No icon

முனைவர் இ. தேவசகாயம்

பிணம் தேடும் கழுகுகள்

அந்நிய நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்ட இசுலாம் மற்றும் கிறித்தவத்திற்கு கலாச்சார தேசியத்தை முன்வைக்கும் இந்து ராஷ்டிரத்தில் இடம் உண்டா? இசுலாமியர்களும் இந்து ராஷ்டிரத்தில் சமமாக நடத்தப் பெறுவார்களா? அப்படியே ஏற்றுக்கொண்டாலும் எப்படிப்பட்ட இசுலாமியர்கள் ஏற்றுக்கொள்ளப் பெறுவர்? (What sort of muslim) இராமசென்ம பூமியை மீட்டெடுப்பதற்காக நடத்தப்பட்ட இயக்கத்தின்போது, எழுப்பப்பட்ட இயக்கம் எதுவோ அதுவே இப்போதும் எப்போதும் பொருந்தும். அது என்ன முழக்கம், இசுலாமியர்கள் இராமனை Imam - e –Hind ஆக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்துக் கலாச்சார மேன்மைக்கு உகந்த மரியாதை (Privacy) தர வேண்டும். இந்துக் கலாச்சார மேன்மையை ஏற்றுக்கொண்டால் இந்து தேசம் இசுலாமியரை சமமானவராக ஏற்றுக் கொள்ளும்...

இந்தியத்தின் அடிப்படைப் பண்பை சமயச் சார்பின்மையால் அழித்துவிட முடியாது!!

இவ்வுலகை இரு பெருங்கோட்பாடுகள் ஆள்வதாகக் கூறுகின்றனர். ஒன்று, முதலாளியம் மற்றொன்று பொதுவுடைமை (Capitalism + Communism). நாம் மூன்றாவது வழியொன்றை முன்மொழிகிறோம். அது எது? நாம் பெரிய கோயில் ஒன்றை எழுப்புதற்கான தயாரிப்பில் உள்ளோமே! அதுதான் நாம் கட்ட விரும்பும் மூன்றாவது வழி

ஆதாரம்

Nalin Mehta -  The New BJP, 365+531

நலின் மேத்தா இந்துத்துவம் பற்றியும், இந்துத்துவத்தில் இசுலாமியர் பெறும் இடம் பற்றியும் சொல்லப் பெறும் கருத்துக்கள் புதியன அல்ல.

இந்துத்துவக் கருத்தியலாளர்களின் மூலவரான கோல்வால்க்கர் 1939 ஆம் ஆண்டு எழுதிய  ‘We or Our Nationhood Definedஎன்ற நூலில் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். “இந்துக்கள் அல்லாதோர் இந்தியாவில் வாழ முடியும்? எப்போது? இந்துக் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டு, இந்துத் தலைவர்களை மகிமைப்படுத்திக்கொண்டு வாழப்பழகினால் வாழலாம். இல்லையெனினும் வாழலாம்; எப்படி? எதையும் கோராமல், எந்தச் சலுகைகளையும் வேண்டாமல், தனிச் சலுகைகள் எதையும் கேட்காமல், ஏன்? குடியுரிமைகள் கூட கேட்பதற்கான உரிமையற்றவர்களாக வாழப் பழகிகொள்ள வேண்டும்”. தி. இந்து, மே 24, 2022.

ஆளும் பாரதிய ஜனதா அரசு, ஆட்சிப் பெற்றிருக்கும் இக்காலத்தில் மசூதிகளைத் தேடி, அவைகளைத் தோண்டி, இந்துக. கடவுள் சிலைகளைத் தேடியலையும் காலம், 1992 ஆம் ஆண்டு, இராமசென்ம பூமியில் நிகழ்த்தப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தை விட கொடியது எனக் காட்ட எழுதப்பட்ட கட்டுரையின் ஒரு பகுதிதான் மேலே தரப்பட்டுள்ள செய்தி (A far more dangerous moment now than 1992) - சீமா கிறிஸ்தி.

