No icon

குடந்தை ஞானி

நியாயமாரே...! ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்!

சாமானியனின் கடைசிப் புகலிடம் நீதிமன்றம். ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடிக்கும் வலிமையான தூண்களில் ஒன்றும் நீதிமன்றம். மே மாதம் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தேசத் துரோக சட்டப் பிரிவை மத்திய அரசு மறு ஆய்வு செய்யும் வரை, இந்தப் பிரிவின் கீழ் புதிதாக எந்த வழக்கும் பதிவுச் செய்யக்கூடாது என்று இடைக்கால உத்தரவுப் பிறப்பித்து, ஜனநாயகத்தின் காவலாக தன்னைத் தானே மீண்டும் ஒருமுறை புனிதம் செய்துக்கொண்டுள்ளது. ஏற்கனவே இந்தச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் பிணை கோரி மனு தாக்கல் செய்யலாம் என்றும் அந்த உத்தரவில் தெரிவித்து, தனி மனித உரிமைக்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு இணையாக மிகுந்த முக்கியத்துவம் பெற்ற சட்டம் இந்தியத்  தண்டனைச் சட்டம். இந்தியத் தண்டனைச் சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1500க்கும் மேற்பட்ட வழக்கொழிந்த சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1860 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தேசத் துரோகச் சட்டம் ஒன்றரை நூற்றாண்டு கடந்தபோதும் அதே வீரியத்துடன், அதே அம்சங்களுடன் அமுல்படுத்தப்படுகிறது என்பதுதான் வேதனை. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களை ஒடுக்குவதற்காக, எதேச்சதிகாரத்துடன், பிணையில் வர முடியாத வகையில் இந்தக் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்பட்டது. பாலகங்காதர திலகர் இருமுறை தேசத்துரோக வழக்குகளை எதிர்கொண்டு, ஒன்றில் வெற்றிப்பெற்றார். நேரு, காந்தி, மௌலானா ஆசாத் போன்ற பெருந்தலைவர்களும் இக்குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த தேசத் துரோகச் சட்டப் பிரிவு 124 தொடர வேண்டும் என்று அன்றைய பிரதமர் ஜவர்ஹலால் நேரு அவர்களும், டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வின் உறுப்பினர்களும் விருப்பம் தெரிவித்த காரணத்தினால் அப்பிரிவு இந்தியத் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

இந்தியத் தண்டனைச் சட்டத்தில் 124 பிரிவு தேசத் துரோகத்தை வரையறுக்கிறது. நாட்டில் நடைமுறையில் உள்ள இந்தியக் குற்றவியல் சட்டம் 124-வானது நாட்டுக்கு தேசத் துரோகம் இழைத்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வகை செய்கிறது. தேசத்துரோக சட்டப் பிரிவு 124-ன் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படும் நபருக்கு ஜாமீன் கிடைக்காது. இப்பிரிவின் கீழ் கைது செய்யப்படும் நபர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்திய அரசியல் சட்டம் 19 ஆம் பிரிவு பேச்சுரிமையையும் கருத்துரிமையையும் போற்றும் வகையில் உள்ள நிலையில், ஒரு ஜனநாயக நாட்டில் இந்தப் பிரிவு நீடிப்பது நல்லதல்ல என்று பலரும் எதிர்த்து குரல் கொடுத்தனர். தாரா சிங் கோபி சந்த் உள்ளிட்ட பலரும் இப்பிரிவுக்கு எதிராக வழக்கும் தொடுத்தனர். பஞ்சாப் உயர்நீதிமன்றம்கூட அதனை நீக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இந்த நிலையில் 1962 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மேற்கண்ட கேதர்நாத் சிங்கின் வழக்கில் அந்தத் தீர்ப்பை நிராகரித்து, இந்திய அரசியல் சட்டம் 19 (1) ()க்கு எதிரானது அல்ல என்று தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பில், பேச்சுரிமையும் கருத்துரிமையும் கட்டுப்பாடுகளுக்குட்பட்டவை. ஆகையால் பொது அமைதியைப் பேணி பாதுகாக்க தேசத் துரோக சட்டத்தின்கீழ் அரசு தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆமோதித்து அன்று பச்சைக் கொடி காட்டியது.

