No icon

அயலகக் கிறித்துவர் தமிழ்ப்பணிகள்

5. வீரமாமுனிவர் (8.11.1680 - 4.2.1747)

திருக்காவலூர்க் கலம்பகம்

திருக்காவலூரில் எழுந்தருளியுள்ள அன்னையின் மீது வீரமாமுனிவர் பாடிய நூலே திருக்காவலூர்க் கலம்பகம் என்னும் நூல். பெண்தெய்வத்தின் மீது முதன்முதலாகப் பாடப்பெற்ற கலம்பகம், திருக்காவலூர்க் கலம்பகம்தான் எனக் கூறப்பெறுகின்றது. இவ் வகையில் தாய்த்தெய்வ வழிபாட்டை முதன்மைப் படுத்தித் திருக்காவலூர்க் கலம்பகத்தின் வாயிலாக மரியன்னையை வீரமாமுனிவர் போற்றியுள்ளமை கருத்தில் கொள்ளத்தக்கது.

கலம்பகம் என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. இலக்கியங்கள், சிற்றிலக்கியம் மற்றும் பேரிலக்கியம் என இருவகைப்படும். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கும்தான் உலகில் நிலையான விழுமியங்கள். எனவே அந் நான்கினையும் உறுதிப்பொருள்கள் என்பர். இந் நான்கு உறுதிப் பொருள்களையும் தமது நூல்களுள் கூறும் நூல் பேரிலக்கியங்கள் எனப்படும். அறம், பொருள் முதலான இவற்றுள் ஒன்றோ, சிலவோ குறைந்து வரும் இலக்கியங்கள் சிற்றிலக்கியங்கள் எனக் கூறப்பெறும்.

ஆற்றுப்படை, உலா, கோவை, தூது, பள்ளு, பரணி, பிள்ளைத்தமிழ், கலம்பகம் எனச் சிற்றிலக்கிய வகை பல வகைப்படும். முதலில் சிற்றிலக்கிய வகைகள் 96 எனத் தொகுத்துக் கூறியவரும் வீரமாமுனிவரே. தனது சதுரகராதியிலும், தொன்னூல் விளக்கத்திலும் சிற்றிலக்கியங்களைப் பற்றிப் பட்டியல் போட்டு காட்டுகின்றார் வீரமாமுனிவர். பலவிதமான பூக்களை வரிசையாகத் தொகுத்துக் கட்டிய மாலையை நாம் கதம்பம் எனக் கூறுவோம். அதைப் போல் 18 விதமான பொருண்மை கொண்ட பாக்களைக் கொண்டுப் பாடப்பெறும் இலக்கிய வகைக்குக்கலம்பகம்எனக் கூறுவர்.

திருக்காவலூரில் ஒரு பூங்கொடி பூத்து நிற்கின்றது. அந்த ஒரு கொடியிலேயே காந்தள், தாமரை, நீலோற்பலம், செவ்வல்லிப்பூ ஆகிய பூக்கள் பூத்து நிற்கின்றது. அந்தப் பூங்கொடிதான் அடைக்கல அன்னை!. பூங்கொடியாகிய அன்னையின் கைகள் காந்தள் மலர் போல் காணப்படுகின்றது; பாதங்கள் தாமரை மலர் போல் காணப்படுகின்றன; கண்கள் நீலோற்பல மலர் போல் காணப்படுகின்றன; வாய் செவ்வல்லிப் பூ போல் சிவந்து காணப்படுகின்றது; இப்படி ஒரு கொடியிலே பல விதமான, பல நிறமான மலர்கள் பூத்துக் குலுங்கும் வியப்பினைத் திருக்காவலூரில் காண வாருங்கள் என வீரமா முனிவர் இலக்கியச் சுவைத் ததும்பக் கூறுகின்றார்.

காந்தள்கை, கஞ்சம்தாள், காவிக்கண், ஆம்பல்வாய்

வேய்ந்துஅலர்ந்த காவலூர் மென்கொடியே - ஈந்தமது

உண்ணிகாள் சொல்மின்நீர் ஒத்துஉளதோ பூஉலகில்

பண்அணிபூம் தீம்தேன் பனித்து

என்பது அப்பாடல்.

பிற தமிழ்ப் படைப்புகள்

தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார்.

கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில், தமிழில் முதல்முதலாகப் பேச்சுத்தமிழ் வடிவத்தை விவரிக்க முனைந்தார். வழக்கும் செய்யுளுமே ஒரு மொழியின் இலக்கணமாக அமையுமென்றாலும், இரட்டை வழக்கு மொழியான தமிழில், பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் அமைந்திராத காலத்தில் கொடுந்தமிழ் இலக்கணம் வகுத்தது சிறப்பான முயற்சி எனல் வேண்டும்.

