மார்க்கெட்டில்  மாலை நேரத்தில் விற்றுவிட்டு, இரவு தம் சொந்த ஊரான வாணியக்குடிக்கு திரும்புவது வழக்கம்.

 மீன் விற்று, உழைத்து களைத்துப் போய் பேருந்தில் ஏறியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இவர் ஒரு முதியவர். ஒரு பெண்மணி. மாண்புமிகு மீனவப் பெண். இரவு நேரம். இனி அந்த ஊருக்குச் செல்ல பேருந்து இல்லை; வாடகை ஆட்டோவில் செல்வதற்கு அவர்தம் பொருளாதாரம் இடம் கொடுக்காதுதன் ஊருக்கு அவர் அந்த இரவில் நடந்துதான் செல்ல வேண்டும். மீண்டும் அடுத்த நாள் உழைக்க வேண்டிய கட்டாயம்…..

இந்தச் சூழ்நிலையில், முதியோர் என்றும் பாராமல், இரவு நேரத்தில், துர்நாற்றம் வீசுவதாகக் கூறி, அந்தப் பேருந்தில் இருந்த நடத்துனர் (மற்றும் ஓட்டுநர் ஆகியோர் இணைந்து) ஒருமித்த குரலில்  ‘இறங்கு.. இறங்கு.. இறங்கும்மா...ஒரே வீச்சு.. மீன் வீச்சு.. மீன் வித்துட்டா வர, நாறுது.. இறங்கும்மா..எங்களுக்கு வாந்தி வருது..பஸ்சுல வேற யாரும் போக வேண்டாமாநீ இறங்குனாதான் நான் பேருந்தையே எடுப்பேன். இனி நீ வந்தா நான் உன்னை ஏத்தவே மாட்டேன்.. இறங்கு.. இறங்கு..’ என்று வசைமாறி மொழிகிறார். ‘கருவாடு இருக்கிறதா? பையைத் திறந்து காட்டுஎன்று சொன்ன கண்டக்டருக்கு தன் பையைத் திறந்து அப்பெண்மணி காட்டிய பிறகும் திட்டி, அவரை அந்த இரவு நேரத்தில் குளச்சல் தெற்கு பஸ்நிலையத்தில் இறக்கி விடுகிறார். குளச்சல்-முட்டம்-குறும்பனை ஆகிய கிராமங்களில் விசைப் படகுகளில் வரும் மீன்களை வாங்கி, சில்லரை வியாபாரம் செய்யும் மீனவப் பெண்களுக்கு இதுதான் நிலைஅவர்களும் இதே போன்றுதான் நடத்தப்படுகின்றனர். ‘தலைச் சுமடுபெண்களை அவமதிப்பது இன்று நேற்றல்ல.. பல ஆண்டுகளாகவே இந்நிலை உள்ளது.

சமூக வலைதளங்களில் பரவிய அவர்தம் கண்ணீர் வீடியோவால் கடலோடி மக்களை இழிவாக நடத்துகின்ற  போக்குவரத்து துறையைக் கண்டித்து கடலோரக் கிராமங்களில் மிகப் பெரிய புரட்சியே வெடித்தது. ‘பெண்என்னும் முறையிலும்.. ‘மீனவப் பெண்என்ற முறையிலும் தொழில் ரீதியாகவும் இரட்டைத் தீண்டாமையால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிகிறபோது, பெரியார் பூமியில் இன்னும் இந்த அவலம் நீடிப்பதைக் காண முடிகிறது. இது சமூக நீதிக்கு எதிரானது மட்டுமல்ல; மானுட நீதிக்கும் எதிரானது. மகளிருக்கான இலவசப் பேருந்திலேயே இந்த அவலநிலை என்னும் போது மனம் பதைபதைக்கிறது

அவர் அந்த இரவிலும் யாருக்கும் அஞ்சாமல், ‘இது என்ன நியாயம்? இது என்ன நீதி?’ என்று நேரக் கட்டுப்பாட்டு அறை பொறுப்பாளர் முன்பாக முழங்கிய முழக்கம் ஒரு நற்செய்தி முழக்கமாகவே படுகிறது. யாரைக் கண்டும் பயப்படாமல், எவரைக் கண்டும் அஞ்சாமல்.. ‘நான் சும்மா விடப் போவதில்லைஎன்று கேள்வி கேட்டவிதம் அவருக்குள் இருந்த துணிச்சலான மன உறுதியை வெளிப்படுத்துகிறது. ஒரு வீரப் பெண்மணியாகவே அவர் முழங்குகிறார்

