No icon

​​​​​​​அருள்பணி. ஜாண் குழந்தை, கோட்டாறு மறைமாவட்டம்

மறைசாட்சி புனித தேவசகாயம்

முன்னுரை

இந்திய நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக இன்னும் ஒரு புனிதர் கிடைத்திருக்கிறார். அவர்தான் மறைசாட்சி தேவசகாயம். 2022 ஆம் ஆண்டு, மே மாதம் 15 ஆம் தேதி, அவருக்குப் புனிதர் பட்டம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் உரோமை மாநகரில், வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தில் வழங்கப்பட இருக்கிறது. இந்திய மண்ணில் பிறந்து, இந்திய மண்ணிலேயே மறைசாட்சியாக அறிவிக்கப்பட்ட முதல் புனிதர். இந்தியத் திருஅவையின் முதல் பொதுநிலையினரான புனிதர், இல்லறத்தார், தமிழகத்தின் முதல் புனிதர்.

புனிதர் என்பவர் யார்?

புனிதர்கள் என்பவர்கள் நம்மைப்போல சாதாரண மனிதர்கள். ஆனால், அவர்களது வாழ்க்கை கடவுளின் விருப்பத்தை இவ்வுலகில் நிறைவேற்றி பிறருக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருப்பதால் அவர்களைத் திருஅவைபுனிதர்கள்என்று அழைக்கிறது. அண்மைக்காலம் வரை இந்தியாவிலும் உலகம் முழுவதும் கைவிடப்பட்ட ஏழை எளிய மக்களுக்கும், தொழுநோயாளர்களுக்கும் அனாதைகளுக்கும் மற்றும் திக்கற்ற பாமரர்க்கும் நற்பணியாற்றி இறைப்பதம் அடைந்த அன்னை தெரசா 2016 இல் புனிதராக அறிவிக்கப்பட்டார். 2005 வரை திருத்தந்தையாக இருந்த போப் இரண்டாம் ஜான்பால் 2017 இல் புனிதராக அறிவிக்கப்பட்டார். இந்தப் புனிதர் பட்டியலில் ஏற்கனவே பல இந்தியர்களும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

1. மறைசாட்சி கொன்சாலோ கார்சியா (1556 - 1597) மும்பை, வசாயில் பிறந்து ஜப்பானில் நாகசாகியில் கிறிஸ்துவில் கொண்ட நம்பிக்கைக்காக இறந்தவர்.

2. புனித ஜோசப் வாஸ் (1651 - 1711) கோவாவில் பிறந்து இலங்கையில் இறை பணி செய்தவர்.

3. புனித அல்போன்சா (1910 - 1946)கேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டம் பரங்ஞானம் என்ற இடத்தில் அருள்சகோதரியாக வாழ்ந்தவர்.

4. புனித குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா (1805- 1871) கேரளாவில் வாழ்ந்த புனித துறவி

5. புனித மரியம் தெரசா (1876 - 1926) கேரளாவில் திருச்சூரில் வாழ்ந்த துறவி

6. புனித எப்பிராசியா (1877 - 1952) இவரும் திருச்சூரில் வாழ்ந்த துறவி

இவர்களோடு புனிதர் நிலைக்கு உயர்த்தப்படும் முதல் இல்லறத்தார் தான் மறைசாட்சி தேவசகாயம். தமிழகத்தின் முதல் புனிதர். எனவே, தமிழகத்துக்குப் பெருமை. அப்புனிதர் நமது குமரி மண்ணைச்சார்ந்தவர். இதனால் நமது குமரி மாவட்டத்துக்கு இரட்டிப்புப் பெருமை.