கேதார் நாத் சிங் வழக்கின் தீர்ப்பில் தேசத் துரோகச் சட்டப்பிரிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டபோதிலும்கூட, அப்பிரிவு தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதற்கான கட்டுப்பாடுகளையும் விதித்தது. வன்முறையைத் தூண்டிவிடவோ அல்லது அதற்கு அழைப்புவிடுக்கவோ செய்யாத பட்சத்தில், அரசின் மீது கூறப்படும் விமர்சனங்கள் தேசத் துரோகம் ஆகாது என்று அத்தீர்ப்பு வரையறுத்தது.

இந்தத் தீர்ப்பு வெளிவந்து பவளவிழாக் கொண்டாடும் இவ்வாண்டில், இந்தியப் பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பு (எடிட்டர்ஸ் கில்ட ஆஃப் இந்தியா) என்ற அமைப்பு உட்பட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்து மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து, இதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மே 10 ஆம் தேதி நடந்த விசாரணையின் போது மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘தேசத்துரோகச் சட்டத்தின் பிரிவு 124- விதிகளை மறுஆய்வு செய்யவும், மறுபரிசீலனை செய்யவும் மத்திய அரசு விரும்புகிறது. இது தொடர்பான வழக்குகளில் முடிவெடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் காத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொள்கிறது. சட்ட விதிகளில் மறுஆய்வு, மறுபரிசீலனை செய்வதற்கு கால அவகாசத்தையும் வழங்குமாறு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுக் கொள்கிறதுஎன்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள், குறிப்பாக பத்திரிகையாளாகள், மாணவர் அமைப்புகளின் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்களும் இந்தக் கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலும் மட்டுமல்ல, பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியிலும் விதிமுறைகளை மீறி எண்ணற்ற வழக்குகள் பதியப்பட்டு, பலரும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிந்தும் எதேச்சதிகாரத்துடன் அரசு இயந்திரம் செயல்பட்டது என்பதே உண்மை.

2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் 326 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 320 வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படவில்லை; வெறும் ஆறே ஆறு வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். நாட்டிலேயே அதிகப்பட்சமாக அசாம் மாநிலத்தில் மட்டும் 2014-2019 வரை இந்த தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் 54 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஜார்க்கண்டில் 40 வழக்குகளும், ஹரியானாவில் 31 வழக்குகளும், பீகார், ஜம்மு-காஷ்மீர், கேரளா ஆகிய மாநிலங்களில் தலா 25 வழக்குகளும், உத்தரப் பிரதேசத்தில் 17 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரம் சான்றுரைக்கிறது.

இந்தியத் தண்டனைச் சட்டம் 124 பிரிவு, இந்தியாவில் சட்டப்பூர்வமாக அமைந்துள்ள அரசுக்கு எதிராக கருத்துகளை எழுத்து-பேச்சு- கருத்துப்படம் மூலமாக தெரிவிப்பது தேசத் துரோகக் குற்றமாகும் என்று வரையறை செய்கிறது. இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் கடுமையான அபராதமும் விதிக்க முடியும். ஆனால் இந்தப் பிரிவின் கீழ் கைதுசெய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலும், விசாரணை முடியாமலும் வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால், பிணையில் வெளியே வர முடியாமல் சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் வினோத் துவா, பெருந்தொற்றின்போது புலம்பெயர் தொழிலாளர் களின் பிரச்சனைகளை மத்திய அரசு எதிர்கொண்ட விதத்தை விமர்சனம் செய்து தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட தேச விரோதக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து எழுந்ததாகும். இந்தியா சுதந்திரமடைந்ததன் வைர விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இந்த தேசத் துரோக வழக்குப் பிரிவு வழக்கொழிந்தால் வாழிய ஜனநாயகமே. அண்மைக் காலமாக அரசுக்கு எதிராக கருத்துகளைப் பகிரும் என்னைப் போன்ற பத்திரிகையாளர்களையும் மாணவர் தலைவர்களையும் குறிவைத்து இந்தச் சட்டப்பிரிவு கையாளும் இக்காலத்தில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மன்கீபாத் நாயகனின் மனசாட்சி உலுக்கப்படட்டும். இச்சட்டப்பிரிவு நீக்கப்படட்டும். மாறுவேடம் பூண்டு உபா வடிவில் புதிய சட்டமாக வராமலிருக்கட்டும். ஜனநாயகம் காக்கப்படட்டும்.

Comment