No icon

பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

பொதுக்காலம் 21ஆம் ஞாயிறு

யோசு 24:1-2 15-17, 18, எபே 5:21-32)

திருப்பலி முன்னுரை                                                            அருள்பணி. ஞ ஜான் பால்

“ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.” (யோவா 6:68)

இதோ நான்காயிரம் பேருக்கு உணவு, அதோ ஐயாயிரம் பேருக்கு உணவு என்று இறைவன் இயேசுவின் அற்புதசெயலைக் கண்டு சீடர்களும், யூதர்களும் ஆர்ப்பரித்து ஆண்டவர் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள். அதே இறைவன் இயேசு, இதோ எனது சதையும் இரத்தமும், இதை உண்டுப் பருகி, நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று மொழிந்தவுடன் அவரை இகழ்ந்து பேசி, ஆர்ப்பாட்டம் செய்து அவருக்கு எதிராக முணுமுணுத்து அவரை விட்டு ஓடிப்போனார்கள் அதே சீடர்களும், யூதர்களும். இப்படி உணவிற்காக இறைவனை இகழ்ந்து பேசுவது, அவருக்கு எதிராக முணுமுணுத்து அவரை விட்டு ஓட நினைப்பது யூதர்களுக்கு ஒன்றும் புதிதான காரியம் இல்லை.

ஏனெனில் எகிப்து நாட்டிலே அடிமைகளாய் இருந்தவர்களை, “நானே உங்கள் தந்தை நீங்கள் என் மக்கள்” என்று அழைத்து வந்த இறைவனின் உடனிருப்பை மறந்து உணவிற்காக அவரைவிட்டு ஓட முணுமுணுத்தார்கள், முயற்சித்தார்கள். வாழ்வு தந்த இறைவனை பற்றிக்கொள்ளாமல், வாழக்கிடைத்த பொருட்களை பற்றிக்கொள்ளத் தேடி ஓடினார்கள். இவ்வாறு நிறைவயிறுக்காக ஆண்டவரைப் பின்தொடர்ந்தவர்கள் பாதியில் ஓடிப்போனார்கள், நிலைவாழ்விற்காய் பின்தொடர்ந்தவர்கள், “ஆண்டவரே வேறு யாரிடம் போவோம்” என்று சொல்லி ஆண்டவரைப் பற்றிக்கொண்டார்கள்.

சிந்திப்போம்! இன்று நாம் எதற்காக இறைவனைத் தேடி வந்திருக்கிறோம்? நம் வாழ்வு அவரே என்பதற்காகவா?அல்லது நாம் வாழ மூலதனங்களை தருவார் என்பதற்காகவா? நிறைவயிறுக்காகவா? அல்லது நிலைவாழ்விற்காகவா? இக்கருத்iதை தியானித்தவர்களாய் இப்பலியில் பங்குபெறுவோம்.

முதல் வாசக முன்னுரை:

யோசுவா இஸ்ரயேல் குலங்களை நோக்கி உங்கள் மூதாதையர் உண்மைக்கடவுளை அறிவதற்குமுன் வேற்று தெய்வங்களை வணங்கினார்கள் என்று சொல்ல இஸ்ரேயல் மக்கள் எங்களை விடுவித்த உண்மைக்கடவுளை மட்டுமே நாங்கள் வழிபடுவோம் வேற்று தெய்வங்களை தூக்கி எறிவோம் என்று கூறும் அவர்களின் நம்பிக்கைமிகு வார்த்தைகளை இம்முதல் வாசகத்தில் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:

ஆண்டவர் இயேசுவே திருஅவைக்கு தலையாகவும் திருஅவையின் உடலுக்கு மீட்பராகவும் இருக்கிறார். அதுபோல கணவன் மனைவிக்கு தலையாகவும், மனைவியை வெறுத்து ஒதுக்காமல் அவரை தன் சொந்த உடலாகவும் கருதி அன்பு செய்ய வேண்டும் என்று கூறும் இரண்டாம் வாசகத்தை கேட்போம்.

மன்றாட்டுக்கள்:

1) எங்கள் விண்ணகத்தந்தையே! உம் திருமகனின் தலையாக கருதப்படும் திருஅவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் மற்றும் பொதுநிலையினர் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரே நோக்கோடு உமது மந்தைகளை ஒன்று சேர்த்து உம்மிடம் அழைத்து வந்து சேர்த்திட வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2) எங்கள் பரம தந்தையே! நாட்டை ஆளும் தலைவர்கள் உம் திருமகனைப்போல தேவையில் இருக்கும் மக்களை சிறப்பாக பராமரிக்கவும் எல்லா மக்களையும் ஒரே மனதுடன் அன்பு செய்து நல்வழிகாட்டி நல்லாட்சி புரிந்து வழிநடத்த வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3) எங்கள் வானகத்தந்தையே! இக்கொரோனா பெருந்தொற்றினால் அவதியுறும் எங்கள் அனைவரையும் ஆசிர்வதியும். அடிப்படை வாழ்வாதாரங்களோடும், அன்றாட பிரச்சனைகளோடும், அனுதினமும் போராடிக்கொண்டிருக்கிறோம். எங்களின் இந்நிலைமாறி இயல்பு நிலைக்கு திரும்பிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4) எங்கள் விண்ணகத்தந்தையே! நாங்கள் அனைவரும் அனுதினமும் எங்கள் நம்பிக்கை வாழ்வில் வளர்ச்சியடைய உம்மை வேண்டுகின்றோம். அற்புதங்கள், அதிசயங்கள் நிறைவயிறுக்காக உம்மை தேடாமல், நிலைவாழ்விற்காக உம்மை தேட வேண்டுமென இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Comment