I. வாழ்க்கைச் சுருக்கம்

1. பிறப்பும் வளர்ப்பும்:

மறைசாட்சி தேவசகாயம் இந்திய நாட்டின் தென்கோடியிலுள்ள கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தில் ஒரு நாயர் குடும்பத்தில் வாசுதேவன் நம்பூதிரிக்கும் தேவகியம்மாவுக்கும் 23.04.1712 இல் பிறந்தார். அவரது முதல் பெயர்நீலம்என்பதாகும். அப்பெயர் நீலகண்டன் என்றும் வழங்கப்பட்டது. தமிழ், மலையாளம், வடமொழி ஆகிய மொழிகளையும் மற்றும் வர்ம சாஸ்திரம், சிலம்படி, மல்யுத்தம், குதிரையேற்றம், அம்பு எய்தல், அடிமுறைகள், சண்டைப்பயிற்சி போன்ற கலைகளையும் சரியாகக் கற்று தமது திறமைக்கு வலுவூட்டினார். அதோடு வாள் மற்றும் ஆயுதப்பயிற்சியும், போர்ப்பயிற்சிகளும் பெற்றுக்கொண்டார். சிலகாலம் மன்னனின் படையில் சேர்ந்திருந்தார்.

2. அலுவல்:

திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா அவரைத் தமது அரசவை அலுவலராக நியமித்தார். நீலகண்டன் பத்மநாபபுரம் அரண்மனையைச் சுற்றிலும் கோட்டை கட்டுமானப் பணிகளைக் கண்காணித்தார். மேலும், அங்கு நீலகண்டசுவாமி கோவில் அதிகாரியாகவும் இருந்தார். கடவுள் பக்தி கொண்டவராக, கொடுக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் அவர் திறம்படவே நிறைவேற்றி வந்தார். அவர் மேக்கோடு நாயர் குடும்பத்தைச் சார்ந்த நங்கை பார்க்கவியைத் திருமணம் செய்து மகிழ்வான மணவாழ்வில் ஈடுபட்டிருந்தார்.

3. குளச்சல் போர்:

1741 இல் திருவிதாங்கூர் படைகளுக்கும், டச்சுப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் மன்னர் மார்த்தாண்டவர்மாவிடம் டச்சு தளபதி பெனடிக்ட் டிலனாய் போர்க் கைதியானார். பிற்காலத்தில் அவரைத் தமது படைத்தளபதியாக நியமித்தார். கத்தோலிக்கரான டிலனாயுடன் நீலகண்டன் பழகினார். இருவரும் நண்பர்களாயினர்.

4. மனமாற்றமும், திருமுழுக்கும்:

நீலகண்டன் பல இழப்புகளுக்கும், துன்பங்களுக்கும் ஆளானபோது டிலனாய் அவருக்கு ஆறுதல் கூறினார். அதோடு, இயேசுவின் பாடுகளையும் மறைசாட்சிகள் அனுபவித்த துன்பங்களையும் எடுத்துரைத்து, விவிலியத்திலுள்ளயோபுவின் வரலாற்றை மேற்கோள் காட்டி ஆறுதல் கூறினார். இந்த விளக்கம் நீலகண்டனுக்குப் பிடித்துவிட்டது. அவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றி மேன்மேலும் அறியவும் திருமுழுக்குப் பெற்று கிறிஸ்தவத்தைத் தழுவவும் தமது ஆவலை வெளிப்படுத்தினார். அன்றைய பாண்டிய நாட்டின் வடக்கன்குளத்தில் மறைத்திரு புத்தாரியிடம் 9 மாதங்கள் மறைக்கல்விக்குப்பின் 14.05.1745 இல் வடக்கன்குளத்தில் திருக்குடும்பக் கோவிலில் திருமுழுக்குப் பெற்றார். “இலாசர்என்னும் விவிலியப் பெயர் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுதேவசகாயம்என்னும் பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது.

