No icon

வரமா? சாபமா?

தேசியக் கல்விக்கொள்கை வரைவு - 2019

ஓர் அழகான சுவையூட்டப்பட்ட ஐஸ் கிரீம்.  ஆனால் விஷம் தடவப்பட்ட ஐஸ் கிரீம்.  
விஷம் தடவப்பட்ட ஓர் ஐஸ் கிரீமை வரமா சாபமா எனக் கேள்வி கேட்டுக் கொண்டிருக்க முடியுமா நண்பர்களே!!! 
இன்றைய கல்வியில் நிலவும் அத்தனை பிரச்சினைகளையும் அப்பட்டமாக ஏற்றுக்கொள்ளும் இந்த வரைவு, அதற்குப் பரிந்துரைக்கும் தீர்வுகள் அனைத்தும் இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைத்து ஆரிய - சமஸ்கிருத ஒற்றைப் பண்பாடு,  வட - இந்தி  இனத்தின் ஆதிக்கம், பன்னாட்டு-இந்தியப் பெரு முதலாளிகளுக்குத் தேவையான படிப்பாளிகளை உருவாக்குதல்,  அதற்கு ஏற்ற அதிகாரத்தை இந்திய அரசின் கைகளில் குவித்தல் என்கிற மைய அரசின் நோக்கத்தை நிறைவு செய்வதற்காக முன் வைக்கப் பட்டிருப்பதுதான் 484 பக்கங்கள் உள்ள தேசியக் கல்விக் கொள்கை வரைவு - 2019. 
சுருங்கக் கூறின், மக்களின் நலனுக்காகக் கொள்கை வகுக்கப்படவில்லை,  மாறாக நாட்டை மீண்டும் காலணி ஆதிக்கத்திறகு இட்டுச் செல்லும் கொள்கையாகவே இது அமைந்துள்ளது.  
இயற்கைக்கு முரணாக.... 
தேசிய அளவில் ஒரு கல்விக் கொள்கை என்பதே அபத்தமானது என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியா ஒரு தேசமல்ல.. மாறாக பல தேசங்களின் கூட்டு (ரniடிn) என்கிற அரசியல் காரணத்தையும் தாண்டி இது இயற்கை நியதிகளுக்கே முரணானதாக இருப்பதை நாம் உணர வேண்டும்.  தமிழகத்தில் விளையும் தென்னை, நெல் போன்ற பயிர்கள் டில்லியில் விளைவதில்லை. காஷ்மீரில் விளையும் ஆப்பிள் தமிழகத்தில் விளையாது.  ஏனெனில் பயிர்கள் அந்தந்த மண்ணைச்சார்ந்தவை,  அங்கு
நிலவும் தட்ப - வெப்ப சூழலைச் சார்ந்தவை.  அங்ஙனமே குழந்தைகளும் மண் சார்ந்து,  அங்கு நிலவும் மொழி,  கலாச்சார, பண்பாடு சார்ந்தே வளர்ச்சி பெறுகிறார்கள். அவர்களின்  வளர்ச்சிக்கு வழிகாட்டும் பல்வேறு கூறுகளில்
ஒன்றான கல்வியும் இவைகளைச் சார்ந்தே அமைக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் ஒரே விவசாயம், ஒற்றைப் பயில எனக் கொள்கை வகுத்து எத்தனை முயற்சி செய்தாலும் வட இந்தியப் பயிர்களை தென் இந்தியாவில் விளைவிக்க இயலாது. ஏனென்றால் அது இயற்கைக்குப் புறம்பானது, முரணானது. அங்ஙனமே நாடு முழுவதும் ஒற்றைக் கல்விக்கொள்கை வகுத்து குழந்தைகள் வளர்ச்சிக்கு  உதவிட முடியும் என்கிற எண்ணமே இயற்கைக்கு எதிரானது. அபத்தமானது.  
ஒருமுறை கல்வி பற்றிய கருத்தரங்கு நடத்திக்கொண்டு இருந்த நான் அங்கிருந்தவர் களிடம்  
"ஒரு குழந்தை
பள்ளிக்கு  வருவது
அவனாகிப் போகவா? 
