No icon

சடங்குகள், சம்பிரதாயங்கள்

மறையுரை: 29.08.2021

சடங்குகள், சம்பிரதாயங்கள்

ஒவ்வொரு இனத்திலும் மதத்திலும் சடங்குகள் சம்பிரதாயங்கள், மரபுகள், பழக்கவழக்கங்கள், பண்பாடுகள் நிறைந்துள்ளன. பலமரபுகள் ஒரு வரலாற்றுப் பின்புலத்தில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றும் நோக்குடன் நிறைவேற்றப்பட்டவை. அவை உருவாக்கப்பட்ட ஆழ்ந்த நோக்கத்தை இழந்து வெற்றுச் சடங்காக மாறிவிடும் வேளையில் அவற்றை மறுஆய்வுக்கு உட்படுத்துவது நமது கடமையாகும். சமுதாய முன்னேற்றத்திற்காகவும் மக்களின் அமைதியான வாழ்வுக்காகவும் உருவாக்கப்பட்ட சடங்குகள் அவர்களை அடிமைகளாக்கும் கொடுங்கோலனாக மாற அனுமதிக்கக்கூடாது. மனிதர்கள் உருவாக்கும் மரபுகள் கடவுள் வகுத்த திட்டங்களுக்கு அடிப்படையில் முரண்பட்டதாக செயல்படக் கூடாது.  அவற்றில் தேவையில்லாத கூடுதல்கள் அல்லது குறைத்தல்கள் மக்களுக்கு பெரும் சுமையாக மாறிவிடலாம். மனிதமரபுகள் கடவுளின் கட்டளைகளுக்குக் கட்டளை விதிக்கமுடியுமா? அல்லது மனிதப் புரிதலுக்காகக் கடவுளின் அன்புக் கட்டளையைத் தியாகம் செய்யலாமா? கடவுள் தரும் கட்டளைகள், கட்டுப்பாடுகள் அவரது அன்பின் வெளிப்பாடுகள் (தாய் தந்தை கொடுக்கும் கட்டளைகளும் அன்பின் வெளிப்பாடுகளே). மனித இயக்கங்கள் அவற்றைச் சட்டைகள் போல் மாற்றுவது தவறு. கடவுள் சார்பாகப் பேசும் உரிமை மனிதர்களுக்கு இல்லை. இயேசுவின் காலத்தில் தங்களைப்  புனிதர்களாகக்  கருதிய பரிசேயர்கள் பல (தேவையற்ற) மரபுகளை உருவாக்கி அவற்றை சாமானியர்கள் மீது திணித்தனர். பரிசேயர்கள் கடவுள் உறையும் ஆலயத்தைவிட புனிதர்களாகத் தங்களைக் கருதியது முற்றிலும் தவறாகும். அவர்களால் உருவாக்கப்பட்ட அர்த்தமற்ற சடங்குகளை இயேசு அவர்களின் முன்னே உடைக்கின்றார். அவர்களின் வெளிவேட வாழ்வைத் தோலுரிக்கின்றார். உள்ளம் கழுவப்பட வேண்டும். அது அன்பால் நிரம்பி வழியும் ஆலயமாக மாற வேண்டுகின்றார். உடல் தூய்மை தண்ணீரால் உண்டாகும், அகத்தூய்மை உண்மை பேசுவதாலும், நற்செயல்களாலும் உண்டாகும் என்று அறிவுறுத்துகின்றார்.

