No icon

பொதுக்காலம் 22 ஆம் ஞாயிறு (இச 4:1-2,6-8, யாக் 1:17-18,21-22,27, மாற் 7:1-8,14-15,21-23)

 

பொதுக்காலம் 22 ஆம் ஞாயிறு

(இச 4:1-2,6-8, யாக் 1:17-18,21-22,27, மாற் 7:1-8,14-15,21-23)

அருள்பணி. P ஜான் பால்

திருப்பலி முன்னுரை

நாமே உன்கடவுள், பெற்றோரை மதி, அயலானை அன்புசெய் என்று கடவுள் தந்த கட்டளைகளை தூக்கி எறிந்துவிட்டு, கைகளை கழுவு, கதிர்களை கொய்யாதே, யூதர் அல்லாதவரோடு பழகாதே அப்போதுதான் கடவுள் தரும் வாழ்வை பெற முடியும் என்று சொல்லி மக்களை ஏமாற்றிய பரிசேயரை, சதுசேயரை இறைவன் இயேசு சாடுகிறார். கடவுள் விரும்புவது அகத்தையே தவிர புறத்தை அல்ல; கடவுள் பார்ப்பது ஆன்ம சுத்தத்தையே அன்றி; வேறெதுவுமில்லை என்பதை திண்ணமாய் கூறுகிறார்.

தொடக்க நூலில் வாசிக்கிறோம், கடவுள் தாம் படைத்த அனைத்தையும் நல்லதெனக் கண்டார். அப்படி என்றால் தீயது எங்கிருந்து வந்தது? இதற்கான விடையை இறைவன் இயேசு நற்செய்தியில் தருகிறார் - தீயனவாகிய அனைத்தும் மனித உள்ளத்திலிருந்தே வருகிறது. காரணம், கடவுளின் கட்டளைகளை கைவிட்டு மனித கோட்பாடுகளை பின்பற்றியதே.

சிந்திப்போம்! கடவுள் தந்துள்ள கட்டளைகளில் ஏதாவது ஒன்றை இதுவரை நாம் பின்பற்றி வந்திருக்கிறோமா? அல்லது மனித மரபை பின்பற்றுவதில் இன்பம் காண்கின்றோமா என்ற சிந்தனையோடு இப்பலியில் பங்குபெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

தந்தைக்கடவுள் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களை கீழ்ப்படிந்து வாழ அறிவுறுத்துகிறார். நான் உங்களுக்குக் கொடுக்கும் கட்டளைகளில் எதையும் சேர்க்காமல், நீக்காமல் கடைபிடியுங்கள். அப்படி கடைபிடித்தால் பிற இனத்திற்கு முன் ஞானமும், அறிவும் உள்ள இனமாக இருப்பீர்கள் என்று கூறும் இறைவனின் குரலை இவ்வாசகத்தின் வழியாக கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

நல்லது அனைத்தும் கடவுள் ஒருவரிடமிருந்தே வருகிறது. அத்தகைய நல்லவரான கடவுள் தரும் வார்த்தைகளை கேட்டு அதன்படி நடக்க வேண்டும். அவரின் கண்களின்முன் நாமும் மாசற்றவர்களாய் இருக்க, துன்பத்தில் இருப்போருக்கு உதவிட வேண்டும் என்று கூறும் இவ்வாசகத்தை கேட்போம்.

மன்றாட்டுக்கள்

1. எங்கள் விண்ணகத்தந்தையே! உம் திருஅவையை வழிநடத்துவோர் அனைவரும் உம் மக்களுக்கு நீர் தந்துள்ள கட்டளைகளை வாழ்வில் எடுத்துரைக்கவும், மனித மரபுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், உம் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விண்ணக வாழ்வை நோக்கி வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எங்கள் அன்பு தந்தையே! நாட்டை ஆளும் தலைவர்கள் மனிதன் உருவாக்கிய மரபுகளின்படி மக்களை பிரித்து ஆளாமல், நீர் தந்துள்ள கட்டளையின்படி அனைவரையும் மதித்து, நேசித்து, சமமாக நினைத்து, மாசற்ற உள்ளத்தோடு ஆட்சி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்கள் பரம தந்தையே! இந்த உலகில் தீமைகள் உருவாக எங்கள் உள்ளமே காரணம். எங்களின் உள்ளம் நீர்தங்கும் இல்லமாக மாற, உம் வார்த்தையை கேட்பதோடு நின்றுவிடாமல் அதன்படி வாழ்கிற மக்களாக இருக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எங்கள் வானகத்தந்தையே! எம் பங்கில் உள்ள ஒவ்வொருவருக்காகவும் உம்மை வேண்டுகிறோம். நாங்கள் அனைவரும் உம் மக்கள் என்ற ஒரே நோக்கோடு வாழவும், உலக மாயைகளின் அடிப்படையில் பிரிந்து போகாமல், ஒரே குடும்பமாய் உம்மை நோக்கி வந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

5. எம்மைப் படைத்து பராமரிப்பவரே இறைவா! நாங்கள் வாழும் இந்தப் பூமியின் உயிர்ச்சமநிலை பாதிக்கப்பட்டு ஆங்காங்கே இயற்கைப் பேரழிவுகள் ஏற்படுவதை நாங்கள் உணர்ந்து, வருங்கால தலைமுறைக்கு இவ்வுலகைவிட்டுச் செல்வதற்கான சுற்றுச் சூழல் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Comment