மற்றவர் போல் ஆகவா?" என்றொரு கேள்வியை முன் வைத்தேன்.  அங்கு இருந்த அனைவருமே "அவனாகிப் போக " என்று ஒருமித்து பதில் தந்தனர். ஒவ்வொரு குழந்தையிடமும் இருக்கும் தனித்தன்மை வெளிப்பட வாய்ப்புத் தராமல் எல்லா குழந்தைகளையும் ஒரேமாதிரி உருவாக்க முனைவது படைப்பாற்றலுக்கு எதிரானது மட்டுமல்ல மாறாக அந்தப் பரமனுக்கே எதிரான பாவமும் ஆகும் என நான் எடுத்துரைத்த போது அனைவரும் அதை ஆமோதித்தனர். ஒரு வகுப்பறையில் இருக்கும் குழந்தைகளுக்கே தனித்தன்மை வெளிப்பட வாய்ப்புத் தருவதுடன்  அவர்களை ’ஒரேமாதிரி’ வளர விடுவது தவறு என்கிற போது ஒரு நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான கல்விக் கொள்கை என்பது எப்படி சரியாகும்?  
அந்தந்த மாநில,  அளவில் மட்டும் அல்ல அந்தந்த பகுதி (வட்டார) அளவில்  மொழி, புவியியல், வரலாறு, அறிவியல் பாடங்கள் அமைக்கபட்டு அதை அறிந்த பின்பே பிற பகுதி பற்றி அறிய மாணவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தலே  அவர்களுக்குக் கற்றலில் ஆர்வத்தை கொடுப்பதுடன் பயனையும்  விளைவிக்கும். ஆனால் தேசமெங்கும் ஒரே கல்வி என்கிறபோது அந்தந்தப்பகுதி பற்றிய கற்றலுக்கு வாய்ப்பு குறைவாகப் போகும்  அல்லது இல்லாமல் போகும்.  அப்போது எதையெதையோ கற்ற மாணவர்கள் தனக்கு உரியதை,  உகந்ததை,  உதவுவதை கற்காமல் நிற்கும் அவல நிலையையே பெற்று நிற்பர். 
குழந்தைகளுக்கு எதிராக...
கல்வியில் மிகச்சிறந்த நாடு எனப்போற்றப் படும் பின்லாந்து நாடு உட்பட பல வளர்ந்த நாடுகளிலும் குழந்தைகள் ஏழு வயது முடிந்த பின்னரே பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள்.  ஏனெனில் அதுவரை குழந்தைகள் தத்தம் குடும்பத்திலிருந்தும் பல கற்று வளர முடியும் என்று நம்புவதுடன் பள்ளி என்கிற அமைப்பு குழந்தைகளை எந்த விதத்திலும் அவர்தம் இயல்புக்கு இடையூறாக இருந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் கருத்தாக இருக்கிறார்கள்.   ஆனால் மூன்று மாதக் குழந்தையை  நடக்க வைக்க முயலாத நாம் மூன்று வயது முடியும் முன்பே அதன் மூளை மட்டும் முத்தி விடவேண்டும் என்று முண்டியடித்து முயற்சித்துக் கொண்டிருப்பது முறையற்றது என்பதை உணராமல் செய்து கொண்டு இருந்த நமது பாவத்தை,  முட்டாள் தனத்தை இந்த கொள்கை வரைவு முழுமையாக அங்கீகரித்து சட்டப்பூர்வமாக்கி இருக்கிறது. 
