No icon

பொதுநிலையினர் ஞாயிறு - 30.06.2019

"பொதுநிலையினரின் தலைமைத்துவத்தை வளர்த்தெடுப்போம்"

தலைமை
தலைமை என்பது எந்த ஒரு குழுவுக்கும் அமைப்புக்கும் நாட்டுக்கும் இன்றியமையாதது. எனவே, தலைவர் அமைப்பின் இலட்சியம் குறித்த தெளிவுடன் அதை நோக்கித் தனது அமைப்பை நகர்த்த உறுதி கொண்டவராக இருக்க வேண்டும். ஜனநாயக முறையில் உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றுச் செயல்படுவதற்குரிய வழிகாட்டுதல் மிகவும் அவசியம். பொதுநிலையினர் இன்றைய சமூக பொருளாதார அரசியல் சூழல்களில் முழுமையாகப் பங்கேற்பது தனிப்பட்ட அழைப்பு ஆகும். திருஅவையின் வாழ்விலும் பணியிலும் பங்கேற்கும் பொதுநிலையினர் சமூகத்தில் திரு அவையின் குரலாகவும், திருஅவை
யில் சமூகத்தின் குரலாகவும் திகழ் கின்றனர். இத்தகைய பெரும் இரட்டைப் பொறுப்பைக் கொண்டுள்ள பொதுநிலையினரின் தலைமைத்துவம் சீரிய முறையில் வளர்க்கப்பட வேண்டும். ஏனெனில், திருஅவை என்பது அருள்பணியாளர்களும் பொதுநிலையினரும் இணைந்த ஓர் இறையாட்சி இயக்கமாகும். இந்த இயக்கம் சமூகத்தில் வேரூன்றி அச்சமூகத்திலேயே வாழ்கிறது. ஆதலின், இந்த இயக்கத்தில் மிகுதியான உறுப்
பினர்களாகிய பொதுநிலையினரின் தலைமை பெரிதும் அவசியமாகும்.
விவிலியத்தில் தலைமை
விவிலியத்தின் தலைமை மோசேயில் தொடங்கி, நீதித்தலைவர் கள், இறைவாக்கினர்கள், அரசர்கள் எனப் பல்வேறு பொதுநிலையினர் இஸ்ரயேல் மக்களைத் தலைமை யேற்று, வழிநடத்தி வந்துள்ளதை நாம் பழைய ஏற்பாட்டில் காண்கிறோம்.புதிய ஏற்பாட்டில் இயேசு ஒரு தலைவராகத் திகழ்கிறார். தன்னோடு இணைந்து இறையாட்சிப் பணியாற்ற சாமானியர்களாகிய பொதுநிலையினர் பன்னிருவரைத் தெரிவுசெய்து, அவர்
களைத் திருத்தூதர் குழுவாக உருவாக்கி, தமது வார்த்தையாலும் வாழ்வாலும் முன்மாதிரியாக விளங்க அவர்களை உருவாக்குகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, தலைமைத்துவப் பணியை எடுத்துரைக்கிறார். "பிற இனத்தாரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுபவர்கள் மக்களை அடக்கி ஆள்கிறார்கள். அதிகாரத்தைக் காட்டுகிறார்கள். உங்களிடையே அப்படி இருத்தலாகாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர்கள் அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்" (மாற் 10:42-44). இவ்வாறு  கிறிஸ்துவ தலைமைத்துவம் என்பது பணியாள் தலைமைத்துவம் என்பதை அழகாக விளக்குகிறார். சீடர்களின் பாதங்களைக் கழுவி அதற்குச் சான்றும் பகர்ந்தார்.
சங்கம் காட்டும் பொதுநிலையினரின் தலைமைத்துவம்
இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருஅவை வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனை. திருஅவையின் இயல்பையும் அமைப்பையும் மாற்றியமைத்த மாபெரும் நிகழ்வு. திருமுழுக்குப் பெற்ற அனைவரும் திருஅவை எனவும், அந்த இறைமக்களிடையே நிலவும் பொதுமைப்பண்பு குறித்து திருஅவை ஏடு எண் 13ல் மிக விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், எண் 30ல் இறைமக்களைப் பற்றிக் கூறப்பட்டவை அனைத்தும் பொதுநிலையினர், துறவறத்தார், திருப்பணி நிலையினர் அனைவருக்கும் பொதுவானவையே என்று கூறி, பொதுநிலையினரின் தலைமைப்பண்பை வெளிப்படுத்துகிறது. "உலகு சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபட்டு உழைக்குங்கால் அவற்றைக் கடவுளின் திட்டப்படி நெறிப்படுத்துவதின் மூலம் கடவுளின் ஆட்சியை அமைக்கத் தேடுவது தங்களின் தனிப்பட்ட அழைப்பால் பொதுநிலையினரைச் சார்ந்தது" (திரு.31) என்று பொதுநிலையினர் மக்களை நல்வழி நடத்தி இறையாட்சியை இம்மண்ணில் வளர்ப்பது தனிப்பட்ட அழைப்பு என்பதை உறுதி செய்கிறது. மேலும், அருள்பணியாளர்களோ, திருஅவையில்
பொதுநிலையினர் கொண்டுள்ள மேன்மையையும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, அவற்றை மேம்படச் செய்ய வேண்டும். பொதுநிலையினரின் முன்மதியுள்ள அறிவுரையை விருப்புடன் அவர்கள் பயன்படுத்துவார்களாக. திருஅவையின் பணிப் பொறுப்புகளை அவர்களிடம் நம்பிக்கையோடு ஒப்படைத்து அவர்கள் சுதந்திரத்தோடு செயல்புரிய வாய்ப்பு அளிக்க வேண்டும்" (திரு.37) என்று முன்மொழிவதன் வாயிலாகப் பொதுநிலையினரின் தலைமைத்துவத்தையும் சங்கம் அங்கீகரித்துள்ளது.
திருஅவைச் சட்டம் கூறும் பொதுநிலையினரின் தலைமைத்துவம்
1983 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திருஅவைச் சட்டம் பொதுநிலையினருக்குப் பல்வேறு உரிமைகளையும் கடமைகளையும் வழங்கியுள்ளது. திருஅவைச் சட்டம் 208 முதல் 230 வரையுள்ள அவற்றைப் பொதுநிலையினரின் பேருரிமைப் பத்திரம் (ஆயபயே ஊயசவய) என்றே அழைக்கலாம். திருஅவையில் இறைமக்களிடையே அழைப்பு, மாண்பு, பணி இவற்றில் நிலவும் சமத்துவத்தைத் (தி.ச.208) தெளிவாக வெளிப்படுத்துகிறது. மேலும், பல இடங்களில் பொதுநிலையினருக்கான தலைமையேற்கும் உரிமை, பணிப்பொறுப்பு ஆகியவை பற்றியும் எடுத்துரைக்கிறது.
இவ்வாறு விவிலிய ஒளியிலும், சங்க வழிகாட்டலிலும், சட்டம் வழங்கிய உரிமையிலும் வழங்கப் பெற்றுள்ள தலைமைப் பொறுப்புகளைப் பொதுநிலையினர் ஏற்றுச் செயல்பட முன்வர வேண்டும். அருள்பணியாளர்கள் அதற்கான பயிற்சியை அவர்களுக்கு அளித்து, அவர்களின் தலைமைத்துவத்தை வளர்க்க வேண்டும். இன்றைய சமய, சமூக, அரசியல் தலைமையின் குறைகளை அகற்றி, அனைவரும் நிறைவாழ்வு பெற அர்ப்பணத்தோடு தலைமைப் பணியாற்றுவோம்.    

Comment