திருக்குறளில் அறத்துப்பாலையும், பொருட்பாலையும் இலத்தீனில் மொழிப்பெயர்த்தவர் வீரமாமுனிவர்.

உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, வாமன் கதை ஆகிய நூல்களைப் படைத்தார்.

திருக்காவல் ஊர்க் கலம்பகம், கித்தேரி அம்மன் அம்மானை இவரது பிற நூல்கள்.

 1728 இல் புதுவையில் இவரின்பரமார்த்த குருவின் கதைஎன்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. இது தமிழில் முதல் முதலாக வந்த நகைச்சுவை இலக்கியம் ஆகும்.

காவியத்தில் தேம்பாவணி இவர் இயற்றியது. மூன்று காண்டங்களில் 36 படலங்களைக் கொண்டு மொத்தமாக 3615 ஆசிரிய விருத்தப் பாக்களால் ஆனது இந்தக் காவியம். இதிலும் ஒரு சிறப்பு இருக்கிறது. பின்னிணைப்பாக யாப்பு வடிவங்களை அளித்திருக்கிறார். தமிழில் அமைந்த காப்பியங்களிலேயே, தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் ஒருவரால் இயற்றப்பட்டது எனும் பெருமை தேம்பாவணிக்கே உண்டு.

வீரமாமுனிவர் எழுதிய மருத்துவ நூல்கள்

வீரமாமுனிவர் பல மருத்துவ நூல்களை எழுதியுள்ளதாக குறிப்புகளிலுள்ளது. இந்நூல்கள் பாடல் வடிவில் உள்ளன.

1. நசகாண்டம்

2. நவரத்தின சுருக்க மாலை

3. மகா வீரிய சிந்தாமணி

4. வைத்திய சிந்தாமணி

5. சுரமஞ்சரி

6. பூவரசங்காய் எண்ணெய்

7. மேகநாதத்தைலம் (கலிவெண்பா)

8. பஞ்சாட்சர மூலி எண்ணெய் (ஆனந்தக் களிப்பு)

9. சத்துரு சங்கார எண்ணெய் (நொண்டிச் சிந்து)

10. வீரமெழுகு

11. முப்பூச் சூத்திரம்(நொண்டிச் சிந்து)

12. அனுபோக வைத்திய சிகாமணி

13. வீரிய சிந்தாமணி இரண்டாம் பாகம்

14. குண வாகடம்

15. நிலக்கண்ணாடி

முதலான நூல்கள் அவை. இவற்றுள் முப்பூ என்பது மிகப்பெரிய நுணுக்கமான செய்தி. கடல் தானாக அலைகளின் மூலம் கடைந்துகொள்வதால் உண்டாகும் ஒருவிதமான மருத்துவப்பொருள். இதனைப் பற்றித் தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து, தமிழ்நாட்டைத் தவிர வேறு பகுதிகள் எதனையும் அறியாத தொன்மையினைக் கொண்டோருள்கூட எத்தனைப் பேருக்கு முப்பூ பற்றித் தெரியும் எனக் கூற இயலாது. ஆனால், முப்பூ பற்றி வீரமாமுனிவர் அறிந்து வைத்திருந்தது மட்டுமல்ல. முப்பூவினை உருவாக்கும் சூத்திரத்தினையும் எழுதி வைத்திருக்கின்றார் என்றால் வீரமாமுனிவர் சாதாரணப்பட்டவரே அல்லர். இலக்கியத்தில் மட்டுமல்லாமல் மருத்துவத் துறையிலும் கற்றுத்துறை போகியவர் என்பதற்கு இவர் எழுதியுள்ள முப்பூச் சூத்திரம் என்னும் நூலே சான்று. இந்நூலினைத் தேடிக் கண்டுபிடித்துக் கருவூலம் போல் பாதுகாப்பது கிறித்துவர்கள் ஒவ்வொருவரின் கடமையாகும்.

துறைமங்கலம் சிவப்பிரகாசரைத் தன்னுடன் வாதம் செய்ய அழைத்தல்

வீரமாமுனிவர் ஒரு கருத்தினை எடுத்துக்கொண்டுப் பிறருடன் தமிழில் வாதம் செய்யும் ஆற்றலையும் பெற்றிருந்தார். இதற்கு, தமிழ்ப் புலவர் துறைமங்கலம் சிவப்பிரகாசரைத் தேர்ந்தெடுத்து அவருடன் வாதம் புரிய அவரை அழைத்த அஞ்சா நெஞ்சினராக வீரமாமுனிவர் திகழ்ந்தமையினை எடுத்துக்காட்டாகக் கூறலாம். வீரமாமுனிவர் வாதம் செய்வதில் எத்தகைய ஆற்றல் பெற்றிருந்தார் அதுவும் துறைமங்கலம் சிவப்பிரகாசரையே வாதத்திற்கு அழைத்தார் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும் எனில் துறைமங்கலம் சிவப்பிரகாசர் பற்றி முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