கழுத்தில் அவர் அணிந்திருந்த அந்த ஒற்றைக் கறுப்பு செபமாலை அவர் யார்? என்பதை உலகிற்கு தெளிவாக வரையறுத்தது. கையை ஓங்கி.. ஓங்கி, கிழக்கும் மேற்குமாக, வடக்கும் தெற்குமாக.. எட்டுத்திசையிலும்இது என்ன நியாயம்?.. இது என்ன நீதி?’ என்று கேட்ட கேள்வி செயின்ட் ஜார்ஜ் கோட்டைவரை எட்டியதுஅவர் கண்களில் பனித்த கண்ணீர், நம் கண்களில் கண்ணீரை வரவழைத்துஅவரைஅம்மா அழாதே! பாட்டி அழாதே!’ என்று நான் இருக்கிறேன் என்று அரவணைத்தது. பேருந்தின் படிகளை விட்டு இறக்கப்பட்ட அவர், நம் எல்லாருடைய இதயத்திலும் ஏறி சிம்மாசனமிட்டுள்ளார். பேருந்தில் ஏறியபோது நாறும் நாறும்.. இறங்கு என்று இறக்கப்பட்டவர், நம் மனங்களில் வசந்தமாய் மணக்கிறார்அவரின் கள்ளங்கபடமற்ற மனம், போராடும் குணம்.. கையை உயர்த்தும் பாங்கு, கேள்விக் கேட்கும் துணிச்சல்.. அவர் கழுத்தில் சூடியிருந்த அந்த ஒற்றை செபமாலை.. அவ்வளவும் ஒரு மீனவத் திருவிவிலியம். இந்த உழைப்பாளி மாண்புமிகு செல்வமேரி, ‘இந்த நிலைமை இனி எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாதுஎன்று உரக்கச் சொன்ன வார்த்தைகள் ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் ஏன் நம்மையுமே உறங்கவிடவில்லை. அவர்தம் தன்னிலை, முன்னிலையாகி, இறுதியில் படர்க்கையாகி சமூக நீதியை பெண்களுக்கும் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்திற்கும் நிலைநாட்டியது. இவர் வெளிப்படுத்திய ஆற்றாமை, இதுகாறும் இருந்துவந்த நவீனத் தீண்டாமையை அகற்றுவதற்கு வழிவகுத்துள்ளது.

அந்த அரசுப் பேருந்து ஓட்டுனர் மைக்கேல், நடத்துனர் மணிகண்டன், மூதாட்டியின் புகாருக்கு நடவடிக்கை எடுக்காத பேருந்து நிலைய நேரக் கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு போக்குவரத்து துணை இயக்குநர் ஜெரோலின் நேரில் சென்று அந்த மூதாட்டியிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்குமரி மாவட்டத்தில் மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துனர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்ததுமகளிர் மேம்பாட்டிற்காகக் கட்டணமில்லா உரிமைச் சீட்டை வழங்கி, அதை நடத்துனர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துனரின் இச்செயல் கண்டிக்கத் தக்கதாக உள்ளது. எல்லாரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும்என்று அவர்களே டிவிட்டரில், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தவும் வழி வகுத்தது

எல்லா வகையிலும் கடலோர  கிராமங்களில் மட்டுமல்ல.. தமிழகமெங்கும் இந்தியாவெங்குமே மாண்புமிகு செல்வமேரி ஓர் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்அவர் குளச்சலில் வீசிய வலையில் தமிழகமே சிக்கியுள்ளது. அவர் பேருந்து நிலையத்தில் கேட்ட கேள்விகள், நம் மனங்களில் உச்ச பச்சமாக பதினொன்றாம் எண் எச்சரிக்கைக் கூண்டை ஏற்றி, இனி நம் தமிழகம், மீனவர்களையும் மீனவப் பெண்களையும் பாதுகாக்கும் வகையில்  தீண்டாமையை அகற்றி, பாதுகாப்பான சமத்துவப் பணியை துரிதப்படுத்த அழைப்புவிடுத்துள்ளது.

மீனவ மூதாட்டி மாண்புமிகு செல்வமேரியை அவமானப்படுத்தியவகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், ஜெபமாலை அணிந்த மூதாட்டி செல்வமேரிஇது மாதிரி பெண்களுக்கு நடக்கக்கூடாது. அதுக்கு முதலமைச்சர் நீங்க நடவடிக்கை எடுக்கணும். எங்களுக்கு நீங்க பாதுகாப்பு தரணும். கண்டக்டர் மேல நடவடிக்கை எடுத்ததா சொன்னாங்க. அவங்களை மன்னிச்சு விடனும். அவங்களுக்கு தண்டனை கொடுத்தா அது அவங்க பிள்ளைகளையும் பாதிக்கும்அந்தப் பிள்ளைகள் கதறும். இனிமேல் அவங்க அப்படிச் செய்யக்கூடாதுஎன்று சொன்னபோதுமாண்புமிகு செல்வமேரியாகவே நமக்குப் படுகிறார். மன்னிக்கும் உள்ளம் அந்தத் தாயுள்ளம். தமிழகத்தில் முதன்முதலில்அன்பியம்என்ற அமைப்பு பிறந்தகோடிமுனைக்கு அருகில் உள்ள இந்த வாணியக்குடியின் மாண்புமிகு செல்வமேரி நம் வணக்கத்திற்கு உரியவர்.

மாண்புமிகு செல்வமேரி! ஒருமுறை உரக்கச் சொல்லுவோம். மாண்புமிகு செல்வமேரி.

Comment