No icon

Sr. மேரி ஆனந்த் DM

இந்த வாரப் புனிதர்கள்

ஜனவரி  15                   புனித வனத்துப் பவுல்

புனித வனத்துப் பவுல் எகிப்து நாட்டில் 229 ஆம் ஆண்டு பிறந்தார். அன்பிலும், அறிவிலும் சிறந்து விளங்கினார். 15 ஆம் வயதில் பெற்றோரை இழந்தபோது, இறைவனிடம் தஞ்சம் புகுந்தார். வாழ்வின் போராட்டங்களை இறைவனுக்கு அர்ப்பணித்தார். தீசியுஸ் அரசன் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தி வாளுக்கு இரையாக்கியபோது, அரசனிடமிருந்து தப்பி பாலைவனம் சென்றார். பாலைவனத்தில் 90 ஆண்டுகள் தவம் செய்தார். வனத்தில்  விலங்குகளை அன்புச் செய்தார். பழங்களை உணவாக அருந்தினார். காகம் தினமும் ரொட்டித் துண்டுகளைக்  கொண்டு வந்து கொடுக்கும். இவர் பாலைவனத்தில் தவம் செய்து, செபத்திலும் தவத்திலும் வளர்ந்தார். இறைபிரசன்னத்தில் வாழ்ந்த பவுலை இறைதூண்டுதலால் புனித அந்தோனியார் சந்தித்தார். கடவுள் மீது நம்பிக்கைகொண்டு வாழ்ந்த பவுல் 112ஆம் வயதில் இறந்தபோது, அந்தோனியார் சிங்கத்தின் உதவியுடன் கல்லறையில் அடக்கம் செய்தார்.

ஜனவரி  16                   புனித ஜோசப் வாஸ்

புனித ஜோசப் வாஸ் கோவாவில் 1651 ஆம் ஆண்டு, ஏப்ரல் 21 ஆம் நாள் பிறந்தார். தவத்தில் சிறந்து ஏழைகள்மீது அன்பும், கரிசனையும் காட்டினார். புனித அக்குவீனாஸ் குருமடத்தில் சேர்ந்து குருவானார். இலங்கை மன்னர்களின் ஆட்சியில் உரோமன் கத்தோலிக்க குருக்களையும், மக்களையும் துன்புறுத்தினர். ஜோசப் இலங்கையில் கத்தோ­லிக்க விசுவாசம் எடுத்துரைத்தபோது சிறையில் அடைக்கப்பட்டு, 4 ஆண்டுகளுக்குப் பின் விடுதலையானார். பிளேக் நோயால் துன்புற்றவர்களைக் குணப்படுத்தினார். கத்தோலிக்க விசுவாசத்தை இலங்கையில் பரப்புகையில், அம்மக்களின் பண்பாட்டு-கலாச்சாரங்களையும் மதித்தார். இறைவனுக்கும், மனிதருக்கும் உகந்தவராக இறைப்பணி செய்து, 55,000 நபர்களைக் கத்தோலி­க்க திரு அவையில் சேர்த்தார். இலங்கையில் கத்தோ­லிக்கத் திரு அவை புத்துயிர் பெற அயராது உழைத்து, 1711 ஜனவரி 16 ஆம் நாள் இறந்தார்.

ஜனவரி  17                   புனித வனத்து அந்தோனியார்

புனித வனத்து அந்தோனியார் 251 ஆம் ஆண்டு, எகிப்தில் பிறந்தார். இறைவார்த்தையை வாசித்தபோது, வனத்தில் துறவு மேற்கொள்ள விரும்பினார். தன்னொடுக்க முயற்சிகள் வழியாக தியானம் செய்தார். உட­ல் சோதனைகளை செபம், தவம் வழி வெற்றி கண்டார். தனது மனம் உலக இன்பங்கள்மீது ஆவல் கொண்டபோது, திருச்சிலுவையை இறுகப்பற்றி, வெற்றி கண்டார். புனித வனத்து அந்தோனியாரின் தூய வாழ்வை கேள்விப்பட்ட சிலர் அவரிடம் சீடராகச் சேர்ந்தனர். தன்னை சந்தித்த மக்களுக்கு அன்பின் ஆசி மழை பொழிந்தார். நோயுற்றோரை நலமாக்கி, அவர்களின் கவலையையும் போக்கினார். அனைவரும் கிறிஸ்துவை அன்பு செய்து இறையன்பிலும், பிறரன்பிலும் வளர வழிகாட்டிய புனித வனத்து அந்தோனியார், 101 ஆம் வயதில் இறந்து புனிதரானார்.