ஐந்து வயது பூர்த்தியானவருக்கே பள்ளியில் இடம் என்றிருக்கும் இன்றைய நிலையை மாற்றி மூன்று வயது  முதல் பள்ளிக் கல்வியை பெற வழிவகுக்கிறது.  மூன்று வயதில் பெறும் முன் பருவக் கல்வியிலிருந்து இரண்டாம் வகுப்பு வரை  ஐந்து வருடங்களுக்கு ஆரம்பப் பள்ளிக் கல்வி பெற வலியுறுத்துகிறது.  குழந்தைகளை, அவர்தம் இயல்பைப் புரிந்து கொள்ளாத வன்மத்தையே இது காட்டுறது.  முதல் ஐந்து வயது வரை ஒரு குழந்தை வளர்ச்சி பெற வேண்டும்.  பின்புதான் கல்வி பெற வேண்டும்.  ஆனால் மனித வாழ்வின் மகத்தான பருவமான குழந்தைப் பருவத்தையே காயப்படுத்தும் விதமாக மூன்று வயதிலேயே ஆரம்பக் கல்வி என்பது அசூரத்தனமானது.  
சமூகத்திற்கு எதிராக....
"முழு ஆளுமை பெற்ற மனிதனை உருவாக்கவே கல்வி" என்று இதற்கு முன்னர் கல்விக் கொள்கை வகுத்த கோத்தாரி போன்றவர்களின் கொள்கைகளைக் குறித்து இந்த வரைவு கவனம் கொள்ளவே இல்லை. மாறாகக் கல்வி என்பதே வேலையைப் பெறுவதற்கும்  பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கும் என்கிற அளவில்தான் குறுகிப் பார்க்கத் தூண்டுகிறது. 
மழலையர் கல்வி குறித்துப் பேசுகின்ற போது,   இந்த வரைவின் மூன்றாவது பத்தியில், "மழலையர் கல்வி என்பது வருமானம்,  குறைந்த விகித வேலைவாய்ப்பின்மை, குற்றம், மற்றும் கைது ஆகியவற்றோடு வலுவாக பிணைக்கப் பட்டுள்ளது" என்று குறித்துள்ளதைக் காண்கின்ற எவரும் இக்கொள்கை வரைவின் குறுகிய பார்வையை பளிச்சென்று அறிந்து கொள்ள முடியும். ஒரு குழந்தை முழு மனிதனாக வளர்வதற்குத்  தேவைப்படுகின்ற உடல் வளர்ச்சி, உள்ள வளர்ச்சி, உணர்வு வளர்ச்சி, அறிவு வளர்ச்சி,  ஆன்மிக வளர்ச்சி,  கலாச்சார வளர்ச்சி,  பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சி முதலிய எட்டுவகை வளர்ச்சிக்கு வேண்டிய விசயத்தை,  அறிவை,  ஞானத்தைக் கொடுப்பதே கல்வி என்கிற அடிப்படைச் சிந்தனை கூட இல்லாமல் பொருளாதார வளர்ச்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு குறுகிய பார்வையில் இக்கொள்கை வரைவு அமைக்கப்பட்டுள்ளது.  இதனால் மண்டை வீங்கிய, இருதயம் சிறுத்த   எடுபிடி ஆட்கள் வேண்டுமானால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக உருவாகலாம். ஆனால் ஒரு நல்ல சமூகத்திற்குத் தேவையான முழு மனிதர்களை உருவாக்க முடியாது. ஒரு நல்ல கல்வியால் மட்டுமே நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். ஏனெனில் சமூக மாற்றத்திற்கான கருவியே கல்வி. அக்கல்வி சரியாக அமையும்போதுதான்
சமூகமும் சரியாக அமையும்.  
