No icon

புனித வாரத்தில் தேர்தல் நடத்தக்கூடாது- பொதுநிலையினர் அமைப்பு கோரிக்கை-07.03.2021

இந்திய ஆயர் பேரவையின் பொதுநிலையினர் பேரவையின் பொதுச்செயலாளர் திரு.வி.சி.செபாஸ்டியன் அவர்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் சுனில் அரோரா அவர்களை பிப்.16 ஆம் தேதி சந்தித்து, ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள ஐந்து மாநிலத் தேர்தலை புனித வாரத்தில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை மனு அளித்துள்ளார். 
தமிழ்நாடு, அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்கம் மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான தேர்தலை ஏப்ரல் மாதத்தில் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மார்ச் மாதம் 28 ஆம் தேதி குருத்து ஞாயிறு தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை இடம்பெற உள்ள, பெரிய வியாழன், பெரிய வெள்ளி, பெரிய சனி அடங்கிய புனித வாரம் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கியம் என்பதால், இந்நாட்களில் மேற்கண்ட மாநிலங்களில் தேர்தல் நடத்தக்கூடாது என்று இந்திய ஆயர் பேரவையின் பொதுநிலையினர் பேரவை இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது. 
பெரும்பாலான கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் வாக்குச் சாவடிகளாகவும் பெரும்பாலான ஆசிரியர்களைக் கொண்ட கிறிஸ்தவச் சமூகம் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என்பதாலும் இந்தக் கோரிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த காலத்தில், கர்நாடக சட்டமன்ற தேர்தல் புனித வாரத்தில் இடம்பெற்ற காரணத்தால், கிறிஸ்தவர்களும் கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களும் மிகப்பெரிய நெருக்கடியைச் சந்திக்க நேரிட்டதையும் இக்கோரிக்கை மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கர்தினால் ஜார்ஜ் ஆலஞ்சேரி அவர்களும் இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 

Comment