ஜனவரி   18                  புனித எமி தே வியலார்

புனித எமி­ தே வியலார் 1797 ஆம் ஆண்டு, பிரான்சில் செப்டம்பர் 12 ஆம் நாள் பிறந்தார். தன்னைப் போல அயலானை அன்பு செய்தார். இறைபிரசன்னத்தில் வாழ்ந்து, எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். பாரிஸில் கெய்லாக் ஆலயத்தில் மறையுரை கேட்டபோது, இறைபணி செய்ய தீர்மானித்தார். அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து, உண்மைக்கு சான்று பகர்ந்தார். 1835 ஆம் ஆண்டு, கிறிஸ்து பிறப்பு திருநாள் அன்று புனித வளனார் அருள்சகோதரிகள் துறவு சபையை ஆரம்பித்தார். நோயாளிகளுக்கும், ஏழைகளுக்கும், தேவையில் இருப்பவர்களுக்கும் உதவினார். 40þக்கும் மேற்பட்ட துறவு இல்லங்கள் நிறுவினார். கிறிஸ்துவுக்கு உகந்தவராகவும், ஏற்புடையவராகவும் வாழ்ந்தார். இயேசுவின் அன்பால் தீமையை வெறுத்து, நன்மையை பற்றி உதவிகள் செய்தார். இறைத்திட்டத்திற்கு அடிபணிந்த எமி­ 1856, ஆகஸ்ட் 24 ஆம் நாள் இறந்தார்.

ஜனவரி  19                   புனித நான்காம் கனூட்

புனித நான்காம் கனூட் டென்மார்க் நாட்டில் 1042 ஆம் ஆண்டு பிறந்தார். அரசக் குடும்பத்தில் பிறந்தாலும், ஏழ்மையாக வாழ்ந்து கத்தோலிக்க திருச்சபையை அன்பு செய்தார். தனது தந்தை இறந்தப்பின் ஸ்வீடன் நாட்டிற்கு சென்றார். 1080 ஆம் ஆண்டு, கனூட் டென்மார்க்கின் அரசராக முடிச்சூடினார். அரசர் முதலாம் ராபர்ட் என்பவரின் மகளை திருமணம் செய்து, கத்தோலிக்க விசுவாசத்தில் வளர்ந்தார். திரு அவையின் கட்டளைகளைப் பின்பற்றி, கிறிஸ்துவின் சீடரானார். கத்தோலி­க்க திரு அவையின் மீது மிகுந்த பற்றுகொண்டு, உலகனைத்தையும், ஆண்டவர் முன்பாக அர்ப்பணம் செய்தார். தனக்கு எதிராக செயல்பட்டவர்களை பெருந்தன்மையுடன் மன்னித்து, இறைவனுக்கு உகந்தவராய் வாழ்ந்த கனூட் 1086 ஆம் ஆண்டு, ஜூலை 10 ஆம் நாள் இறந்து புனிதரனார்.

ஜனவரி   20                  புனித பபியான்

புனித பபியான் உரோம் நகரில் 200 ஆம் ஆண்டு பிறந்து, இறைபக்தியில் சிறந்து விளங்கினார். இறைவனுக்கு தன்னை அர்ப்பணம் செய்து, குருவாக அருள்பொழிவு பெற்றார். கிறிஸ்துவின் வார்த்தையை வாழ்வாக்கி, பறைசாற்றிய பபியான் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருச்சபையில் ஒழுங்கு முறைகளை ஏற்படுத்தி பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார். உரோமையை ஏழு மாவட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொன்றுக்கும் திருத்தொண்டர்களை நியமித்தார். பெரிய வியாழன் அன்று திரு எண்ணெய் மந்திரிக்கும் முறையை ஏற்படுத்தினார். இறைமக்களை தேடிச் சென்று உதவினார். நற்கருணை ஆண்டவரை அளவில்லாமல் அன்பு செய்து, கிறிஸ்துவின் பிரசன்னமாக வாழ்ந்த பபியானை பேரரசன் தீசியுஸால் 250 ஆம் ஆண்டு, ஜனவரி திங்கள் 20 ஆம் நாள் கொலை செய்யப்பட்டார்.

Comment