5. நற்செய்தி அறிவிப்பும் சீடத்துவ வாழ்வும்:

திருமுழுக்குப் பெற்ற தேவசகாயம் முற்றிலும் மாற்றம்பெற்று மகிழ்ச்சியோடு; காணப்பட்டார். தான் அடைந்த மகிழ்வினைப் பிறரோடு பகிர்ந்துகொண்டு நற்செய்தி அறிவித்தார். அதனால் அவரது மனைவி பார்க்கவியும் திருமுழுக்குப் பெற்றார். “தெரேஸ்என்னும் பெயர் தமிழில்ஞானப்பூஎன்று அவருக்குச் சூட்டப்பட்டது. சில படைவீரர்களும் மனம் மாறினர். தேவசகாயம் மனிதர் அனைவரும் சமம் என்றும், சாதி, மதம், சமுதாயம் ஆகியவைகளின் பெயரால் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று பேசுவதும் செயல்படுவதும் தவறு, அது பாவம் என்றும் மக்களுக்குப் போதித்தார். அவர் தாழ்த்தப்பட்ட மக்களோடு நெருங்கிப் பழகி, உண்டு உறவாடினார். அவர்களுடைய முன்னேற்றத்திற்காக உழைத்தார். எனவே, உயர்குலத்தார் தங்கள் முன்னோர்களின் மதத்தை அவர் புறக்கணித்துவிட்டார் என்றும், அவர்களுடைய தேவர்களையும், புரோகிதர்களையும், ஏன் அரசனையும்கூட அவமதித்துவிட்டார் என்றும் அரசனிடம் குற்றம் சாட்டினார்கள்.

6. கைதும் துன்பங்களும்:

நற்செய்தி அறிவிப்பும், சாதி மறுப்பும், மூட நம்பிக்கைகள் எதிர்ப்பும் ராஜ துரோகமாகவும், குலதுரோகமாகவும் கருதப்பட்டு மன்னரின் ஆணைப்படி 23.02.1749 அன்று, மறைசாட்சி தேவசகாயம் பதவிகள் பறிக்கப்பட்டு, கைதானார். குறுகிய சிறையில் அடைக்கப்பட்டு, இருமுறை மரண தண்டனை விதிக்கப்பட்டார். எருமையின் மீதும் கால்நடையாகவும், ஊர் ஊராகக் கொண்டு அவமானப்படுத்தப்பட்டார். முள்சாட்டையால் அடிக்கப்பட்டார். காயங்களிலும், நாசிகளிலும் அரைத்த வத்தல்பொடி போடப்பட்டதோடு இன்னும் பல துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டார்.

7. மறைசாட்சியம்:

தனக்கு இழைக்கப்பட்ட எல்லாத் துன்பங்களையும் இன்முகத்துடனும், மனமகிழ்வுடனும் ஏற்றுக்கொண்டார் தேவசகாயம். இயேசு கிறிஸ்துவின் மீதும், அவரது போதனைகள் மீதும், மேலும் மேலும் பற்றுறுதியுடன் காணப்பட்டார். பலரும் அவரால் ஈர்க்கப்பட்டனர். எனவே, அவரை மறைவாகக் கொன்றுவிட திட்டமிடப்பட்டது. அதன்படி, 14.01.1752 வெள்ளிக்கிழமை நள்ளிரவில் காற்றாடி மலையில் ஐந்து துப்பாக்கிக் குண்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டுமறைசாட்சியானார். உயிரற்ற அவரது புனித உடல் பாறையிலிருந்து கீழே தள்ளி வனவிலங்குகளுக்கு உணவாகப் போடப்பட்டது.

8. நல்லடக்கமும் மக்களின் வணக்கமும்:

தேவசகாயத்தின் வீரச்சாவு பற்றிய செய்தி 3 நாட்களுக்குப்பின் பரவத் தொடங்கியது. மக்கள் அவரது உடலின் சில எஞ்சிய பகுதிகளைக் கண்டுபிடித்தார்கள். அவை பக்தியுடன் சேகரிக்கப்பட்டு மிகப் புகழ் பெற்ற ஆலயமாகிய கோட்டாறு புனித சவேரியார் கோவிலில் பலி பீடத்திற்குமுன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அன்றுமுதல் இன்றுவரை எல்லா மக்களாலும் புனிதராகவே கருதப்பட்டுள்ளார் நம் மறைசாட்சி தேவசகாயம். அவரைப் பற்றிய தகவல்கள் அன்றுமுதல் இன்று வரை பல மொழிகளில் இலக்கியங்களாகவும் நாடகங்களாகவும் அரசு ஆவணங்களிலும் இடம்பெற்றுள்ளன.

