No icon

குடந்தை ஞானி

‘ஓ, மை காட்!’ - பத்திரிகை சுதந்திரம்

ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடிக்கும் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகை உயிர்ப்போடு இருக்கும் பட்சத்தில் ஜனநாயகமும் பேணி பாதுகாக்கப்படும். பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட்டால், ஜனநாயகம் என்பது அஸ்திவாரம் இல்லாத கட்டிடமாகிவிடக்கூடும். வெறும் கட்டிடம் மட்டும் வீடு ஆகி விடாது. குடி புகுந்தால்தான் அது வீடு. சட்டமன்றத்துறையும், நீதித்துறையும், நிர்வாகத் துறையும் மட்டுமே ஜனநாயகம் ஆகிவிடாது. பத்திரிகைகள் உள்ளிட்ட ஊடகத்துறை இருந்தால் அது ஜனநாயகம் ஆகும். இந்த நான்குத் தூண்களில் ஏதேனும் ஒன்று துருப்பிடிக்கத் தொடங்கினாலே ஜனநாயகம் ஆட்டம் கண்டுவிடும். மக்களாட்சியின் மாண்பு பத்திரிகை சுதந்திரத்தில் பேணப்படுகிறது. பத்திரிகை சுதந்திரம் இல்லையேல், ஜனநாயகம் நீர்த்துப் போகும். சாம்பல் மட்டுமே மிஞ்சும்.

2022 ஆம் ஆண்டிற்கான உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டை மே மாதம் மூன்றாம் தேதி, ரிப்போர்ட்டர்ஸ் வித் அவுட் பார்டர்ஸ் என்ற எல்லைகளற்ற செய்தியாளர்கள் என்ற உலக பத்திரிகையாளர்கள் அமைப்பு வெளியிட்ட பத்திரிகை சுதந்திரம் தரவரிசையில் இந்தியாவிற்கு 150 வது இடம் தரப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற 180 நாடுகளில் 133 வது இடத்திலிருந்து இந்தியா, 2019 ஆம் ஆண்டு 140 வது இடத்திலும், 2021 ஆம் ஆண்டு 142 வது இடத்திற்கும் சரிந்தது. இவ்வாண்டு 150 ஆம் இடத்தைப் பிடித்தது மக்களாட்சி சிதைக்கப்பட்டுள்ளதையும் ஜனநாயகத்தின் வேர்கள் அசைக்கப்பட்டுள்ளதையும் வெள்ளிடை மலையாக காட்டுகிறது.

பத்திரிகையாளர்களில் 2016 ஆம் ஆண்டு இருவரும், 2017 ஆம் ஆண்டு நால்வரும், 2018 ஆம் ஆண்டு ஆறுபேரும், 2020 ஆம் ஆண்டு நான்குபேரும் இந்தியாவில் கொல்லப்பட்டனர். குறிப்பாக, 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் 48 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். இதில் நான்கு பேர் இந்தியர்கள். அதாவது சுபம் மணி திரிபாதி (Kamu Mail), இஸ்ரவேல் மோசஸ் (தமிழன் டி.வி), பராக் புயான் (Pratidin Time Media Group) ராகேஷ் சிங் நிர்பிக் (ராஷ்டிரிய ஸ்வரூப்) ஆகியோர் கொல்லப்பட்டனர். 2010 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை, பத்தாண்டுகளில் 87 பத்திரிகையாளர்கள் வேலை தொடர்பாக, காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டனர். ஆனால், 2020 ஆம் ஆண்டு மட்டும் 67 பத்திரிகையாளர்கள், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டுள்ளனர்.