இந்திய தாராளமய ஜனநாயகச் சூழலில் கம்யூனிசமும் வளர்ந்தது, தேசியமும் வளர்ந்தது. அனைவரையும் உள்ளிழுக்கும் சமயச் சார்பற்ற தேசியத்தோடு, பிரிவினைவாத பாசிசத்தன்மை கொண்ட வகுப்புவாதமும், தனக்குரிய இடத்தைப் பெற்றுக்கொண்டது. 1925 இல் இந்தியாவில் கால்கொண்ட இந்து தீவிரவாதம், இத்தீவிரவாதத்தின் உள்ளடக்கத்தை வடித்தெடுத்த ஹெக்டவாரும், வீர் சாவர்க்கரும் எதை விதைத்தனரோ அவ்விதைகள்தான் இன்று பிணம் தின்னும் கழுகுகளாய் திரிகின்றன.

இக்கழுகுகள் போடும் ஆட்டத்தைக் கண்டு வியப்புகொள்ள எதுவுமில்லை. இல்லாத மதமொன்றை, இருப்பதாகக் கட்டமைத்து, அச்சமயத்தின் உள்வட்டத்தில் நுழைய மறுக்கப்பட்ட மக்களையும், இச்சமய உறுப்பினர்களே என்று பொய்யுரைத்து, கழுதைக் கூட்டத்தை பெரியதாக்கியும், வன்முறை கூட்டமாகவும் மாற்றிக்கொண்ட இந்திய பாசிஸ்டுகள், தோன்றிய காலத்திலிருந்த வேஷத்தை இன்னும் கலைக்கவே இல்லை.

ஆர்.எஸ்.எஸ் என்ற பெயரில் உருவான மதவாத இயக்கம், இன்று பலுகி பெருகி நிற்கும் மதவாதக் குழுக்களின் தாய்க் கூடாரமாகும். இக்குழுக்கள் தனித்தனிப் பெயர்களில் செயல்படும் இடங்களுக்கும், காலத்திற்கு ஏற்ப செயல்பாட்டாலும் அவை அனைத்தின் உள்ளீடும் ஒன்று என்பதுதான் உண்மை. ஆர்.எஸ்.எஸ் என்ற தலைமை அமைப்பு எந்தக் கொள்கையை முன்னெடுத்ததோ, அதே கொள்கையைத் தான் இக்கிளை அமைப்புகள் செய்ய முடியும். ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட அமைப்புகளான விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள், இராமசேனா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி என இன்ன பிற பெயர்களால் செயல்படும் அமைப்புகள் அனைத்துமே இன்று பா.. பேசும் ஒற்றைக் கொள்கையுடையனவே; ஒற்றை இலக்குடையனவையே. 1925 ஆம் ஆண்டிற்குப்பின், இந்தியாவில் நடத்தப்பட்ட மதக்கலவரங்கள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ் பங்கு இருப்பினும், இக்கலவரங்களைப் பற்றிய விசாரணை ஆணையங்கள் எவையுமே ஆர்.எஸ்.எஸ் அமைப்பை கைகாட்டவே இல்லை. காரணம் என்ன? ஆர்.எஸ்.எஸ் என்ற அமைப்பு தன் கிளை அமைப்பொன்றின் தூண்டுதலால் நடத்தப்பட்டதால், ஆர்.எஸ்.எஸ் குற்றவாளிப் பட்டியலிருந்து தப்பிவிடுகிறது. இந்த விளக்கத்திற்கு காரணம் என்னவென்றால், பாரதிய ஜனதாவின் செய்தித் தொடர்பாளர் ஒருவரும் மற்றும் ஒருவரும் இசுலாமியத்தின் நபிகள் நாயகத்தை அவதூறாக பேசி, இவர்கள் பேசும் இந்தியத்தை அசிங்கப்படுத்திய நிலையில், இவ்விருவரின் பதவியைப் பறித்த பாரதிய ஜனதா, இவர்கள் இருவரையும் சிறிய (Fringe) குழுக்களைச் சார்ந்தவர்கள் என்று சொல்லி, தப்பிக்க முனைந்தது. ஆர்.எஸ்.எஸ் என்ற பேரமைப்பின் கீழ் செயற்படும் எந்த அமைப்பும் Fringe அமைப்பல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கே இவ்விளக்கம்.

