No icon

அருள்பணி. P. ஜான் பால்

தவக்காலம் மூன்றாம் ஞாயிறு விப 3:1-8 அ, 13-15, 1கொரி 10:1-6,10-12, லூக்13:1-9

திருப்பலி முன்னுரை

நம் ஆண்டவரின் பொறுமையை மீட்பு என கருதுங்கள்” (2பேது 3:15). நாம் அனைவரும் மனமாற்றம் அடைந்து, நம் தந்தைக் கடவுளிடம் திரும்ப வேண்டும். நம்முடைய வருகைக்காக நம் இறைவன் பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கிறார் என்பதை தவக்காலத்தின் இந்த மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை நமக்கு எடுத்துரைக்கின்றது. மனம் மாறாவிட்டால் நீங்களும் அப்படியே அழிவீர்கள் என்ற வார்த்தையை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து இன்று நமக்குத் தருகிறார். அழிவு என்பது ஏதோ இவ்வுலகில் நிகழ்கிற இறப்பு அல்ல; மாறாக, இறுதித் தீர்வையின்போது, நாம் பெற போகிற முடிவில்லா தண்டனையைக் குறிக்கிறது. கனிதராத மரம் இந்த பூமிக்கு பாரமான ஒன்று. அதனால் பலன் ஏதும் கிடையாது. அது வெறுமனே இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு போடப்பட்ட எரு, ஊற்றப்பட்ட தண்ணீர், அதை பண்படுத்த செய்யப்பட்ட வேலை, அதற்கான நேரம், உழைப்பு என அனைத்துமே வீணாய் போகிறது. நம் வாழ்க்கையும் இவ்வாறு தான். நாம் மனம் மாறாவிட்டால், ஆண்டவரின் வார்த்தைக்கு ஏற்றவாறு வாழாவிட்டால், நாமும் பூமிக்கு பாரமாகவே கருதப்படுவோம். கனிதராத அந்த மரத்தை அழிப்பதற்கான கால அவகாசத்தை, இறைவன் தள்ளிப்போடுகிறார். அது பலன் தந்து வாழ, மேலும் ஒரு வாய்ப்பைத் தருகிறார். இதே வாய்ப்பை, இதே கால அவகாசத்தை இறைவன் நமக்கும் தருகிறார். நாம் மனம் மாறி அவரிடம் திரும்பி வருவோம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆகவேநம் இறைவனின் நம்பிக்கைக்கு ஏற்றவர்களாக வாழ, மனம் மாறி அவரிடம் திரும்பிச் செல்லக் கூடிய வரம்வேண்டி இத்திருப்பலியில் பக்தியோடு மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

அடிமை வாழ்விலிருந்து தன் மக்களை மீட்டெடுக்க தந்தை கடவுள் விரும்புகிறார். அப்பணிக்காக மோசேவை தேர்ந்தெடுக்கிறார். தன் மக்களிடம் சென்று, இருக்கின்றவர் நானே என்பவர் உங்களை மீட்க என்னை உங்களிடம் அனுப்பி வைத்துள்ளார் என்று சொல் எனக் கூறும் இறைவனின் வார்த்தைகளை இம்முதல் வாசகத்தில் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

மோசேவால் வழிநடத்தப்பட்ட மக்கள் கடலையும், பாலைவனத்தையும் கடந்து சென்றனர். வானத்து மேகம் அவர்களுக்கு வழிகாட்டியது. இவ்வாறு, மேகத்தாலும், கடலாலும் திருமுழுக்குப் பெற்று ஆண்டவரோடு இணைக்கப் பெற்றார்கள் என்று கூறும் இவ்விரண்டாம் வாசகத்தைக் கேட்போம்.

மன்றாட்டுகள்

1. எங்கள் அன்புத் தந்தையே! உம் திரு அவையும், அதன் திருப்பணியாளர்களும் உம் மக்களை நல்ல கனித் தரக்கூடிய மனிதர்களாக மாற்றி, உம் இறையரசை நோக்கி வழிநடத்த வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்கள் வானகத் தந்தையே! எம் நாட்டின் தலைவர்கள், நீர் தேர்ந்தெடுத்த தலைவர்களைப் போல, எங்களை விடுதலைப் பாதையை நோக்கி வழிநடத்திட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்கள் பரம தந்தையே! எங்கள் ஞான மேய்ப்பர்களின் வார்த்தைகளுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து வாழவும், அவர்கள் எடுக்கிற எல்லாவிதமான முயற்சிகளுக்கும் நாங்கள் எங்கள் ஒத்துழைப்பை தந்திடவும், வரமருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்கள் விண்ணக தந்தையே! உமது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, நல்ல கனித் தரக்கூடிய நல்ல மனிதர்களாக நாங்கள் வாழ்ந்து, நீர் தரும் முடிவில்லா பேரின்ப வாழ்வை நாங்கள் பெற்றிட வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

5. இரக்கம் மிகுந்த தந்தையே! உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து, தன்னந்தனியாய் தவித்துக் கொண்டிருப்போருக்கு, நீரே அடைக்கலமாய் இருந்து, வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

Comment