தொண்டை நாட்டின் காஞ்சிபுரத்தில் வேளாளர்களின் ஞானகுருவாக விளங்கியவர் குமாரசாமி தேசிகர் என்பவர். இவருடைய மக்களுள் ஒருவரே சிவப்பிரகாசர். இவர் ஒரு கோவிலில் உள்ள இறைவனை வணங்கச் சென்றால் இறையருளால் அங்கேயே அந்த இறைவனைப் பற்றி 100 பாக்கள் மூலம் பாமாலை கோர்க்க வல்லவர். திருவண்ணாமலையை வலம்வரலாம் என துறைமங்கலம் சிவப்பிரகாசர் சென்றிருந்தபொழுது தன்னையறியாமல் 100 பாக்களில் சோண சைல மாலை என்னும் நூலினைப் பாடியவர்.

தமிழ் மொழியில் உள்ள இலக்கண, இலக்கியங்கள் அனைத்தையும் கற்றுத் தீர்க்க வேண்டும் என்னும் தணியாத தாகம் கொண்டவர். இதற்காகத் தன் தம்பியுடன் வடநாட்டிற்குச் சென்றார். செல்லும் வழியில் வாலிகண்டபுரம் என்னும் இடத்திற்குத் தெற்கில் உள்ள துறைமங்கலம் என்னும் இடத்தில் இருந்த நந்தவனத்தில் தங்கினார். சிந்துப்பூந்துறையில் இருந்த தருமபுர ஆதீன வெள்ளியம்பலவாண சாமிகள் இலக்கண இலக்கிய நூற்புலமையில் வல்லவர் என்பதனைக் கேள்விப்பட்டு அவரிடம் கல்வி பயில்வதற்காக அவரை வணங்கி நின்றார்.

சிவப்பிரகாசரின் விருப்பத்தை அறிந்த வெள்ளியம்பலவாண சாமிகள், அவரைப் பரிசோதிக்க எண்ணினார். ஆகவே, ‘குஎன்னும் எழுத்தில் தொடங்கி ஊருடையான் என்னும் சொல்லினை இடையில் அமைத்துகுஎன்னும் எழுத்தில் முடியுமாறு இறைவனைப் புகழ்ந்து பாடுகஎனப் பணித்தார். உடனே சிவப்பிரகாசரும்,

குடக்கோடு வானெயிறு கொண்டாற்குக் கேழல்

முடக்கோடு முன்னமணி வாற்கு - வடக்கோடு

தேருடையான் தெவ்வுக்குத் தில்லைதோல் மேற்கொள்ளல்

ஊருடையான் என்னும் உலகு.”

என்னும் வெண்பாவை இயற்றிப் பாடினார். அதனால் மனம் கனிந்த வெள்ளியம்பலவாண சாமிகள் சிவப்பிரகாசருக்கும் அவரது தம்பிக்கும் 15 தினங்களில் ஐந்து இலக்கணங்களையும் பாடமாகச் சொல்லி அவர்களின் இலக்கணப் புலமையினை நிறைவுபெறச் செய்தார். தமக்குப் பாடம் சொல்லித் தந்த குருவிற்குக் காணிக்கை தரச் சிவப்பிரகாசர் விரும்பினார்.

ஆகவே, அண்ணாமலை ரெட்டியார் வழிச்செலவுக்காகத் தந்தனுப்பிய பொன்னில் 300 பொன்னைச் சிவப்பிரகாசர் குரு காணிக்கையாகத் தர முனைந்தார். அதை மறுத்த அம்பலவாண சாமிகள், திருச்செந்தூரிலிருக்கும் ஒரு தமிழ்ப் புலவரை வென்று செருக்கழித்து வாரும் அதுவே குரு காணிக்கைஎன்றார்.

சிவப்பிரகாசரும் திருச்செந்தூர் சென்றார். திருச்செந்தூர் சென்று திருக்கோவில் வலம்வருங்கால், செருக்குற்ற அந்தப் புலவரைச் சந்தித்தார். சொற்போர் ஆரம்பித்தது.

போட்டி என்ன? என்றதற்குத் திருச்செந்தூர்ப் புலவர், “நாம் இருவரும் நீரோட்டக யகமம் (வாயிதழ் குவியாமல் அமைக்கும் பாடல்வகை) பாட்டு முருகப் பெருமானைப் போற்றிப் பாடவேண்டும். முன்னர் பாடி முடித்தவருக்கு, அஃதியலாதார் அடிமையாக வேண்டும்என்றார்.