ஒரு சமயம் சார்ந்த கடவுளரை இழிவு செய்தலை தேசத் துரோகமாகக் கருதுதல் விமர்சனங்களை பகை வளர்க்கும் செயலாக கருதுதல் என்பனவெல்லாம் கைது செய்து, சிறைக்கு அனுப்பும் குற்றமாகக் கருதப்பட்டு, விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடுவோர் பலர். கை நடுங்க, வாய் குழ பேசஇயலா இருந்த ஸ்டான் சாமியை தேசிய புலனாய்வு மையம் இழுத்துச் சென்று, சாகடிக்கலாம். பாரதிய ஜனதாவின் பிரதான கருத்தாளராக கருதப்பட்ட இருவர் இந்தியாவின் 20 சதவீத இசுலாமியரின் நம்பிக்கைக்குகந்த நபிகளை கேலி செய்தோர்க்கு என்ன தண்டனை? கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக சொன்னாலும், நீக்கப்பட்டவர்கள் பிற மதப்பகைவர்கள் தாமே. நாம் இந்துக்கள், அவர்கள் ஏனைய சமயத்தார் என்று பேதப்படுத்திய பிரிவினையிலும், பாகுபாட்டிலும் நம்பிக்கையுடையர்தாமே. கட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் விழுங்கிய விஷம் அவர்களிடம் தானே உள்ளது. இவ்விஷத்தை விதைத்தது யார்? இவ்வளவு தைரியமாக வெளியே பேச உரமூட்டியவர் யார்?

புதிதல்லவே!

மதவாத இயக்கங்கள் தோன்றியதன் நோக்கமே பகையும், வெறுப்புமே. வெறுப்பின் மீது பிற சமய பகை மீது கட்டப்பட்ட அரசியல்தான் இவர்களை ஆட்சி பீடத்தில் அமர வைத்தது. நாட்டில் அவ்வப்போது நடத்தப்பட்ட மதக் கலவரங்களால் துருவமயப்படுத்தப்பட்ட (polarization) மதப்பெரும்பான்மை, மதப்பெரும் பான்மைவாதமாகியது. பெரும்பான்மைவாதம் அநீதிக்கும், அடிமைத்தனத்துக்கும், ஒடுக்கலுக்கும், ஒதுக்கலுக்கும் வழிவகுக்கும் மதச்சிறுபான்மையினர்மீது தொடர்ந்து புனையப்பட்ட பொய்மைகளை நாட்டின் சான்றோர் பலர் சுட்டிக் காட்டி வந்திருந்தாலும் இந்துத்துவவாதிகளின் துருவ அரசியலுக்கு அதுவே துணை போயிற்று.

குஜராத் கலவரம் மோடியின் ஆட்சியை நிலைக்க வைத்தது, முசாபர்புரி கலவரம் யோகி ஆதித்யநாத்தை வளர்த்தது, மண்டைக்காடு கலவரம் பாரதிய ஜனதாவை பெரிய சக்தியாக்கிற்று.

இன்று, பாரதிய ஜனதாவின் முக்கிய உறுப்பினர் இருவர் பேசிய பகை கருத்து, இசுலாமிய நாடுகளை சினம் கொள்ள செய்திருக்கலாம். இந்திய அரசும், அதனை ஆளும் மதவாத கட்சியும் இன்று தன் மதவாதக் கொள்கைகளால் அம்பலப்பட்டு நிற்கின்றன.

முன்னாள் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமா, இந்தியாவில் மறுக்கப்படும் மதச்சுதந்திரம் பற்றி விமர்சித்த போது, மோடி கண்டுகொள்ளாதிருக்கலாம். மோடி அரசின் கிறித்தவ எதிர்ப்பை, கிறித்தவ நாடுகள் என்ற பெயரில் எதிர்க்கவில்லை. ஆனால், இன்று இசுலாமிய நாடுகள் இசுலாத்தின் பெயரால் எதிர்ப்பை காட்டுகின்றன. இசுலாமிய நாடொன்றில் இந்துக் கோயிலைக் கட்டி அர்ச்சிக்க சென்ற மோடி, சமய சார்பற்ற அரசியல் சாசனத்தைக் கொண்ட நாட்டிலுள்ள அனைத்து மசூதிகளும் இந்துக்கோயில்களின் மீது கட்டப்பட்டதாக சொல்லும் பாசிச இயக்கங்களுக்கு என்ன பதில் அளிப்பார்?

மேலும், எப்போதும் இக்கழுகுகள் முன்வைக்கும் போலிக் குரல் ஒன்றுக்கு விடை கிடைக்க வேண்டிய நேரமும் வந்துள்ளது.