9. புனிதர் நிலை நோக்கி:

பேராயர்  . ஆரோக்கியசாமி :

குமரி மாவட்டத்துப் பொதுநிலையினர் சிலரின் வேண்டுகோளை ஏற்று மறைசாட்சி தேவசகாயத்துக்குப் புனிதர் பட்டம் கொடுக்க முதல் முயற்சியைத் தொடங்கியவர் நினைவில் வாழும் மேதகு பேராயர் . ஆரோக்கிய சாமி ஆவார்.

ஆயர் லியோண் தர்மராஜ் :

தொடர்ந்து அப்பணியை ஏற்றுக்கொண்ட ஆயர் லியோண் தர்மராஜ் அவர்கள், முறையாக உரோமைக்கு விண்ணப்பித்து ஆய்வுகளைத் தொடங்கி வைத்தார்.

ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ்: 2007 இல் கோட்டாறு மறைமாவட்ட ஆயராக பொறுப்பேற்ற மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்கள், இப்பணியில் பேரார்வம் கொண்டு, மறைமாவட்ட ஆய்வினை நிறைவு செய்தார். மேலும், முக்கியமான அறிக்கையை வரைவு செய்ய அருள்பணி. ஜாண் குழந்தையை உரோமைக்கு அனுப்பினார். 800 பக்கங்களைக் கொண்ட அவ்வறிக்கையை உடனே அச்சேற்றி, உரோமையில் பணிகளைத் தீவிரப்படுத்தினார். அவர்களது அரிய பணிகளால் 02-12-2012 அன்று தேவசகாயம் அருளாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டார்.

அடுத்தநிலைதான் புனிதர் நிலை. அதற்கு ஓர் அற்புத நிகழ்வு புனிதரின் வேண்டுதலால் நடக்க வேண்டும். அதற்கு நிகழ்வு ஒன்றினை அடையாளப்படுத்தி முயற்சிகளை மேற்கொண்டார் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ். அதனை உரோமைக்கு அனுப்பி உரோமையின் ஏற்புடன் மறைமாவட்ட ஆய்வுகளைத் தொடங்கினார். ஆய்வுகளை நிறைவு செய்து உரோமைக்கு அனுப்பி அங்கும் பணிகளைத் தீவிரப்படுத்தினார். எனவே, புனிதர் பட்டத்தை நோக்கிய இரு படிநிலைகளிலும் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களின் பணி மிக அளப்பரியது.

ஆயர் நசரேன் சூசை: ஜூன் 29, 2017 முதல் கோட்டாறு ஆயராகப் பொறுப்பேற்று, அனைத்துப் பணிகளும் நிறைவு அடைய வழி கோரினார். அவரது காலத்தில் புனிதர் நிலை அறிவிப்பு நிகழ்வு நடப்பது அவருக்கு மகிழ்ச்சியான பெரும் பேறு.

II. புனிதர்  நிலை அறிவிப்புத் திருப்பணிகள்:

1. மறைசாட்சிய அறிவிக்கை / அருளாளர் நிலை அறிவிப்பு

. தொடக்கப் பணிகள்:

- புனிதர் பட்ட பேராயத்திற்கு விண்ணப்பம் : 25.10.2003 - ஆயர் லியோண் தர்மராஜ்

- வேண்டுகையாளர் : 14.11.2003 - அருள்பணி. ஜார்ஜ் நெடுங்காட் சே.., துணை வேண்டுகையாளர் : அருள்பணி. . கபிரியேல்

-
Nihil obstat (தடையில்லை சான்றிதழ் - இறை ஊழியர்) : 22.12.2003

. மறைமாவட்ட ஆய்வுகள்:

- வரலாற்றுக் குழு : 05.07.2004 - அருள்பணியாளர்கள் ரொசரியோ நற்சீசன்,

E. ஜாண் குழந்தை, திரு. வர்க்கீஸ் ஆன்றனி

- மறைமாவட்ட ஆய்வுக்குழு : 03.03.2006 அருள்பணி. ளு. சாலமோன் (ஆயர் பதிலாள்) அருள்பணி. . குழந்தைசுவாமி (நீதி நெறியாளர்) அருள்பணி. . சூசை (பதிவாளர்)