பொருளற்ற தூய்மைச் சடங்குகள்

பலி ஒப்புக்கொடுக்கச் செல்லும் குருக்கள் தூய்மையாக இருக்கவேண்டும் என்பது லேவிய சட்டமாகும் (விப 30:17-21, 40:12). பக்தியுள்ள சில யூதர்களும் இந்தத் தூய்மைச் சடங்கைப் பின்பற்றியிருக்கலாம். ஆனால் அன்றைய பரிசேயக் கூட்டங்கள் அவற்றைச் சாதாரண மக்களும் பின்பற்ற கட்டாயப்படுத்தினர். வெளியில் சென்று வீட்டுக்குவந்தவுடன் ஒரு வாளியில் தண்ணீர் எடுத்து சோப்புப் போட்டு நன்றாகக் கழுவ வேண்டும் என்பது இன்றைய நற்செய்தியில் கூறப்படும் புரிதல் அல்ல. ஒரு கையில் தண்ணீர் எடுத்து மற்றொரு கையில் ஊற்றி கழுவ (நனைக்க) வேண்டும் என்பதே வாதத்தின் மையக்கருத்து. தாங்கள் வாங்கி வந்த பொருள்களையும் அவர்கள் அவ்வாறே சுத்தம் செய்தனர். கொஞ்சம் தண்ணீர் படுவதனால் எதுவும் முழுமையாக தூய்மை அடைந்து விடுவதில்லை. வெள்ளையுடை உடுத்துவதால் உள்ளம் முழுவதும் பரிசுத்தமாகி விடுவதில்லை. காவி உடுத்தும் அனைவரும் முற்றும் துறந்த முனிவர்கள் அல்ல. போதிப்பதால் மட்டும் யாரும் புனிதனாகி விடுவதில்லை. கடவுள் அனைத்தையும் தூய்மையுள்ளதாகப் படைத்திருக்க சிலவற்றை மற்றும் சிலரைத் தீட்டு என்று யூதர்கள் கூறினர். உடல் குறையோடு பிறந்தவர்களைக் கோவிலில் நுழைய தடைவிதித்தனர் (மத் 21:12). உடல் ஊனமுற்ற குருக்களையும் வழிபாடுகள் நடத்த அனுமதிக்கவில்லை. அடுத்தவர்கள் மீது குற்றம் கண்டுபிடிப்பது உள்ளத்தின் ஊனத்தைக் காட்டுகின்றது. பொருளற்ற அத்தனை மரபுகளை உடைத்து நொறுக்கும் இயேசு எந்தவெற்றுச் சடங்கையும் விட்டு வைக்கவில்லை.

தொலைவில் இருக்கும் உள்ளம்

அவர்களது சட்டத்தின் வெறுமையைச் சுட்டிக்காட்ட - வெளிப்புறத்தில் அனைத்தையும் கடைபிடித்துக் கொண்டு உள்ளத்தைத் தொலைவில் வைத்திருக்கும் - எசாயாவின் இறைவாக்கைக் கையாளுகின்றார் இயேசு. வெளியளவில் மட்டுமே சடங்குகளை நிறைவேற்றுவது வெற்றிடங்களை வழிபடுவது போலாகும். அல்லது அது கடவுளையே ஏமாற்றும் செயலாகும். வெற்றுச்சடங்குகள் கடவுளுக்கோ மனிதருக்கோ செயலாற்றுவதில்லை. அவை ஒருவரின் நேரத்தையும் ஆற்றலையும் வீணடித்து விரயம் செய்கின்றன. உடலும் மனமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல, உடல் சார்ந்தது அனைத்தும் மனத்தையும், மனம் சார்ந்தது அனைத்தும் உடலையும் வெகுவாகப் பாதிக்கின்றது. உடலை அழகுபடுத்திவிட்டு மனதைக் குப்பையாக்குவது முரண்பட்ட வாழ்வுக்கு வழியமைக்கின்றது. மனதில் கள்ளத்தை வைத்துக் கொண்டு, ஆடைகள் முழுவதையும் இயேசுவின் படத்தாலும், விவிலிய வார்த்தைகளாலும் நிரப்பி வைப்பது உண்மையான பக்திமார்க்கமல்ல. முரண்பாடுகள் நிறைந்து வாழ்க்கைகால ஓட்டத்தில் ஒருவரின் ஆளுமையைப் பாதித்து எல்லாவிதமான உடல் நோயையும் கொண்டுவரும். இரட்டை வேட வாழ்வு நடத்தும் ஒருவர் தனக்குள்ளே சண்டையிடுகின்றார். அவர்கள் கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கின்றனர். அதனால் ஆசீர்கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

இரட்டை வேட வாழ்வு

“ஒருவன் மனது ஒன்பதடா, அதில் ஒளிந்துகிடப்பது எண்பதடா, உருவத்தை பார்ப்பவன்  மனிதனடா, அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா,” என்ற திரைப்படப் பாடல், கடவுள் உள்ளத்தை பார்த்து தீர்ப்பிடுகின்றார் (1 சாமு 16:7) என்ற உண்மையை வலியுறுத்துகின்றது. “உள்ளம் என்பது ஆமை. அதில் உண்மை என்பது ஊமை, சொல்லில் வருவது பாதி, நெஞ்சில் தூங்கிகிடப்பது மீதி,” என்ற வரிகள் போல் ஒருவர் முற்றிலும் இரட்டைவேட வாழ்வு நடத்தலாம். ஒரு கோவிலுக்குள் வைத்து ஆசிபா என்ற ஒரு இளம் குருத்தை பலஆண்கள் பல நாள்களாக சீரழித்த கொடுமையை அந்த கடவுளும் மன்னிக்கப் போவதில்லை. புறத்தில் அலங்கரிக்கப்பட்ட உடலின் உள்ளே இருக்கும் மனம் கொடுமைக் குணங்கள் நிறைந்த குப்பைக் காடாகவும் இருக்கலாம். கோவிலை அடிக்கடி சுற்றி வருபவர்கள் மோட்சத்தின் வாயிலில் பல நாள்கள் காத்துக்கிடக்கலாம். அழுக்கு நிறைந்த உள்ளம் அழகிய ஆடைகளால் மூடப்பட்டுக் கிடக்கலாம். அன்றாடம் பூசை நடத்தும் பூசாரிகூட தமது கடவுள் நம்பிக்கையில் தடுமாறலாம். திருடன் வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதால் பயன் என்ன? கொள்ளைக்காரன் வருபவர், போகிறவர்களுக்கு பொருளைத் தருவதன் பயன் என்ன? பாகற்காயை உலகின் அத்தனை புனித நதிகளில் குளிப்பாட்டினாலும் அதன் கசப்புச் சுவை நீங்கப் போவதில்லை. பாவமே உருவான இதயம் தீயில் வைத்து சுடப்பட்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் (எசா 1:16-17, 25). வள்ளுவர் பெருமான், மழித்தலும் நீட்டலும் வேண்டா- உலகம் பழித்தது ஒழித்து விடின் (280) என்று இரட்டைவேட வாழ்வைக் கண்டனம் செய்கின்றார்.