2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுவரை, உத்தரப்பிரதேசத்தில் 29 பத்திரிகையாளர்கள், சத்தீஸ்கரில் 17 பத்திரிகையாளர்கள், ஜம்மு-காஷ்மீரில் 16 பத்திரிகையாளர்கள், தமிழ்நாட்டில் 15 பத்திரிகையாளர்கள், டெல்லியில் 10 பத்திரிகையாளர்கள் ஆகியோர் மீதும் வழக்குகள் பதியப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் 150 வது இடம் பிடித்துள்ள இந்தியாவின் உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீடு, இந்திய ஜனநாயகத்தில் ஆபத்தான இடத்தில் இருப்பதையே காட்டுகிறது. உலகப் பத்திhகை சுதந்திரக் குறியீடு என்பது ஒரு நாட்டில் பத்திரிகையாளர்கள், செய்தி நிறுவனங்கள் கொண்டுள்ள சுதந்திரத்தின் அளவையும், அவற்றின் சுதந்திரத்தை மதிக்க அரசு எடுக்கும் முயற்சிகளையும் குறிக்கிறது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் நெருக்கடியில் உள்ளது என்பதை நாம் எளிதில் கடந்து போக முடியாது. 2014 ஆம் ஆண்டு முதல் பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சியில் பிடித்த நாள் முதல் பத்திரிகை சுதந்திரம் என்பது நசுக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு முதல் பாஜகவின் பிரதமர் மோடி பதவியேற்றதிலிருந்து பத்திரிகை துறையில், ஊடகத்துறையில் அதானி, அம்பானி போன்ற பெருமுதலாளிகளின் தலையீடும் முதலீடும் அதிகரித்தது. சந்தேகத்திற்கு இடமின்றி, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமம் மீடியா உலகில் 70 க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களை தன் வயப்படுத்தியுள்ளன. இவர்கள் மட்டுமே 80 கோடி இந்தியர்கள் பின்தொடரும் ஊடக நிறுவனங்களை தம் வசம் வைத்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஒருதலை சார்போடு, ஒரு கட்சி சார்பாக ஊடகங்களும் பத்திரிகைகளும் செயல்படும்போது பெரும்பான்மைவாதத்தையே தூக்கிப் பிடித்து, ஜனநாயகத்தை தூக்கிலிடச் செய்கின்றன. சம வாய்ப்பும் சம பங்கேற்பும் என்பது அறவே இல்லை.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், அரசும், அதன் ஆதரவு ஊடகச் செய்தி நிறுவனங்களும் உண்மையை மறைத்து, தொற்று நோயைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிக்கைகளை இருட்டிப்புச் செய்து, முரணான செய்திகளையே வெளியிட்டன. 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் கொரோனா குறித்த செய்தி வெளியிட்டதற்காக, 55 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு, வழக்குப் பதிந்து, அச்சுறுத்தப்பட்டனர் என்பது வரலாறு. அரசாங்கத்தை விமர்சிக்கவே கூடாது என்ற விதத்தில்தான் பத்திரிகைகள் இயங்க வேண்டும் என்று எழுதப்படாத விதி திணிக்கப்பட்டுள்ளது. ஒரு புள்ளி விவரப்படி, தற்போது 13 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு சிறு பிரச்சனை என்றாலும் ஒரு சிறு போராட்டம் என்றாலும் இணைய முடக்கம் என்பதை வைத்து மத்திய அரசு கருத்துப் பரிமாற்றத்தை தடை செய்கிறது. இந்திய விவசாயிகளின் டெல்லி போராட்டத்திலும் சரி, ஜம்மு - காஷ்மீரில் 370 சட்ட விதி நீக்கத்தின் போதும் சரி, இந்தியக் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போதும் சரி, இணைய முடக்கம் என்பதை அரசே செயல்படுத்துகிறது. உண்மைக்குப் புறம்பான போலி செய்திகளை அரசோ அல்லது அரசு சார்பான ஊடகங்களோ பரப்பி இருட்டடிப்புச் செய்யும் போலி பத்திரிகைத்துவமும் வளர்ந்து வருகிறது. ஒவ்வொரு கட்சியும் .டிவிங்க் பெயரில் அரசுக்கு ஆதரவான செய்திகளையும் உண்மைக்கு எதிரான வதந்திகளைப் பரப்புகின்றன. சமூக ஊடகங்களில் பயங்கரமான வெறுப்பு பிரச்சாரங்கள் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன. வன்முறைகளைத் தூண்டுவதற்கு அழைப்புகள் தொடர்ந்துவிடப்படுகின்றன. போலீஸ் மற்றும் துணை இராணுவத்தினரின் பிடியில், ஜம்மு-காஷ்மீர் பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். தற்காலிக விசாரணை என்ற பெயரில் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்திய அரசியலமைப்பு நமக்குத் தரும் கருத்துச் சுதந்திரம் என்பது முயற்கொம்பே. மன்கி பாத் முறையில் ஒரு வழிப்பாதையில் இந்திய ஊடகம் செயல்படவேண்டும் என்று பாஜக பெரும்பான்மைவாதம் வலியுறுத்துகிறது. பாசிசத்தின் கோரப்பிடியில் பத்திரிகை சுதந்திரம் சிக்குண்டு சிதைகிறது.

தான் பதவியேற்றதிலிருந்தே கடந்த எட்டு ஆண்டுகளாக பத்திரிகையாளர்களையே சந்திக்காத ஒருவரைத்தான் இந்தியா பிரதமராகக் கொண்டுள்ளது. அண்மையில் டென்மார்க் சென்ற பிரதமர் மோடி பத்திரிகையாளர்களைக் கண்டதும் அலறிய வார்த்தை, மை காட்!’ என்பதுதான். பத்திரிகையாளர்கள் என்றாலே மோடிக்கும் இந்துத்துவாவிற்கும் பாசிசத்திற்கும் எப்போதுமே அலர்ஜிதான். அந்த அலர்ஜியின் வெளிப்பாடுதான். ‘! மை காட்!’

பத்திரிகை சுதந்திரத்துக்கான தரவரிசையில் இந்த ஆண்டு முதலிடத்தில் நார்வேயும் இரண்டாவது இடத்தில் டென்மார்க்கும் உள்ளன. அந்த டென்மார்க்கில்தான் பத்திரிகையாளர்களைப் பார்த்து, , மை காட்! என்று நம் பிரதமர் மோடி அலறினார். மொத்தம் 180 நாடுகள் இடம்பெற்றுள்ள தரவரிசைப் பட்டியிலில் 180 வது இடத்தில் வடகொரியா உள்ளது. 155 வது இடத்தில் ரஷ்யாவும் 177 வது இடத்தில் சீனாவும் உள்ளது. இந்தியா இன்னும் சரிவதற்கு மட்டுமே வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் செய்தியாளர்கள் மற்றும் இணையதள விமர்சகர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கோள்வதும், கைது செய்வதும், கொலை மிரட்டல் விடுவதும், பயங்கரவாதம் - தேசத் துரோகம் என்று குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதும் ஜனநாயகத்தின் வேர்களில் வைக்கப்பட்ட கோடரிகளாகும். பத்திரிகையாளர்களைக் கண்டு, ‘, மை காட்!- என்ற மோடியின் அலறல், இந்திய பத்திரிகை சுதந்திரத்தின் நிலையையே படம் பிடித்துக் காட்டுகிறது.

ஜனநாயகமே! பத்திரிகையே! , மை காட்!

Comment