- ஆடம்பர தொடக்க அமர்வு : 03.07.2006 - புனித பிரான்சிஸ் சவேரியார் மறைமாவட்ட பேராலயம், ஆயர் லியோண் தர்மராஜ்

- ஆடம்பர இறுதி அமர்வு : 07.09.2008 - புனித பிரான்சிஸ் சவேரியார் மறைமாவட்ட பேராலயம், ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ்

- மறைமாவட்ட ஆய்வுகள் ஏற்பு : 18.03.2010 (புனித பேராயம், உரோமை)

. உரோமைத் திருப்பணிகள்:

- தொகுப்பு ஆய்வறிக்கை :22.06.2011, அருள்பணி. . ஜாண் குழந்தை

- வரலாற்றாளர்கள் அமர்வு : 15.11.2011

- இறையிலார் அமர்வு : 07.02.2012

- ஆயர்கள், கர்தினால்கள் அமர்வு: 08.05.2012

- அருளாளர் நிலை ஏற்பு : 28.06.2012  (திருத்தந்தை 16-ஆம் பெனதிக்து)

- மறைசாட்சிய அறிவிக்கை : அருளாளர் நிலை அறிவிப்பு : 02.12.2012, நாகர்கோவில், கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ (தலைமை, புனிதர்கள் பேராயம், உரோமை)

. புனிதர் பட்ட திருப்பணிகள்:

2014 ஆம் ஆண்டு, கோட்டாறு ஆயர் பீட்டர் ரெமிஜியுசுக்கு ஓர் ஆச்சரியமான நிகழ்வுபற்றி தகவல் கிடைத்தது: அது என்னவென்றால், தாயின் கருவறையில் உயிரின்றி காணப்பட்ட 7 மாத சிசு ஒன்று மீண்டும் உயிர் பெற்ற நிகழ்வு. அந்த சிசு வயிற்றின் குறுக்கே கிடந்தது. இந்நிலையில் தாய் மிக சோகமுற்றாலும், மறைசாட்சி தேவசகாயத்தின் பரிந்துரைமீது அசையா நம்பிக்கைக்கொண்டு நட்டாலத்திலிருந்து தான் கொண்டு வந்திருந்த மறைசாட்சி தேவசகாயத்தின் வீட்டுக் கிணற்றின் நீரை அருந்தி இறைவேண்டல் செய்தார். ஒரு மணிநேரத்திற்குள் குழந்தை மீண்டும் அசைவதை உணர்ந்து மருத்துவர்கள் உடனே சோதித்துப் பார்க்க குழந்தையின் இதயத் துடிப்பு சீரானதாகவும் குழந்தை உயிரோடிருப்பதும் தெரிய வந்தது. மூன்று மாதத்துக்குப்பின் அந்த சிசு நலமான ஆண் குழந்தையாக சுகப்பிரசவம் ஆனது. மறைசாட்சியின் பெயரை இணைத்துதேவின் ஜோஎன்று பெயர் சூட்டினர்.

இந்நிகழ்வினை உரோமைக்கு உடனே தெரியப்படுத்தினார் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ். அப்படிதான் புனிதர் பட்டத் திருப்பணிகள் தொடங்கினஇதற்கு அருள்பணி. எல்பின்ஸ்டன் ஜோசப் வேண்டுகையாளராகவும், அருள்பணி. ஜாண் குழந்தை துணை வேண்டுகையாளராகவும் நியமிக்கப்பட்டு அனைத்து ஆய்வுகளும் தொடங்கின.

2. புனிதர் நிலை அறிவிப்புத் திருப்பணிகள்

. தொடக்கப் பணிகள்:

- அற்புத நிகழ்வு ஆயரால் அடையாளப்படுத்துதல் : 01.03.2015, ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ்

- வேண்டுகையாளர் நியமனம் : 31.05.2016, அருள்பணி. எல்பின்ஸ்டன் ஜோசப், உரோமை, துணை - வேண்டுகையாளர் : 15.06.2016, அருள்பணி. ஜாண் குழந்தை.