சிவப்பிரகாசர், நீரோட்டக யமக அந்தாதியின்கொற்ற வருணைஎனத் தொடங்கும் காப்புச் செய்யுளை முதற்கொண்டுகாயங்கலையநலிஎன முற்றுப்பெறும் செய்யுளோடு, 31 கட்டளைக் கலித்துறைப் பாக்களை முதலில் பாடி முடித்தார். திருச்செந்தூராரோ, ஒரு பாடலைக்கூட முடிக்க இயலவில்லை. திருச்செந்தூர்ப் புலவரை அடிமையாக்கித் தம் குரு, வெள்ளியம்பலத் தம்பிரானிடம் ஒப்புவித்தார்.

தனது குருவே தோற்றுப்போன ஒருவரைத் தோற்கடித்து அவரைக் குரு காணிக்கையாக்க வல்லவர் துறைமங்கலம் சிவப்பிரகாசர். இத்தகைய ஆற்றல் வாய்ந்தவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளிடம் கிறித்துவ சமயம் பற்றி வாதம் செய்ய வருமாறு வலியச் சென்று வீரமாமுனிவர் அழைத்தார் என்றால், வீரமாமுனிவருக்குத் தன்மீதும், தான் வணங்கும் இயேசு பெருமான்மீதும் எத்தகைய பற்றுறுதி இருந்தது என்பதனை நாம் உணரலாம். ஆனால், கிறித்துவ சமயத்தின்மீதும், கிறித்துவ சமயக் கொள்கையின் மீதும் வெறுப்பினைக் கொண்டிருந்த துறைமங்கலம் சிவப்பிரகாசர் வீரமாமுனிவருடன் வாதுக்குச் செல்லாமல் விடுத்ததோடு, கிறித்துவ சமயத்தை மறுத்து ஏசுமத நிராகரணம் என்னும் நூலினை எழுதினார்.

இவ்வாறு, வீரமாமுனிவரைப் போல் வேறெந்தக் காப்பியப் புலவரும், சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை, மருத்துவம், வாதம் செய்யும் திறமை எனப் பல இலக்கிய வகைமைகளில் நூல்கள் படைத்தார் ஒருவரும் இல்லை; பல்வேறு களங்களில் திறமை கொண்டார் ஒருவரும் இல்லை எனலாம்.

வீரமாமுனிவரின் பல சிறப்புப் பெயர்கள்

கொஸ்தான்சோ ஜுசேப்பே எவுசேபியோ பெஸ்கி என்னும் பெயர் இவரது திருமுழுக்குப் பெயராக இருந்தாலும் தமிழில் பலப்பல சிறப்புப்பெயர்களால் இவர் குறிக்கப்பெற்றார். வீரமாமுனிவர், முனிவர், தெருட்குரு, வீர ஆரிய வேதியன், திருமதுரைச் செந்தமிழ்த் தேசிகர், இஸ்மத் சந்நியாசி, மலர்களின் தந்தை, தமிழ் மொழியின் தாந்தே என்னும் பல சிறப்புப் பெயர்களால் இவர் புகழப்படுகின்றார். இத்தனைச் சிறப்புப் பெயர்களால் இவரைப் போல் வேறு எந்த மேலைநாட்டுக் கிறித்துவரும் இதுவரைப் புகழப்பட்டதில்லை.

வீரமாமுனிவர் என்னும் பெயர்

வீரமாமுனிவரின் வரலாற்றை 1822 இல் எழுதிய முத்துச்சாமிப் பிள்ளை இக்குறிப்பைத் தருகிறார். வீரமாமுனிவர் பாடிய பெருங்காப்பியத்தை (தேம்பாவணியை) கண்டு வியந்த வித்துவான்களும் அவருடைய மாணாக்கர்களும், அவர் பாடிய பிரபந்தங்களுக்குக் குருவணக்கம் சொல்ல வேண்டுமென்று விரும்பி, அவர் அனுமதிப்படி, அந்நாள் வரைக்கும் அவருக்கு வழங்கிவந்ததைரியநாத சுவாமிஎன்கிற பெயரில் தைரியத்துக்கு வீரம் என்றும், காமம், மதம், மாச்சரியங்களை முனிந்து வென்றவர் ஆதலால் முனிவர் என்றும், ‘மாஎன்பது பெருமையைக் குறித்த அடைமொழியாக முனிவர் என்பதோடு கூட்டிவீரமாமுனிவர்எனக் காரணப் பெயர் அமைத்து வணக்கம் கூறலாயினர். (தொடரும்)

Comment