மேலும் ஒரு சமூகம் விழிப்புணர்வு உடையதாக, தற்சார்பு வளர்ச்சி கொண்டதாக அமைவதற்கும் கல்வி கூர்மையானப் பங்காற்றுகிறது.  மறுபுறம்,  கருத்தியல் மேலாண்மையைச் செலுத்தி ஒரு சமூகத்தை அடிமைப்படுத்துவதற்கும் அக்கல்விமுறை முகாமையான  கருவியாகச் செயல்படுகிறது. பழைய பார்ப்பனியக் குருகுல முறையின் கூறுகளுடன் மெக்காலே திட்டமும் இணைந்த இன்றைய நடப்பு கல்வி முறைக்கு மாற்றாக எவ்வித அடையாளத்தையும் காட்டாத இந்த கொள்கை வரைவு இருக்கும் அசிங்கத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாகத் தூக்கிப்பிடிப்பதையே காண முடிகிறது.  மாணவர்களின் சுய சிந்தனையை வளர்த்து ஆளுமையை உயர்த்துவதற்கு உரிய வழிகளோ,  தொடக்கக் கல்வியிலிருந்து கல்லூரிக்  கல்வி வரை மண்ணுக்கேற்ற கல்வித்திட்டமோ இந்த வரைவில் காணப்படவில்லை.   சமூகத்தின் அவலங்களான தீண்டாமை,  சாதி,  பெண்ணடிமை,  ஆணாதிக்கம், சமத்துவமின்மை,  போன்றவைகளை நீக்குவதற்கு உரிய எந்த திட்டமும் இந்த வரைவில் இல்லை.  எனவே முழுமையான மனிதன்,  சமூகம் அமைவது குறித்து அக்கறை காட்டாது கல்வியின் நோக்கத்தையே குறுக்கிப் பார்க்கும் இந்த வரைவு நல்ல சமூகம் உருவாவதற்கு எதிராகவே இருக்கிறது. 
ஜனநாயகத்திற்கு எதிராக....
மாநில அதிகாரத்தின் கீழ் இருந்த கல்வித்
துறை இந்திராகாந்தியின் அவசர நிலையின்போது இந்திய அரசுக்கும், மாநில அரசுக்குமான பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டது.  ஆனால் இப்போது நரேந்திர மோடி ஆட்சியில் கல்வித்துறை முழுவதையும் இந்திய அரசின் முற்றதிகாரத்திற்குக் கொண்டு செல்ல இந்த வரைவு உதவுகிறது. அரசமைப்புச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் செய்யாமலேயே நடைமுறையில் இந்திய அரசின் நடுவன் அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு செல்ல கஸ்தூரி ரங்கன் கல்விக்கொள்கை வரைவு அத்தியாயம் 23 முழுவதும் வலியுறுத்துகிறது.  
மழலையர் கல்வியிலிருந்து உயராய்வுக் கல்வி வரை கல்வித்துறையின் அனைத்து நிலைகளிலும் கொள்கைகள், சட்ட திட்டங்கள் ஆகியவற்றை வகுக்க அமைக்கப்படும் தேசியக் கல்வி ஆணையம் முழு அதிகாரம் பெற்று நிற்க,  மாநில அரசுகள் அதன் கொள்கையை செயல்
படுத்துவதை தவிர அவற்றுக்கு வேறு பணிகள் இல்லை என்று அத்தியாயம் 23  தெளிவு படுத்துகிறது. 
அதிகாரப் பகிர்வே  ஜனநாயகப் பண்பின்  அடிப்படைக்கூறாக இருக்க இந்த அதிகாரக் குவிப்பு சர்வாதிகார நடவடிக்கைகளுக்கே அச்சாரமாய் அமையும்.  அத்துடன் காலதாமதம்,  இலஞ்சம், ஊழல் போன்றவற்றைப் போற்றி வளர்க்கும்.  
இப்படியாக,  இயற்கை,  குழந்தைகள்,  சமுதாயம்,  ஜனநாயகம் என பல நிலைகளுக்கும் எதிராக விளங்கும் இந்த தேசியக் கல்விக்கொள்கை வரைவை தமிழ்நாட்டின் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள்,  அவர்தம் சங்கங்கள்,  மாணவர் அமைப்புகள், அவர்தம் பெற்றோர்கள்,  கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள், என அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குரலில்" கஸ்தூரி ரங்கன் குழுவின் கல்விக்கொள்கை வரைவு - 2019 ஐ திரும்பப் பெறு,  கல்வியை மாநில அதிகாரத்தின் கீழ் கொண்டு வா" என ஒருமித்து முழங்கி கல்வியை அதன் மீதான அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.  

Comment