. மறைமாவட்ட ஆய்வுகள்:

- மறைமாவட்ட ஆய்வுக்குழு : 15.06.2016 அருள்பணி. ளு. சாலமோன் (ஆயர் பதிலாள்), அருள்பணி. கூ. தார்சியுஸ் ராஜ், (நீதி நெறியாளர்) னுச. கரோலின் (மருத்துவ நிபுணர்) அருள்பணி. ளு. பெலிக்ஸ் அலெக்சாண்டர் (பதிவாளர்) அருள்சகோதரி. பெலிசியா (மொழி பெயர்ப்பாளர்) திருமதி. ளு. எப்ரேஸ் மேரி (தட்டச்சர்)

- ஆடம்பர தொடக்க அமர்வு : 09.07.2016, ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ்

- ஆடம்பர இறுதி அமர்வு : 24.08.2016, ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ்

. உரோமைத் திருப்பணிகள்:

- மறைமாவட்ட ஆய்வுகள் ஏற்பு :13.01.2017 (புனிதர்கள் பேராலயம், உரோமை)

- மருத்துவ நிபுணர் அமர்வு : 28.02.2019

- இறுதி ஆய்வறிக்கைத் தொகுப்பு : 20.04.2019 அருள்பணி. எல்பின்ஸ்டன் (துணை வேண்டுகையாளர்)

- பெயர்த் தெளிவு : 09.10.2019, ஆயர் நசரேன் சூசை, கர்தினால் ஆஞ்சலோ பிச்சு, புனிதர் பேராயத் தலைவர்

- இறையிலார் அமர்வு : 05.12.2020

- ஆயர்கள், கர்தினால்கள் அமர்வு : 18.02.2021

- புனிதர் நிலை ஏற்பு : 21.02.2021 திருத்தந்தை பிரான்சிஸ்

- கர்தினால்கள் திருத்தந்தையுடன் பேரமர்வு :03.05.2021, உரோமை புனித பேதுரு பேராலயத்தில் புனிதர் பட்ட நிகழ்வு என்ற முடிவு

- 2022 ஆம் ஆண்டு, மே மாதம் 15 ஆம் தேதி, உரோமை மாநகரில் வத்திக்கானில் புனித பேதுரு சதுக்கத்தில் புனிதர் பட்டம்.

21.02.2020 : திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அற்புத நிகழ்வு ஏற்றுக்கொள்ளப்பட்டது. “7 மாத சிசுவின் இதயத்துடிப்பு ஆச்சரியமான விதத்தில் மீண்டும் கிடைக்கப்பெற்று, (படிக்க. பக். 28)  தொடர்ந்து நிலைமை சீரடைந்து, தாய் மற்றும் சேய் இருவருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் சுகப்பிரசவம் நடந்தது. இது முத்திப்பேறு பெற்ற மறைசாட்சி தேவசகாயத்தின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமை ஆகும்”.

முக்கிய இடங்கள்:

நட்டாலம் : பிறந்த வீடு/கிணறு

அவர் பயன்படுத்திய வாள், கோடாரி

பத்மநாபபுரம் அரண்மனை

குளச்சல் வெற்றித் தூண்

உதயகிரிகோட்டை - டிலனாய் கல்லறை

வடக்கன்குளம் - திருமுழுக்குப் பெற்ற இடம்

புலியூர்க்குறிச்சி : முட்டியடிச்சான் பாறை

பெருவிளை : வேப்பமரத்தில் கட்டப்பட்ட இடம்

ஆரல் : முட்டூன்றிச் செபித்த இடம், சுடப்பட்ட இடம், உடல் வீழ்ந்த இடம்

கோட்டாறு புனித சவேரியார் பேராலயம் - மறைசாட்சியின் கல்லறை

வடக்கன்குளம் : ஞானப்பூ கல்லறை

Comment