இந்துக்களுக்கு இருப்பது ஒரே நாடு. அது இந்தியா. உலகெங்கும் கிறித்தவர்களுக்கென்று பல நாடுகள் உள! இசுலாமியக் குடியரசுகள் பலவுள, இந்துக்களுக்கு யாருள...? இந்த பொய்யான அவலக்குரலை எழுப்பி, இந்துக்களை, இந்துக்கள் அல்லாதோரை மீண்டும் ஒருங்கிணைத்து, அரசியல் அனுதாபம் பெற, அதன் மூலம் இன்னொரு துருவ அரசியலை முன்னெடுக்க முனையும் இந்துத்துவவாதிகளின்  தந்திரத்தை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோமோ?

இசுலாமிய நாடு களும், இந்தியாவில் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் இசுலாமிய மத எதிர்ப்புகளின் வடிவங்களை கண்டு கொள்ளவில்லை. இந்தியாவின் 80 லட்சம் தொழிலாளர்களைக் கொண்ட இவ்வரசுகள் இவர்களை அச்சுறுத்தவில்லை. மதரீதியாகப் பாகுபடுத்தவும் இல்லை. இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இன்று வரை இசுலாமியர் மீதான வெறுப்பின் மீது காட்டப்பட்டு வரும் வெறுப்பரசியலின் விளைவாக, மதவாத அரசியலின் வெளிப்பாடுகள் எதனையுமே கேள்வி கேட்கவில்லை. எடுத்துக்காட்டாக இந்திய அரசியலின் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கிய பாபர் மசூதி இடிப்பின்போது, எங்கே போனீர்கள்? கி.பி. 2000 த்தில் குஜராத்தில் நடத்தப்பட்ட மானுடர்க்கெதிரான மிகப்பெரிய வன்முறைகளின் போது இசுலாமிய கூட்டமைப்பு என்ன செய்தது? அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இயங்கும் மனித உரிமைக் குழுக்கள் இந்தியாவில் திட்டமிட்டு நடத்தப்பெறும் மத உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டியது போலவே அல்லாமல், ஏறத்தாழ வாயடைக்கப்பட்ட இசுலாமியர்களின் வாழ்வுரிமை காக்க ஓங்கி குரல் கொடுக்காமை இசுலாமிய நாடுகள் செய்த மிகப் பெரிய பாவம் என்பதனை அவர்கள் மொழியில் புரிந்து கொள்வார்களா?

இசுலாமியர்களும், இசுலாமிய நாடுகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தல் இந்துத்துவ துருவப்படுத்தலுக்கு உதவும் என்ற நிலையில், மௌனம் காத்தல் சரியான நிலைப்பாடு என்றிருந்தால் பரவாயில்லை. ஆனால், பிணந்தின்னி கழுகுகளாய் சுற்றி வரும் இந்துத்துவ பிணந்தின்னிகள் இந்தியாவைப் பற்றிக் கவலைக் கொண்டவர்களில்லை என்பதை உணர்ந்திருப்பாரோ? என்பது தான் நம் கவலை.

1992 - பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். இந்திய மதச்சார்பற்ற பண்புக்கு குழித்தோண்டிய நாள்.

1991 - இந்திய சமயங்களின் பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்ட நாள். இந்தியாவில் இயங்கும் அனைத்து சமய நிறுவனங்களின் நிலைப்பாடும் காக்கப் பெறவேண்டிய உத்தரவு பெற்ற நாள். உச்ச நீதி மன்றத்தின் இந்த உத்தரவை மீறும் வகையில் காசியில் வாகன்வயில், மசூதியின் ஒரு பகுதியில் சிவலிங்கம் தென்பட்டதாக கூறி, அதற்கு வழிபட அனுமதிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை மீறியதாகாதா?

அரசு ஒரு மதவாத அரசு, அரசின் நிறுவனங்கள் அனைத்தும் மதவாத மயமாக்கப்பட்ட சூழல்.

அரசும் நமக்கல்ல; அரசை இயக்கவல்ல அமைப்புகளும், குடிமைச் சமூக அமைப்புகளும் நமக்கல்ல; நாம் யார்? இந்தியக் குடிமக்களாகிய நாம் என்றறிவித்த இந்திய அரசியலமைப்பு சட்டம் எங்கே? யாருக்கு? நாம் யாரை உள்ளடக்கியது? நாம் என்ற பன்மையை மறுத்து செயற்படும் இந்தியாவில் எப்படி செயற்படபோகிறோம்? நாம் ஜனநாயகத்தை நம்புவோம், நம்பும் நாம் நம்மை இழக்க தயாராவோம்!

Comment