உள்ளிருந்து வருவதே தீட்டுப்படுத்தும்

இயேசு உண்மையாகவே தீட்டுப்படுத்துவது எது என்பது பற்றியும் நற்செய்தியில் பேசுகின்றார். தூய்மை மனித உள்ளத்தில் இருக்கின்றது. கழுவப்படாத கைகள் தூய்மையற்றது என்றால் கழுவப்படாத இதயத்தை என்னவென்று சொல்வது. நல்லவர்கள் எந்த சூழ்நிலையிலும் நல்லவர்கள் தான். எதை, எப்படி, எவ்வளவு உண்டாலும் நல்லது அல்லது கெட்டதை மனதே தீர்மானிக்கின்றது. மனித நல்வாழ்வுக்காக அறிஞர்களால் உருவாக்கப்பட்ட கணினி, மின்சாதனப் பொருள்கள், இன்டர்நெட் போன்றவற்றின் பயன்பாடு தனிப்பட்ட மனிதர்களின் மனநிலையைப் பொறுத்தது. காய்கறிகளை வெட்டுவதற்காக உருவாக்கப்பட்ட கத்தியைக் கொலை கருவியாக்குவது தனிமனிதர்களே. மனித நல்வாழ்வுக்காக உருவாக்கப்பட்ட அணுசக்தியை அணுகுண்டாக மாற்றியது மனிதத் தீக்குணங்களே. உள்ளத்தில் நஞ்சை வைத்துக்கொண்டு சர்க்கரை வார்த்தைகளை உதிர்ப்பதும் மனித சிந்தனைகளே. பலரின் உரிமைச் சொத்தாகத் தரப்பட்ட படைப்பைத் தமக்காக மட்டும் பயன்படுத்தத் துடிப்பதும், அதில் கலப்படம் செய்து மற்றவர்களின் வாழ்வை நஞ்சாக்குவதும் மனித மனங்களே. மனிதர்கள் படைப்புப் பொருள்களை பொறுப்போடு கையாளும்போது அனைத்தும் தூய்மையாக இருக்கும். இன்றைய நற்செய்தியில் கூறப்பட்டுள்ள தீக்குணங்கள் அனைத்தும் மனித மனங்களில் தான் கருவாகி உருவாகி, பலரின் வாழ்வைப் பாழ்படுத்துகின்றன. இந்தத் தீக்குணங்கள் நன்மையான அனைத்தையும் எரித்து சாம்பலாக்கிக் கொண்டே செல்லும். நல்லவர்கள் இருக்கும் இடம் மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் நந்தவனமாகிவிடும். ஆனால், தீயோர் மோட்சத்தையும் நரகமாக்கிவிடுவர். கள்ள உள்ளம் கொண்டவர்கள் அனைத்திலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பர். அவர்கள் எதிலும் நிறைவு காண்பதில்லை. அன்பில்லா ஒவ்வொன்றும் தீமையானதே. அன்பற்ற சூழலில் தீமையான எண்ணங்கள் உருவாகின்றன. தீமையான வார்த்தை மற்றும் செயல்களின் அன்பு காணப்படுவதில்லை. தீக்குணங்களில் மூழ்கிக்கிடப்போர் தங்களின் வாழ்வை நினைத்துப் பரிதாபப்படும் காலம் வரும். சாதனையாளர்கள் அனைவரும் தம் வாழ்வைக் கட்டுக்கோப்பாக வடிவமைத்தவர்களே என்பதே எதார்த்தம். அவர்களது உடலும் மனமும் சாதிப்பதிலே மூழ்கிக் கிடக்கின்றது. தேவையற்ற குணங்கள் அவர்களின் உயரிய நோக்கங்களைப் பாழ்படுத்த அனுமதிப்பதில்லை.

பிறரன்பு தரும் பெரும்பயன்

நன்மையானது அனைத்தும் மேலிருந்துவரும் (யாக் 1:17). நன்மை செய்வோர் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்துள்ளனர். கோவிலுக்குள் நுழைவோர் தங்களுக்கும் இரக்கம் காட்ட வேண்டும் என்பதற்காகவே தர்மம் எடுப்போர் பலர் கோவில் வாசலில் காத்துக் கிடக்கின்றனர். சிலைகளுக்குப் படைக்கும் உணவை இல்லாதவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது கடவுளே மகிழ்ச்சி கொள்வார். ஊர் முழுவதையும் கொள்ளையடித்து  உண்டியலில் போடும் பணம் கடவுளின் நிறையாசீரைக் கொண்டுவருமா? அது பாவமல்லவா? (ஆமோ 4:4). ஒரே கடவுளை வணங்கும் இருவர் எதிரிகளாகச் செயல்பட முடியாது. கடவுளின் வார்த்தைகளை உள்ளத்தில் கேட்டு இதயத்தில் இருத்தும் வேளையில் அது உள்ள அழுக்குகளைக் கழுவித் தூய்மையாக்கும். அடுத்தவரை வெறுப்பதே கொலைக்குச் சமம், தவறான கண்ணோட்டத்தோடு ஒருபெண்ணைப் பார்ப்பதே விபச்சாரம் செய்வதாகும்   என்று மலைப்பொழிவில் இயேசு எடுத்துரைக்கின்றார். போர்கள் பலபுரிந்து மாசற்றோரின் இரத்தத்தைச் சிந்தியமையால் தாவீது கோவில் கட்ட கடவுள் தடை விதிக்கின்றார்.

போலிகளின் ஊர்வலம்

சினிமாவில் நடிக்கும் வேடதாரிகள் தியாகத் தலைவர்கள் போல் வலம் வரும் கலிகாலம் இது. நடிப்பு மதிப்பீடாகிவிட்டது. வெளிவேடம் ஏமாற்று வேலை என்று தெரிந்தும் அதைப் பின்பற்றும் கூட்டம் அதிகமாகிவிட்டது. அரைகுறை ஆடை உடுத்துவோர் காந்தியின் வாரிசுகளாகத் தங்களைக் கருதுகின்றனர். இடுப்பில் கத்தி - கையில் செபமாலை என்பது சிலரின் தத்துவம். நாம் பங்கெடுக்கும் திருப்பலி, நவநாள், திருயாத்திரை, பக்திச்சடங்குகள் எவ்வளவு தூரம் நம்மைக் கடவுள் மனிதர்களாக உருவாக்கியுள்ளன என்பதைத் திறனாய்வு செய்வது முக்கியமாகும். பெற்ற தாயைக் கண்டுகொள்ளாது வேளாங்கண்ணிக்குத் திருயாத்திரை மேற்கொண்டு பலருக்கு அன்னதானம் கொடுப்பதால் வரும் பயன் என்ன? வெள்ளையாக உடுத்திவிட்டால் கள்ளம் நிறைந்த உள்ளம் தூய்மையாகிவிடும் என்பது பொய் தானே? கொடுமைக்குப் பெயர்போன தலைவன் கொள்கைப் பற்றிப் பேசிப் பயன் என்ன? வெள்ளிக்கிழமை விரதம் இருப்பவர்கள் சனிக்கிழமை சண்டைபோடுவது தேவையா?

எவ்வளவுநேரம் செபிக்கின்றோம் என்பதை விடுத்து எப்படி செபிக்கின்றோம் என்று சிந்தனை செய்வோம். நாம் பங்கெடுக்கும் சமயசடங்குகள் அனைத்தும் ஆன்மாவை அலங்கரிக்கும் அணிகலன்களாகட்டும். இன்றைய முதல் வாசகத்தில் வருவதுபோல் கடவுளின் கட்டளைகளை முழுமையாகவும் சரியாகவும் கடைபிடிப்போம். கடவுளைவிட புனிதனாகத் துடிப்போரின் வீண் வாதங்களிலிருந்து விலகிநிற்போம். நாம் நிகழ்த்தும் சடங்குகளின் ஆழ்ந்த பொருளைப் புரிந்துகொண்டு செயல்படுவோம். குற்றம் இல்லாத மனிதர்கள் கோவில் இல்லாத இறையடியார்கள் என்று உணர்வோம்.

Comment